சமையல் குறிப்பு- நெத்திலி மீன் தொக்கு!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி நெத்திலி மீன் தொக்கு. குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்து இருப்பார்கள் ஆனால் அதனை தொக்கு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது பலருக்கு தெரியாது இந்த நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் 300 கிராம், எண்ணெய் தேவையான அளவு, வெந்தயம் ஒரு ஸ்பூன், பூண்டு 3 பற்கள் (பொடியாக நறுக்கியது), மிளகுத்தூள் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளிச்சாறு 4 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கைப்பிடி.
அரைப்பதற்கு
சின்ன வெங்காயம் 20, தக்காளி 2(பொடியாக நறுக்கியது), பூண்டு 10 பற்கள், மிளகு 1 ஸ்பூன் பச்சை மிளகாய் 2.
செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளறி எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பிறகு, அதில் புளி சாற்றினை ஊற்றி கிளறி குழம்பானது சற்று மசாலா போன்று கெட்டியாக வரும்போது அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி 5 முதல் 8 நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். மீன் நன்கு மென்மையாக வந்ததும் அதில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை தூவி குறைவான தீயில் பிரட்டி என்னை தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் நெத்திலி மீன் தொக்கு சுவைக்க தயார். இதனை சூடான சாதத்தில் வைத்து சாப்பிடலாம்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.