உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பேராவூருணி !
பெரிய ஊருணி என்ற பொருளில் அமைந்த ஊர் பேராவூருணி.
ஊருணி என்பது குடிப்பதற்கான நீர்நிலை என்று பொருள். நீர் நிலைகள் பல உள்ளன. ஒவ்வொரு நீர் நிலைக்கும் அதன் பயன்பாடு கருதி பெயர்கள் வழங்கப்பெற்று உள்ளது.
குளி(ர்)த்திட குளம்,
பருகிட ஊரணி,
ஏரோடும் உழவுக்கு ஏரி,
கால்நடைகளுக்குக் குட்டை,
கண்ணாறுகள் கொண்டது கண்மாய்,
மழைநீர் ஏந்தி நிற்பது ஏந்தல் இப்படி ஏராளமான பெயர்கள் நீர்நிலைகளுக்கு உண்டு.
ஊருணி மக்கள் பருகுவதற்கான நீர் பாதுகாக்கப்படும் இடம். கால் தடம் கூட நீர் நிலையில் படாமல் பாதுகாக்கப்படும்.
பேராவூருணி, உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பெரிய ஊருணி இருப்பதால் ஓர் ஊருக்கே நீர் நிலையின் பெயர் நிலைத்து விட்டது.
இந்த ஊருணிதான் நம் ஊர் பெயருக்கு காரணமாய் காட்சி தருகிறது. பழைய பேராவூருணியில் பெருமாள் கோவில் அருகில் அமைந்திருக்கிறது இந்த ஊருணி.
தற்பொழுது நகர் பகுதிக்கு வழங்கப்பெற்று வரும் பேராவூருணி என்ற பெயர் பழைய பேராவூருணி பகுதிக்குத்தான் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் நகர் பகுதிக்கு பெயர் பெயர்ந்து விட்டது. தற்பொழுது பேராவூருணி என்பது பேராவூரணி என்று மறுவி ஊருக்கு அணி சேர்க்கிறது.
ஊருணி வள்ளல் தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது. இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள். பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.
ஊரின் பேருக்கு காரணமான ஊருணி சிதைந்து வருகிறது. செப்பம் செய்து காக்க வேண்டியது பேரூராட்சியின் பெருங்கடமை.
நம்பிக்கையுடன்,
— ஆசிரியர் மெய்ச்சுடர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.