என் ஓட்டு மட்டும் தான் அதிமுகவுக்கு மற்ற 7 ஓட்டும் விஜய்க்கு தான் – ஜெ. உதவியாளரிடம் கவலைப்பட்ட அதிமுக தொண்டன் !
என் ஓட்டு மட்டும் தான் அதிமுகவுக்கு மற்ற 7 ஓட்டும் விஜய்க்கு தான் – ஜெ. உதவியாளரிடம் ஆதங்கப்பட்ட அதிமுக தொண்டன் !
மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் இன்றைய அதிமுக கட்சியின் எதிர்காலம் குறித்து ஒரு அதிமுக தொண்டனிடம் பேசிய தகவலை தன்னுடைய முகநூலில்….. பகிர்ந்துள்ளார். அதை அப்படியே தருகிறோம்..
அவசரமாக கோயம்பேடு செல்ல வேண்டியிருந்தது. வீட்டைவிட்டு கிளம்பி வெளியே வந்தேன். வெளியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர் எனக்கு நன்றாக அறிமுகமானவர். அதிமுகவினுடைய தீவிரப் பற்றாளர். புரட்சித்தலைவருடைய தீவிர ரசிகர். அவரிடம் கோயம்பேடு போகலாமா? என்றேன். வாங்க சார் போகலாம் என்றார். புறப்பட்டோம்..!
போகிற வழி எல்லாம் கட்சியினுடைய நிலைமை பற்றி விசாரித்து கொண்டே வந்தார். கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்த தொண்டனின் உள்ளம் எனக்குப் நன்றாகவே புரிந்தது. சார்! எல்லோரும் சேர்ந்துடுவாங்களா? என்று கேட்டார். சேருகிற மாதிரி தெரியவில்லையே என்றேன். சார், சேர்ந்தால் தான் வெற்றி கிடைக்கும். எல்லா கட்சியினரும் அவ்வாறுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். பார்ப்போம்! கடவுள்கிட்டதான் கேட்க வேண்டும். கட்சி நல்லா இருக்கணும்னு நீங்களும் வேண்டுங்க, நானும் வேண்டுகிறேன் என்று சொன்னேன்.
பல பேச்சுகளுக்கிடையில் விஜயுடன் அதிமுக கூட்டணி வைக்கவேண்டும் சார். வைப்பாங்களா? என்றார். வாய்ப்பு இருக்கிறது மற்றும் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை என்றேன். சார், எங்கள் வீட்டில் எட்டு ஓட்டு இருக்கிறது. என் மகன், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த எட்டு ஒட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுக்கள் தான்.
எனது திருமணம் காதல் திருமணம். திருமணமான பிறகு நாங்கள் இருவரும் விஜய் படங்களை சென்று பார்ப்போம். என்னுடைய மனைவி விஜயினுடைய ரசிகை. தற்போது தேர்தல் வந்தால் எங்களது வீட்டில் எட்டு ஓட்டுகளில் என்னுடைய ஓட்டு மட்டும்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கும்.
மற்ற ஏழு ஓட்டும் விஜய்க்குதான் கிடைக்கும். எனவே விஜயுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே எங்கள் எட்டு ஓட்டுக்களையும் அதிமுக அப்படியே பெற முடியும் என்று கழகம் குறித்த கவலையோடு பேசிக் கொண்டிருந்தார். இப்படி வெளிப்படையான அவருடைய பேச்சைக் கேட்ட நான் திகைத்து போனேன். அவர் எடப்பாடி அவர்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர் என்பதும் அவருடைய பேச்சிலிருந்து புரிந்தது. உண்மையான ஒரு தொண்டன், கழகத்தை எப்படிக் காதலிக்கிறான் என்பதை அவருடைய பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.
சேரவில்லை என்றால் வாழ முடியாதா? சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்குமா? கூட்டணி இருந்தால் தான் அதிமுகவுக்கு சாதகமா? தனியாக நின்று சாதிக்க முடியாதா? தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் தலைவர்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்வா? சாவா? போராட்டத்தில் உங்கள் முடிவில் தான் வெற்றி இருக்கிறது. தொண்டர்கள் உங்களை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது பொய் என்று நினைத்தால், சொன்னவரை நானே உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவருடன் பேசினால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாழ வேண்டும் என்று நினைக்கும் உண்மையான தொண்டன் அவர் என்பது உங்களுக்கும் புரியும். எனக்கு மொத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நூற்றாண்டுகளையும் கடந்து வாழும் என்று சொன்ன எனது தாயின் தெய்வவாக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதே..!
– பூங்குன்றன் சங்கரலிங்கம் –
மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர்