எல்.கணேசன் திருவுருவப்படம் திறப்பு ! அமைச்சர் கே.என்.நேரு புகழஞ்சலி !
தஞ்சையில் மறைந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல். கணேசன் திருவுருவப்படத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
மறைந்த மொழிப்போர் தளகர்த்தரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எல். கணேசனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுடன் இணைந்து திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, எல். கணேசனின் தியாகத்தை போற்றும் விதமாக அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்மேல் தீராத பற்றுகொண்டு, யாருக்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்லும் குணம் கொண்டவர் எல். கணேசன் என்றும், முத்தமிழ் அறிஞர் கலைஞர், கழகத் தலைவர் ஆகியோரின் பேரன்பை பெற்ற அன்னாரின் குடும்பத்தினருக்கு கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழநி மாணிக்கம், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சாக்கோட்டை க.அன்பழகன், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழநிவேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார் ஆகியோருடன் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.