அன்னக்காவடிப் பத்திரிகைகளை கண்டு அஞ்ச மாட்டோம் !
இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன். பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். காந்தியே பத்திரிக்கைக்காரனிடம் கெஞ்சியது எனக்குத் தெரியும்.
அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் – திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன. திலகர் செத்த பிறகு கூட காந்தியை எதிர்த்துக் கொண்டே வந்தார்கள். இந்த இரு கட்சிகளில் சென்னையில் ஒரு கட்சிக்கு இராஜாஜி தலைவர்; மற்றொரு கட்சிக்கு கஸ்தூரி ரெங்க அய்யங்கார் தலைவர்!
கஸ்தூரி ரெங்க அய்யங்கார் முதலிய பார்ப்பனர்களுக்கு இராஜாஜியைப் பிடிக்காது. அந்தக் கோபத்தில் காந்தியையே தாக்க ஆரம்பித்து விட்டனர். ‘இந்து’ பத்திரிகை போன்றது காந்திக்கு விரோதமாக இருந்தது கண்டு காந்தியே பயந்து கஸ்தூரி ரெங்க அய்யரையே அணுகிக் கேட்க வேண்டியதாகி விட்டது. நான் காந்தி சீடனாக இருந்த காரணத்தினால் இவை எல்லாம் நன்கு தெரியும். நான் மட்டும் காங்கிரசில் இருந்த காலம் கொண்டு பத்திரிகைகளைக் கண்டித்து வருகின்றேன்.
காந்தியார் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சரணாகதி அடைந்து அவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையே விட்டார். “எனக்குச் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு. நான் ஒரு இந்து. வருணா சிரமத்தில் நம்பிக்கை உடையவன். மோட்ச நரகத்திலும் முன்பின் ஜென்மத்திலும் (பிறப்பிலும்) நம்பிக்கை உடையவன் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு கஸ்தூரி ரெங்க அய்யங்காரிடமும் தூது அனுப்பிச் சிநேகம் பண்ணிக் கொண்டார். பிறகு தான் பத்திரிக்கைகள் ஆதரிக்கத் தொடங்கின. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் பத்திரிகைக்காரர்கள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.
நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல், எங்களைப் பற்றிக் கட்டுப்பாட்டாகவும், தவறாகவும், புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே புளுகுவான்.
தோழர்களே! நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்றேன். வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள்.
பொப்பிலிராஜா ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக இருந்தாலும் கூடப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டு இருந்தார். கஸ்தூரி ரெங்க அய்யங்காருக்கு உடம்புக்கு அசவுக்கியம் என்றால் போய்ப் பார்த்து வருவார். இது அன்பால் அல்ல- தங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்ற பயத்தால் ஆகும்.
நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10,000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே! நான் மக்களிடம் பேசும் போது கூட, “நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள்” என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.
இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும், தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை. எங்கள் ஆள்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்பவர்களே ஒழிய, பொது வாழ்வு பேரால் வாழ்பவர்கள் அல்லர்.
இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்? ”
(செப்-1961 ,மதுக்கூர் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள்)
Comments are closed, but trackbacks and pingbacks are open.