அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸுக்காக மதுரையில் நடைபெற்ற பிரார்த்தனை !
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, மதுரையில் சிறப்பு பிரார்த்தனையை நடத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நாளை (நவம்பர்-06) நடைபெற உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மதுரை S.S.காலனி பகுதியில் உள்ள அனுஷனத்தின் அனுகிரகத்தின் சார்பில் அதன் நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல; தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குலசேகரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான், மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றிருக்கிறது. அப்போது, காஞ்சி பெரியவர் மற்றும் கிருஷ்ணர், காமாட்சி அம்மன், ராமர், முருகன் வள்ளி தெய்வானை, பெருமாள் சுவாமிகளுக்கும் வேதவிற்பனர்கள் வேதமந்திரங்கள் முழுங்க சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி நடத்தினர். துணை அதிபர் கமலாஹாரிஸின் புகைப்படம் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து கமலாஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக வேண்டியும் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து அங்குள்ள பக்தர்கள் சுவாமிகள் முன்பாக அமர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டியும் தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.