உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி ஆளுமைத் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கில் சிங்காரவேலர் விருதாளர் தேனி மு.சுப்பிரமணிக்கு பாராட்டு விழா !
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, தமிழ்த்துறை, குணங்குடியார் தமிழ்ப்பேரவை சார்பில் கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், ‘ஆளுமைத் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்’ நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்திற்குக் கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் வரவேற்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பட்டிமன்றப் பேச்சாளரும், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனருமான கம்பம் பாரதன், ‘இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் சிங்காரவேலர், வ.உ.சிதம்பரனார், காமராசர், உ.வே. சாமிநாத ஐயர், தேவநேயப் பாவாணர், முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அவர்களது ஆளுமைகளை விளக்கியதுடன், மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்வியுடன் ஆளுமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை மேம்பட ஆளுமைத் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர், விருதாளரின் அறிவியல் நூல் வெளியீடுகள், அறிவியல் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் இலக்கியப் பணிகள் குறித்தும் தெரிவித்தார்.
விருதாளர் 60-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களில் கணினி மற்றும் இணையம் குறித்து உரை வழங்கி, பயிற்சி அளித்திருப்பதன் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றிருக்கின்றனர் என்றும் தெரிவித்துப் பாராட்டினார். கல்லூரி முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் விருதாளருக்குப் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர், எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஏற்புரை வழங்கினார். இப்பாராட்டு விழாவில் பிலால், முகம்மது ரபீக் உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ்த்துறை முதுகலை மாணவி செல்வி. ஜெசிமா நன்றி தெரிவித்தார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.