பள்ளிவாசல் இடத்தையே ஆட்டய போட்ட அரசு காஜிக்கு எதிராக போஸ்டர் யுத்தம்!
”பள்ளிவாசல் மற்றும் அரபி கல்லூரி இடத்தை மோசடியாக விற்பனை செய்த எம்.சபுர்முஹைதீன் அவர்களை மதுரை மாவட்ட அரசு காஜியாக நியமனம் செய்ததை ரத்து செய்” என்ற வாசகங்களோடு, மதுரை மாநகர் முழுவதும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. ஏ.ராஜா ஹூசைன் தாவூதி என பெயரையும் கூடவே அவரது செல்போன் எண்னையும் போட்டு மேற்படி போஸ்டர் ஒட்டப்பட்டதுதான் ஹைலைட்.
மதுரை சக்கிமங்கலம் அன்னை இந்திரா நகரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக இருந்து வரும், ஏ.ராஜா ஹூசைன் தாவூதியிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “மதுரை சிவகங்கை சாலையில் வரிச்சியூர் என்ற கிராமத்தில் ஜே.எம்.எஸ்.அரபிக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக, தாய் மற்றும் தந்தையரை இழந்தோருக்காக தொடங்கப்பட்டதுதான் இந்த கல்லூரி. இங்கு குரான் பயிற்சிகளை வழங்கி ஆலீம் பட்டம் வழங்கி வருகிறார்கள்.
இந்தக் கல்லூரிக்குச் சொந்தமான ஐந்தரை ஏக்கர் காலி இடத்தை ஆளுங்கட்சி அமைச்சரின் பினாமியாக செயல்படும் பாலமுருகன், ஜெயரூபன், இளங்கோ, ஆகியோருக்குத் தாரை வார்த்து விட்டார்கள்.
கேட்டால் விற்றதாக சொல்கிறார்கள். முறையான கணக்கு வழக்கு இல்லை. கைமாறிய இடத்தை பிளாட் போட்டு விற்றிருக்கிறார்கள். அதுவும் ஒரே இடத்தை 3, 4 பேருக்கெல்லாம்கூட விற்று ஏமாற்றியிருக்கிறார்கள்.” என்கிறார் காட்டமாக.
குற்றச்சாட்டுக்கு ஆளான, எம்.சபுர்முஹைதீன் அவர்களையும் சந்தித்து விளக்கம் கேட்டோம்.
”1984 ல் மர்ஹூம்அஸ்ரப் அலி என்பவர் புதூர் அல் அமினில், வெறும் 8 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரி, பின்னர் கீழ் மதுரையில் இயங்கியது. அதன்பிறகே, 1989-இல் இந்த இடத்தில் சொந்தமாக இடம் வாங்கி கல்லூரி கட்டப்பட்டது.
அரபிக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பகுதியை விற்றது உண்மைதான். கல்லூரி உறுப்பினர்கள் 10 பேரின் ஒப்புதலுடன்தான் இந்த விற்பனையும் நடைபெற்றிருக்கிறது. விற்ற பணத்தை அரபிக் கல்லூரி வங்கிக் கணக்கில்தான் வரவு வைத்து முறையான கணக்கை பராமரித்து வருகிறோம். இந்த பணத்தைக் கொண்டு, பாதியில் நிற்கும் கட்டிட பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
தற்போது, நான் பெற்றிருக்கும் ஹாஜியார் பட்டம் என்பது யாரும் எனக்கு சும்மா கொடுத்துவிடவில்லை. மதிப்பிற்குரிய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அணிஷ் சேகர் முன்பாக தேர்வு எழுதி; மற்றவர்களைப் போல நானும் நேர்காணலில் கலந்து கொண்டு; தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் அங்கீகாரத்தோடு என்னை மதுரை டவுன் ஹாஜியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தற்போது பிரச்சினையைக் கிளப்பும் ராஜா ஹூசைன் தாவூதி என்பவர், இதே இடத்தை தனக்கு வேண்டும் என்று எங்களை அணுகினார்.
அவரிடம் இந்த இடத்தை கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. அந்த கோபத்தில்தான் பொய்யான தகவலோடு போஸ்டர் ஒட்டியிருக்கிறார். இதே நிலை தொடர்ந்தால், இவர் மீது போலீசில் புகார் தெரிவித்து, மான நஷ்ட வழக்கு தொடர வேண்டியிருக்கும்” என எச்சரிக்கிறார், எம்.சபுர்முஹைதீன்.
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்