சமையல் குறிப்பு: பன்னீர் ராகி நூடுல்ஸ்!
மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியைப் போக்க அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? பொதுவாக குழந்தைகள் என்றாலே நூடுல்ஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் நான் சொல்வது போல் பன்னீர் ராகி நூடுல்ஸ் செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவையும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
ராகி நூடுல்ஸ் 200 கிராம், கேரட் 2, பீன்ஸ் 5, முட்டைக்கோஸ் 50 கிராம், குடைமிளகாய் 1, தக்காளி ஒன்று நறுக்கியது, பெரிய வெங்காயம் 1, பன்னீர் 100 கிராம், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தேவையான அளவு, நூடுல்ஸ் மசாலா ஒரு பாக்கெட், கறி மசாலா ஒரு ஸ்பூன், கொத்தமல்லி இலை சிறிதளவு.
செய்முறை:-
முதலில் ஒரு வாணலியில் தேவையான அளவு தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து ராகி நூடுல்ஸை கொதிக்க விடவும், பின் ஐந்து நிமிடம் கொதித்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி நூடுல்ஸை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் தக்காளி சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும். அதன் பின் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும், இவை வெந்ததும் அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகள் சிறிதளவு உப்பு நூடுல்ஸ் மசாலா, கறி மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு கிளறவும். அதன் பின் வேக வைத்த ராகி நூடுல்ஸை சேர்த்து மசாலாக்கள் நூடுல்ஸில் இறங்கும் வரை நன்கு கிளறவும். நூடுல்ஸுடன் மசாலா மற்றும் காய்கள் ஒன்று சேர்ந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். இப்பொழுது சூடான சுவையான ராகி பனீர் நூடுல்ஸ் தயார். சூடாக பரிமாறவும்.
— பா. பத்மாவதி.