ஆன்லைன் சூதாட்டம் ! – அனுபவங்கள் ஆயிரம்(14)
இன்றைய டிஜிட்டல் உலகில், கைபேசியை திறந்தாலே “வெற்றி உங்களை காத்திருக்கிறது!” என்ற வாக்குறுதிகளுடன் ஒளிரும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் நிறைந்துள்ளன. சில நிமிடங்களில் பணம் இரட்டிப்பு, செல்வம் சேரும் என்கிற பொய் கனவில் பலர் விழுந்து தங்கள் வாழ்க்கையே இழக்கின்றனர்.
சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பெரும் கடனில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.
ஒரு கிளிக்கில் தொடங்கும் இந்த விளையாட்டு, மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினை, நம்பிக்கை இழப்பு என பல உயிர்களை விழுங்கி வருகிறது.
என் பக்கத்து வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.
ஒரு நாள் எங்கள் பக்கத்து வீட்லில் ஒரே அலறல் சத்தம்…
என்ன விபரீதம் என்று புரியாமல் எங்கள் வீட்டில் இருந்த அனைவரும் ஓடினோம்.
அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூடினர்.
ஒரு தாய் அலறிக் கொண்டே “என்ன காரியம் பண்ண நினைச்சே… நீ போயிட்டா நாங்க என்ன ஆவோம்… உன் பொண்டாட்டி, குழந்தைகளை நினைச்சியா?” பக்கத்தில் மனைவி பீதியுடன் அழுகை,, அந்த ஆண்மகன் குமுறி குமுறி அழுகிறான்..
என்ன ஆனது என்று கேட்க அவர்கள் சொன்ன கதை….
அந்த வீட்டில் இருக்கும் ஆண்மகன் ஆன்லைன் ரம்மியில் அடிமையாகி, பத்து லட்சம் வரை கடன் வாங்கியிருந்தான்.
கடனளித்தவர்கள் வற்புறுத்தத் தொடங்கியதால் தப்பிக்க வழியில்லாமல், தன் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் போகத் தயார் ஆனான்.
அப்போது ரூமின் டாய்லெட்டில் இருந்த மனைவி வெளியே வந்ததும் அதிர்ச்சியில் அலறிக்கொண்டு கதவை திறந்து கத்தி , வீட்டு பெரியவர்கள் வந்து அவனை காப்பாற்றினார்கள்.
அந்த ஒரு நிமிடம் தான் அவன் உயிரை காப்பாற்றியது.
அந்த வீட்டில் இன்றும் அந்த பீதி அடங்கவில்லை…
இவர்களைப்போல் எத்தனை குடும்பங்கள் இன்று மௌன வலியில் தவிக்கின்றன?
இது ஒரு வீடு மட்டுமல்ல நம் சமூகம் முழுவதும் பரவி வரும் ஒரு நச்சு நிழல்.
திருவள்ளுவர் அன்றே எச்சரித்தார்.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் ”
இதன் விளக்கம் ஒருவர் சூதாடும் இடத்திலேயே தமது காலத்தை கழித்தால் அது அவரின் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களையும் நற்பண்புகளையும் இழக்க நேரிடும்..
இதே சூதாட்டம் மகாபாரதத்திலும் ஒரு பெரும் அழிவுக்குக் காரணமாக இருந்தது.
துரியோதனன் தந்திரத்தால் யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சிறிய வெற்றி, பின்னர் தோல்வி, அதன் பின் அவமானம். இறுதியில் அவர் தன் ராஜ்யத்தை, தம்பிகளை, தன் மனைவியையும் இழந்தார்.
ஒரு சூதாட்டம் எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி.
சமூக வலைதளங்களிலும் செய்தி தலைப்புகளிலும் ஒரே மாதிரி நிகழ்வுகள், “ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்து தற்கொலை.”
இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள், மாணவர்கள் யாரும் விதிவிலக்கல்ல…
ஒரு விளையாட்டு என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் இத்தகைய செய்திகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.
யுதிஷ்டிரனை விழுங்கிய அதே சூதாட்டம் இன்று நம் இளைஞர்களை விழுங்க விடக்கூடாது.
ஒரு கிளிக்கில் தொடங்கும் ஆசை ஒரு குடும்பத்தின் முடிவாக மாறக் கூடாது.
மகாபாரதத்தின் பாடம் இன்றும் உயிர்ப்புடன் நம்மை எச்சரிக்கிறது. “சூதாட்டம் வெற்றி அல்ல; அது ஒரு மாயை, ஒரு அழிவு.”
சமூகமும், அரசும், குடும்பங்களும் சேர்ந்து இதை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.
ஒரு நிமிட விளையாட்டு என்ற பெயரில் ஒரு உயிரை இழக்க வேண்டாம்
உண்மையான வெற்றி, நம்மை காப்பாற்றிக் கொள்வதில்தான்.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.