அங்குசம் செய்தி எதிரொலி ! பாலாற்று மணல் திருட்டு புகாரில் காண்டிராக்டர் மீது வழக்கு ! எஸ்.ஐ. சஸ்பெண்ட் !
அங்குசம் இணையத்தில் கடந்த ஏப்ரல் 21 -ம் தேதி மற்றும் ஏப்ரல் 1 -15 தேதியிட்ட அங்குசம் அச்சு இதழிலும், ” பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐயில் அம்பலம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் மற்றும் ஈடி-எக்கலாசுபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் பழுதானதால், அதற்கு மாற்றாக அதன் அருகில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கரும்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 26 இலட்சம் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாலம் கட்டுவதற்காக, ஆற்றில் தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆற்று மணலை சட்டவிரோதமான முறையில் கடத்தினார்கள் மேலும் பாலம் கட்டுமான பணிக்குத் தேவையான மணலையும் அதிலிருந்தே எடுத்துக் கொண்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. அதுவும், ஆற்று மணலை சாக்கு மூட்டைகளில் அடைத்து, பாலத்தின் தாங்கு திறனை சோதிப்பதாக சொல்லி பாலத்தின் மீது அடுக்கி வைத்து யாரும் இல்லாத நேரம் பார்த்து அதனை கடத்தி செல்வதும் பின்னர் மீண்டும் பழையபடி சாக்கு மூட்டைகளில் மணலை நிரப்பி பாலத்தின் மீது அடுக்குவதும் என்பதாக நூதனமான முறையில் இந்த மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தோம்.
குறிப்பாக, பாலம் கட்டுவதற்கான மணல் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, “நீங்கள் கூறும் பாலத்திற்கு எங்கிருந்து மணல் வாங்கப்பட்டது தெரியவில்லை ” என அதிகாரிகள் பதிலளித்திருந்தனர். மேலும், அப்பகுதி மக்களும் இந்த மணல் திருட்டு தொடர்பாக தாசில்தார் தொடங்கி, ஆர்.டி.ஓ., கலெக்டர் வரை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நமது செய்தியில் பதிவு செய்திருந்தோம்.

அங்குசம் செய்தியின் எதிரொலியாக அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வருவாய்த்துறை தரப்பில் புகார் அளித்தும் மணல் திருட்டு தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றதையடுத்து, மே-14 அன்று இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேற்படி, கட்டுமான நிறுவனம் பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் , டிப்பர் லாரி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் , பாலம் கட்டுமான ஒப்பந்ததார் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தாமல், ஒப்பந்ததாரர் வேலுச்சாமியை காப்பாற்றும் நோக்கில் அவருக்கு சாதகமாக செயல்பட்ட அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணனை சஸ்பெண்ட் செய்து அதிரடிகாட்டியிருக்கிறார், எஸ்.பி. ஸ்ரேயா குப்தா.

” பாலம் கட்டுவதாக காட்டிக் கொண்டு பெருமளவு மணல் அள்ளப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு இவர்கள் மணலை அள்ளியிருக்கிறார்கள் என்பதை, சென்னை ஐஐடி , அண்ணா பல்கலைக்கழக மதிப்பீட்டு குழுவின் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் காண்ட்ராக்ட் காரருக்கு துணை போன வருவாய்த்துறை, போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு உள்ளூர் அரசியல் புள்ளிகள் வரையில் அனைவர் மீதும் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டுத்தனமாக மணல் அள்ளியதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை கணக்கிட்டு அந்த பணத்தை இந்த கூட்டுக்கொள்ளையில் தொடர்புடையவர்களிடமிருந்து வசூலித்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.” என்கிறார், இந்த விவகாரத்தை ஆர்.டி.ஐ. வழியே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய அம்பலூர் அசோகன்.
— மணிகண்டன்.