பார்சிக்களின் நெருப்புக் கோயில்: ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்! ஆன்மீக பயணம்-27
இந்தியாவில் வசிக்கும் ஜொராஸ்ட்ரர்கள் ‘பார்சி’க்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜொராஸ்ட்ரர்கள் பாரசீகத்தைச் சார்ந்தவர்கள். பாரசீகம் (பெர்சியா) என்பது இன்றைய ஈரான் நாடு. அரசியல் காரணங்களால் உலகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தவர்கள் இந்தியாவுக்கும் வந்தார்கள். பார்சிக்களின் மதமான ஜொராஸ்ட்ரிய மதம் பாரசீகத்தின், `ஜொராஸ்ட்ரர்’ எனும் ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. பாரசீக மன்னன் விஷ்டாஸ்பா என்பவன் ஜொராஸ்ட்ரரின் தத்துவத்தை ஏற்று ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றினான். பிறகு, இவனே ஜொராஸ்ட்ரர்களுக்குப் பாதுகாவலனாகவும் நண்பனாகவும் விளங்கினான். உலகில் ஒரே கடவுள்தான் இருக்கிறார்’ என்கிறார்கள் ஜொராஸ்ட்ரர்கள். அவரது பெயர் ‘அஹுரா மாஜ்டா’. அதன் பொருள், `மெய் அறிவு கொண்டவன்’ என்பதாகும்.
ஜொராஸ்ட்ரர்களின் புனித நூல் ‘அவஸ்தா’. ஜொராஸ்ட்ரிய மதம் நேர்மை, வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் துறவு மேற்கொள்வது, திருமணம் செய்துகொண்டு பிறகு துறவு மேற்கொள்வது ஆகிய இரண்டையும் ஜொராஸ்ட்ரிய மதம் எதிர்க்கிறது. ஜொராஸ்ட்ரர்களின் வழிபாட்டு முறை மற்ற மதத்தினரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவர்கள் நெருப்பை வணங்குகிறார்கள். நெருப்பு மட்டுமே தீமையிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஜொராஸ்ட்ரர்கள் பாரசீகத்திலிருந்து எந்த நாட்டுக்குச் சென்றாலும், பாரசீக நெருப்புக் கோயிலில் எரிந்து கொண்டிருக்கும் அக்னி ஜ்வாலையைத் தம்முடன் அணையாமல் கொண்டு சென்று வழிபடுவார்கள். ஜொராஸ்ட்ரர்கள் 1795-ம் ஆண்டு சென்னைக்கு வருகை தந்தார்கள். சென்னையில் கிட்டத்தட்ட 300 ஜொராஸ்ட்ரியக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. 1909-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்தக் கோயில். இதன் பெயர்’ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்’. தமிழகத்தில் இருக்கும் ஒரே நெருப்புக் கோயில் இது மட்டும்தான். கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கியபோதுகூட பார்சிக்கள் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொண்டார்களாம்.
எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் நின்று புனித நூலான அவஸ்தாவை வாசித்து வழிபடுகிறார்கள் பார்சிக்கள். மேலும், ஜொராஸ்ட்ரிய மதத்தில் ஒரு விசித்திரமான பழக்கமும் இருக்கிறது. அவர்கள் இறந்த பிறகு உடலைப் புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. உடலைக் கொண்டு போய் ‘அமைதிக் கோபுரம்’ என்று அழைக்கப்படும் கோபுரத்தின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். கழுகுகளும் காகங்களும் உடலைத் தின்ற பிறகு எலும்பை மட்டும் கொண்டு வந்து மணலில் புதைத்துவிடுவார்கள். இப்போதுகூட மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் அமைதி கோபுரம் காணப்படுகிறது.
— பா. பத்மாவதி







Comments are closed, but trackbacks and pingbacks are open.