ஆரவாரம் ஏதுமின்றி…. வாராவாரம் மரம் நடுதல்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரம். அங்கு வசித்து வருபவர் ஸ்ரீதர்பாபு. தொழில் ரீதியாக அட்வகேட். சமூக நல ஆர்வலர். அந்தப் பகுதியின் சமூக நலச் செயற்பாட்டாளர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவைகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். 1997ல் அவர் தொடங்கியது தான் நேதாஜி சமூக நல அமைப்பு. நண்பர்கள் பலரும் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கம். பின்னர் அதனுடன் 2௦11ல் நேதாஜி மர வங்கி எனும் பெயரில் மரக்கன்றுகள் வைத்து நடுகின்ற செயலையும் இணைத்துக் கொண்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று. சமீபத்திய 29.௦6.2௦25 ஜூன் மாதம் கடைசி ஞாயிறு வரைக்குமாக, 533வது வாரமாகத் தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு வைத்து மரம் நடுதலில் ஆரவாரம் ஏதுமின்றி அவர்கள் இயங்கி வருகின்றனர்.
நேதாஜி சமூக நல அமைப்பு சார்ந்து பொன்னேரி பகுதிகளில் என்னென்ன சமூக சேவைகள் செய்துள்ளீர்கள்?
பள்ளி மாணவர்கள் மத்தியில் முன்னாள் இராணுவ வீரர்களைப் பேச வைத்து ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை குறித்தெல்லாம் விழிப்புணர்வு புகட்டியுள்ளோம். பொன்னேரி மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வப்போது நிறைய தடவைகள் ரத்த தான முகாம்கள் நடத்தி உள்ளோம். இதுவரை சுமார் 3,2௦௦ யூனிட் ரத்தம் தானமாகப் பெற்று, மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கிராமங்களில் ரத்த தான முகாம்களில் குறிப்பிட்ட அளவுக்குப் பெண்கள் தாமாகவே முன் வந்து ரத்த தானம் தந்துள்ளனர். மிக அதிகளவில் ரத்த தான முகாம் நடத்தி, மிக அளவில் ரத்த தானம் பெற்றுத் தந்த வகையில் அதனைப் பாராட்டி, 2௦௦9ல் கவர்னர் மாளிகையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா முன்னிலையில் எங்கள் அமைப்புக்கு விருதுகள் தரப்பட்டுள்ளன.
பின்னர் எப்போது இந்த வாராவாரம் மரம் நடுதலுக்குத் தாவி வந்தீர்கள்?
2௦11ல் நேதாஜி மர வங்கி என்பதனைத் தொடங்கினோம். அதில் மேலும் நிறைய நண்பர்கள், நிறைய அன்பர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை அத்துடன் இணைத்துக் கொண்டனர். அப்போது தான் வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மரக் கன்றுகள் நட்டு வைத்து நாமளே மரம் வளர்ப்போம் என்கிற எண்ணமே எங்களுக்குள் துளிர் விட்டது. அப்போதிருந்து இதனைத் தொய்வின்றி செய்து வருகிறோம்.
மரக் கன்றுகள் வைத்து நடுவது சரி. அதனைத் தொடர்ந்து மரம் வளர்ப்பதும் அவைகளைக் கண்காணிப்பதும் நடைமுறைக்கு சரியாக வருமா என்ன?
மரக் கன்றுகள் நடுவதுடன் நம் வேலை நம் கடமை முடிந்து விட்டதாக நாங்கள் சும்மா இருந்து விடுவதில்லை. கண்காணிப்பதும் வளர்ப்பதிலும் தான் எங்கள் சேவை நிறைவு பெறும். சாலையோரம், கோயிலில், குளங்களில், ஏரிக்கரைகளில் அல்லது எந்த இடங்களில் நாங்கள் மரக் கன்றுகள் நட்டாலும், முதலில் அருகே வசிப்பவர்களை துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஆடு மாடுகள் மேய்ந்திடாதவாறு மரக் கன்றினைச் சுற்றிலும் வட்ட வடிவக் கம்பி வேலிகள் பொருத்தி வைத்து விடுவோம். மரக் கன்று நன்கு வளர்ந்து வரும் வரை அங்கே அருகே வசிப்பவர்களிடம் தினசரி தண்ணீர் விடுங்கள் ப்ளீஸ் என்றும் சொல்லுவோம். மேலும் எங்கள் நேதாஜி மர வங்கி அன்பர்கள் பலரும் அவரவர் பணி நிமித்தமாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் தங்களது வாகனங்களில் அவ்வப்போது பயணித்து வருபவர்கள் தான். அவர்களது பார்வையும் அந்த மரக் கன்றுகள் மீது பட்டுக் கொண்டே இருக்கும்.
அருகே வசிப்பவர்கள் பொறுப்பாகக் கவனிக்கவில்லை. தண்ணீர் இல்லாமல் மரக் கன்றுகள் வாடிப் போகின்றன. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அதனையும் கவனத்தில் கொண்டு எங்கள் அமைப்பின் அன்பர்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, அந்த மரக் கன்றுகள் வாடிப் போகாமல் செழித்து வளர்ந்திடத் தினசரி தண்ணீர் ஊற்றிடச் செய்து காப்போம். கோடையில் சில நேரங்களில் பணம் செலவு செய்து மினி தண்ணீர் லாரிகளில் தண்ணீர்ச் சுமந்து கொண்டு சென்று, மரக் கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றியும் வந்துள்ளோம். நாங்கள் நடுகின்ற மரக் கன்றுகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே நன்றாக வளர்த்து விடுவதையும் எங்களின் முக்கிய நோக்கமாகவும் கொண்டுள்ளோம்.
இதுவரை பொன்னேரி உட்பட வேறு என்னென்ன ஊர்களில், என்னென்ன மரக் கன்றுகள் நட்டு வைத்து மரம் வளர்த்துள்ளீர்கள்?
பொன்னேரி, மீஞ்சூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி மேலும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரக் கன்று நடுதலைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். பூவரசு, வேம்பு, புங்கன், சரக்கொன்றை, நீர்மருது, இலுப்பை போன்ற மரக் கன்றுகளும் கோயில்களில் வில்வம் மரக் கன்றுகளும் நடுதல் செய்து வருகிறோம்.
உத்தேசமாக இதுவரை நாற்பத்தி இரண்டாயிரம் மரக் கன்றுகள் நட்டு வைத்து வளர்த்துள்ளோம். எங்கள் அமைப்பில் உள்ளவர்களின் ஞாயிறு விடுமுறையில் அரை நாளாவது இதற்கென ஒதுக்கி விடுவோம். இது எல்லாமே என் தனி ஒரு நபரால் மட்டுமே சாத்தியம் இல்லை. எங்கள் நேதாஜி சமூக நல அமைப்பு, நேதாஜி மர வங்கியுடன் இணைந்து சேவை செய்து வருகின்ற ஐம்பது அறுபத்துக்கும் மேற்பட்ட அன்பர்கள் ஒத்துழைப்புடன் தான் சாத்தியப்பட்டு நிகழ்ந்து வருகிறது. சமீபத்திய 29.௦6.2௦25 ஞாயிற்றுக்கிழமை உட்பட இது எங்களின் 533வது வாரம் ஆகும்.” என்கிறார் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தில் வசித்து வருபவரான சமூக நல ஆர்வலர் அட்வகேட் ஸ்ரீதார்பாபு.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.