பிள்ளைகள் இருந்தும் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம் ?
எனக்கு என்ன??? வயசானா முதியோர் இல்லத்துக்கு போயிருவேன்!!! மறந்தும் கூட சொல்லி விடாதீர்கள்……??
முதன் முதலில் 5 வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த 75 க்கு மேல் ஆன தனியாக வசிக்கக்கூடிய ஓரளவு வசதியான பெண்மணி ஏதாவது ஹோமில் சேர்த்து விடு…என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் எங்கள் ஏரியாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றேன்.
காம்பவுண்டுடன் கூடிய கீழும் மேலுமான வீடு… வாடகைக்கு எடுத்து இந்த ஹோம் நடத்துகிறார். வெளியில கார் பார்க்கிங்கில் டேபிள் சேர் போட்டு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவர் மேனேஜராம்.. என்னிடம் முழு விவரமும் கேட்டுக்கொண்டு அங்கு இருக்கக்கூடிய நோட்டில் போன் நம்பருடன் சேர்த்து வந்த நோக்கம் எழுத சொல்கிறார்.
பிறகு உள்ளே கூட்டிச் சென்றார். ஒரு பெரிய ஹால்.அதில் சிங்கிள் கட்டில் நான்கு போடப்பட்டு இருந்தது. 10×12 அளவு பெட்ரூமில் மூன்று கட்டில் போடப்பட்டிருந்தது. நடுவில் உள்ள ஹாலில் சாப்பிடும் டேபிள் இருந்தது.
கீழ்தளம் முழுவதும் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.வயதானவர்கள் அந்த ஹாலில் உட்கார்ந்து “டிவி” பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாடி ஏறிச் சென்றோம்… மேலே 3 பெட்ரூம்.,ஒரு ஹால். மேல்தளம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கட்டிலில் மட்டும் ஆள் இல்லை. மீதம் அனைத்து கட்டில்களும் நிரம்பி இருக்கிறது. சமையலுக்கும் வெளி வேலைக்கும் இரண்டு பெண்மணிகள் இருக்கிறார்கள்.
ஹாலில் தங்குபவர்களுக்கு 15,000/- பெட்ரூமில் தங்குவதற்கு 18 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கிறார்கள். உதவியாளர்கள் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு தனி.
சில பெட்ரூமை திறந்தவுடன் மூத்திர வாடை முகத்தில் அறைகிறது……
எல்லா ஜன்னல்களும் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது…..முதியோர்களின் துணிகள் அங்கங்கே காய்ந்து கொண்டு இருக்கிறது.,அந்த ஈர வாடையும் சேர்ந்து ஒரு விதமான புழுக்கம் அந்த வீட்டிற்குள் சுத்தி சுத்தி வருகிறது.
சில இல்லங்களில் சாப்பிட்டும் இருக்கிறேன்.. காய்ந்து போன தோசையும், உலர்ந்த இட்லியும், தொண்டையில் இறங்க மறுக்கும் சாம்பாருமாய்.. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வைக்கப்பட்டு விடுகிறது.
நிறைய பேர் முழு நினைவுடன் அதிகம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
கை நிறைய காசு வைத்து இருக்கிறார்கள்….. உடம்பில் தெம்பு இல்லை…மனம் நிறைய வருத்தங்கள்…. தொண்டை அடைக்கும் துக்கம்… கடந்து வந்த வாழ்க்கையை நினைத்து, நினைத்து ஏக்கம்…..
ரொம்ப கொடுமையா இருக்கும்.. இந்த முதியோர்கள் கிட்ட பேசும் பொழுது….. அவங்களால தன் குழந்தைகளை விட்டுக் கொடுக்கவும் முடியாம…. இப்ப இருக்கிற நிலைமையை ஏத்துக்கவும் முடியாம…
மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும்..!!???. பிள்ளைகள் இருக்கும் பொழுது பெற்றோர்கள் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம்??!!இது கொஞ்சம் கடுமையான வார்த்தை தான்… வேறு வழி இல்லை. கசப்பான நிஜம் இதுதான்.
வாழ்தல் எவ்வளவு வரமோ அதைவிட….”அமைதியான ஏக்கம் இல்லா மரணம்”.. அதுவும் ஒரு கொடுப்பினை தான்.
இதில் இருக்கக்கூடிய முதியோர்களுடைய பிள்ளைகள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.. சிலருக்கு உள்ளூரில் இருக்கும் அவர்கள் பிள்ளைகளே இங்கே சேர்த்துவிட்டு போயிருக்கிறார்கள்.
பெத்தவங்களுக்கு ஒரு வாய் சோறு கொடுக்க மனம் இல்லாத பிள்ளைகள் தமிழ்நாட்டில் நிறைந்து விட்டார்களா….முதியோர் இல்லங்கள் எல்லாம் இப்படி நிறைந்து போய் கிடக்கிறது என்று வேதனையாய் இருக்கும்..
அதற்குப் பிறகு நிறைய இந்த மாதிரி முதியோர் இல்லங்கள்….. சில முதியோர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் என்று., இப்ப சென்னையில் பரவலாக கட்டிவிட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களெல்லாம் கார் அனுப்பியே கூப்பிடுவார்கள். போய் பார்த்திருக்கிறேன். இதுவும் ஒரு வகை வியாபாரம் தான்.
பணத்துடன் தனியாக இருக்கக்கூடிய முதியோர்களை குறி வைத்து மிகப்பெரும் ஒரு வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. முதியோர் இல்லங்களாகவும்… சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டி ஹோம்களாகவும்….
முதியவர்களின் பயம் சிலரால் இப்பொழுது பணமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஓரளவு பரவாயில்லை என்ற அளவு சில முதியோர் இல்லங்களும் இருக்கிறது.அங்கே இருக்கக்கூடிய மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும்.ஆறுதலாகும் இருப்பதை பார்க்கிறேன். ஆனால் அங்கே மிகப் பெரும் பணம்.
பிணி,மூப்பு, மரணம் இது மூன்றும் கொடுமை தான்… மரணமாவது பரவாயில்லை…மரணத்திற்கு பிறகு நமக்கு எதுவும் தெரியப் போவதில்லை…
பிணி கூட ஒரு சிலருக்கு தான் வரும்…..ஆனால் எல்லோருக்கும் வரும் மூப்பு…??!!
“சித்தார்த்தனா இருந்தவர் புத்தரா ஏன் மாறினார்”??…. இந்த மாதிரி முதியோர் இல்லங்களுக்கு போகும் பொழுது புரியும்.
நூறு கோவில் தெய்வம் இல்லை
தாயும் தந்தையும் போதுமே…
இரண்டு வாழ்கை உள்ளதா..
இதயம் நமக்கு சின்னதா…
பூமியிலே கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் சேமித்து வைப்போம் நெஞ்சிக்குள்ள..
எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள்.
— Amma Shagasraa