பிரணவ் ஜூவல்லரி மோசடி – ஆதி முதல் அந்தம் வரை – விரிவான தகவல்கள் !
எதிர்கால சேமிப்பின் ஒரு அங்கமாக, பாமர மக்கள் பலரும் மிகவும் நம்பிக்கையாக இணையும் திட்டங்களுள் ஒன்று தங்க நகை சேமிப்பு திட்டம்தான். இதிலும்கூட மோசடி நடக்குமா? என்ற அதிர்ச்சியில் ஆழ்த்தியது பிரணவ் ஜூவல்லரி மோசடி விவகாரம். வழக்கில் சிக்கி ஓராண்டை கடந்த நிலையிலும் போட்ட பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்.
மோசடி நடந்த விதம் :
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லரி, மிக குறுகிய காலத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், நாகர்கோயில், ஈரோடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து தனது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி – சேதாரம் என்ற அறிவிப்பும், நடிகர் பிரகாஷ்ராஜை வைத்து வெளியிட்ட விளம்பரமும், யூடியூப் சேனல்களில் வெளியான ஹைப் வீடியோக்களும் பிரணவ் ஜூவல்லரி மீதான கவனத்தை ஈர்த்தது.
இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கும் தங்கத்தின் மீதான பிணைப்பும்; எந்த ஒரு காலத்திலும் நட்டத்தை ஏற்படுத்திராத பாதுகாப்பான முதலீடு என்ற யதார்த்தமும் தங்க நகை சேமிப்பின் மீதான நாட்டத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது. இந்த பின்புலத்தில் இருந்துதான், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தங்களது மாவட்டத்திலுள்ள பிரணவ் ஜூவல்லரியின் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் இணைந்தனர்.
மாதச்சீட்டு, பிக்சட் டெபாசிட் திட்டம், பழசுக்குப்புதுசு என்பதான பல்வேறு வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களை கைவசம் வைத்திருந்தது, பிரணவ். குறிப்பாக, உங்களது பழைய நகைகளை எங்களிடம் வந்து கொடுத்தால் ஒரு வருடம் கழித்து அதே எடையில் புதிய டிசைனில் புத்தம் புது நகையை செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம் என்பதாக அறிவித்த திட்டம் பெண்கள் சாரை சாரையாய் குவிய வைத்தது. பலரும் வீட்டு பீரோவில் பூட்டி வைத்த பழைய நகைகளை உருக்கி எடை கணக்கில் முதலீடு செய்தனர்.
வீடியோ லிங்
வாக்குறுதி அளித்தது போல, ஓராண்டு முடிவில் தங்க நகைகளை திருப்பிக் கொடுக்க முடியாமல் தடுமாறியது நிறுவனம். தமிழகத்தின் பல்வேறு கிளைகளிலும் தங்கநகை சேமிப்பு சீட்டுகளை கையில் எடுத்துக் கொண்டு மக்கள் படையெடுத்தார்கள். பல கிளைகளில் ஷோரூம்களில் தங்க நகைகளே இல்லாமல், எலும்பு கூடுகளைப்போல காட்சியளித்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். அப்போதும்கூட, அவர்களை சமாளித்து நகைகளை ஆர்டர் செய்ய கொடுத்திருப்பதாகவும், ஒரு தேதியை எழுதி கொடுத்து திரும்ப அந்த தேதியில் வருமாறு அனுப்பி வைத்தது.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய முக்கியமான ஒரு தகவல். பலரிடம் 2% வட்டிக்கும் பணம் வாங்கிக்கொண்டு பாண்டு கொடுத்திருக்கிறது. உதாரணமாக, 5 இலட்சம் முதலீடு செய்தால் ஒன்று மாதந்தோறும் 2% வட்டியை வாங்கிக் கொண்டு 10 மாதம் இறுதியில் அசலை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது, மாதாந்திர வட்டித்தொகையை பெறாமல், 10 மாதம் நிறைவில் 106 கிராம் தங்கத்தை செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்பதாகவும் ஒரு சிறப்புத் திட்டத்தை வைத்திருக்கிறது. பலரும் இந்த திட்டத்தின் கீழ், பல பத்து இலட்சங்களை முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் மட்டுமே, சுமார் 20 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை பெற்றிருப்பதாக சொல்கிறார்கள்.
யார் இந்த பிரணவ் மதன் செல்வராஜ் :
பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை, திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் நகைக்கடை ஒன்றின் முன்பாக நகை பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தவர். பின்னர், படிப்படியாக மதன் செல்வராஜ் தனது சகோதரருடன் இணைந்து, செல்வம் சிறுபட்டறையிலிருந்து தொடங்கி, செல்வம் அடகு கடை, செல்வம் பேங்கர்ஸ், செல்வம் ஜூவல்லரி என்பதாக படிப்படியாக முன்னேறி வந்தவர்.
ஒரு கட்டத்தில் சகோதரருடன் பிரிந்து, தனியாக பிரணவ் ஜூவல்லரியை தொடங்கினார், மதன் செல்வராஜ். கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் விளம்பரங்களில் வழியே குவிந்த பணத்தை கண்டு திகைத்தவர், தங்க நகை தொழிலிலிருந்து திசைமாறி ரியல் எஸ்டேட் பிசினஸ், பால்பண்ணை நடத்துவது என்பதாக தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய கிளைகளை விரிவுபடுத்தியிருக்கிறார். மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதும், ஆடம்பரமான இன்டீரியர் செலவு செய்வதுமாக அகலக்கால் வைத்ததுதான் இவரது வீழ்ச்சிக்கான காரணம் என்பதாக சொல்கிறார்கள், இவருடன் பயணித்த நண்பர்கள்.
வீடியோ லிங்
EOW போலீசார் வழக்குப் பதிவு :
முதிர்வு காலம் முடிந்தும் சொன்னபடி நகையை திருப்பித்தராமல் போகவே, தமிழகத்தின் பல்வேறு கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். தென் மாவட்டம் ஒன்றில் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவமும் நிகழ்ந்தேறியது. இதனையடுத்தே, அடுத்தடுத்து தனது கடைகளை அவசரம் அவசரமாக மூடும் முடிவுக்கு வந்தது பிரணவ் ஜூவல்லரி நிர்வாகம். இதனையடுத்து பொதுமக்களும் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்த தொடங்கினர்.
இந்நிலையில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த நிறுவனம் என்பதால், திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று வழக்குப் (குற்ற எண்: 8/2023) பதிவு செய்தனர். பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ், நிர்வாக பார்ட்னரும் அவரது மனைவியுமான கார்த்திகா, மேனேஜர் நாராயணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே தேதியில் மேனேஜர் நாராயணனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 2023 டிசம்பர்-27 அன்று மதன் செல்வராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், 2024 ஜனவரியில் மனைவி கார்த்திகாவையும் அவரது வீட்டில் வைத்தும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருச்சி மாவட்ட டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் செயல்பட்டு வருகிறார்.
வீடியோ லிங்
இதுவரை சுமார் 2200 புகார்கள் பெறப்பட்டிருப்பதாகவும்; சுமார் 24 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். பிரணவ் ஜூவல்லரி தொடர்புடைய அசையும் அசையா சொத்துக்களை கண்டறிந்திருக்கிறார்கள். பெரும்பாலான அசையா சொத்துக்கள் வங்கிக்கடனில் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இன்னும் சில சொத்துக்கள் அவற்றின் உரிமை தொடர்பான சிக்கலிலும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். ஒருபக்கம், சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை இணைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதோடு, முதற்கட்டமாக இதுவரையில் முதல் 500 புகார்தாரர்களுக்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்து மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
பிற துறைகளின் ஒத்துழைப்பை எதிர்நோக்கும் EOW போலீசார் :
EOW போலீசார் கையாளும் மற்ற வழக்குகளைக் காட்டிலும், பிரணவ் ஜூவல்லரி வழக்கில் மக்கள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்திய அதேநாளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டதே பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. அதேபோல, மற்ற வழக்குகளைக் காட்டிலும் குறுகிய காலத்தில் முதற்கட்டமாக முதல் 500 புகார்தாரா்களின் சார்பில் குற்றப்பத்திாிக்கை தாக்கல் செய்திருப்பதும்; நிறுவனம் தொடர்புடைய சொத்துக்கள் அனைத்தையும் அடையாளம் கண்டிருப்பதும் விரைவான செயல்பாடாகவே சொல்கிறார்கள், EOW போலீசு வட்டாரத்தில்.
மேலும், சொத்துக்களை அடையாளம் கண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் வங்கிக்கடனுடன் இணைக்கப்பட்டிருப்பதால் சுதந்திரமாக அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை டான்பிட் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞரின் சட்ட ஆலோசனை பெறுவது; வருவாய்த்துறை, பதிவுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரை சார்ந்தே அடுத்தகட்டமாக நகர்த்த வேண்டியிருப்பதால் துறை ரீதியான சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளையும்கூட குறை சொல்வதற்கில்லை. அவர்கள் அவர்களது பணிச்சூழல்களுக்கு மத்தியில்தான், இந்தப் பணியையும் செய்து முடித்தாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதன்காரணமாகவும், தவிர்க்கவியலாத தாமதத்தை இந்த வழக்கு எதிர்கொண்டு வருகிறது.
வீடியோ லிங்
நீதிமன்றத்தில் வழக்கு :
இதற்கிடையில், பிரண்வ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் செல்வராஜ் தரப்பிலிருந்து, மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு (OA 26/2024) ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அவரது அசையா சொத்துக்கள் அனைத்தும் வங்கிக்கடனோடு பிணைக்கப்பட்டிருப்பதால், அவற்றையெல்லாம் EOW போலீசார் முடக்கி வைத்திருக்கும் நிலையில், அந்த முடக்கத்தை நீக்கி தன்னிடம் ஒப்படைக்குமாறும்; தானே ஒரு வியாபாரியைக் கூட்டி வந்து சம்பந்தபட்ட இடத்தை நல்ல விலைக்கு விற்று வங்கிக்கடனை செலுத்திவிட்டு மிச்சத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்திவிடுவதாகவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த வழக்கு மதுரை டான்பிட் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இதுவரை 5 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆஜராகியுள்ள நிலையில், 2025 – ஜனவரி 03 அன்று, இந்த விவகாரம் தொடர்பாக வங்கிக்கடன் பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது, டான்பிட் சிறப்பு நீதிமன்றம்.
நகை வாங்கியதிலும் மோசடி :
நீதிமன்ற வழக்கு ஒருபுறமிருக்க, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரதீம் பிகாஸ் ஹஜ்ரா என்பவர், பிரணவ் ஜூவல்லரியின் சார்பில் அதன் மேனேஜர் நாராயணன் தன்னிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு 1279.870 கிராம் தங்க நகைகளை வாங்கிச் சென்றதாகவும்; அதற்காக 6 இலட்ச ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும்; மீதம் 66,64,559.00 ரூபாய் பாக்கி இருக்கிறது என்றும் புகாரோடு போலீசாரை அணுகியிருக்கிறார். மாநகர போலீசார் EOW போலீசாரை கைகாட்ட, EOW போலீசாரோ பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்துதான் புகாரை பெற முடியும் என்று திருப்பியனுப்பிவிட, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உதயமான முதலீட்டாளர் சங்கம் :
சுமார் 2200-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் EOW போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு என்னதான் ஆனது? எப்போதுதான் பணம் திரும்பக்கிடைக்கும்? என்ற குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஒன்றுசேர்ந்து “பிரணவ் முதலீடு மீட்பாளர் நலச்சங்கம்” என்பதாக ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை சங்கமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் அவரவர் ஊர்களில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்சப் குழுக்களை உருவாக்கி கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், பொதுவில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து வழக்கில் விரைந்து தீர்வை எட்டுவதற்கான முயற்சியில் இந்த சங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள்.
பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கைப் பொறுத்தமட்டில், டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையைப் பொறுத்தே அடுத்த நகர்வுகள் அமையும் என்றே எதிர்பார்க்கிறார்கள். EOW போலீசாரை பொறுத்தமட்டில், அடையாளம் கண்டறிந்த சொத்துக்களை அரசுடைமையாக்குவது மற்றும் எஞ்சிய புகார்தாரர்களின் சார்பில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.