Prime consulting Services மோசடி : ஷேர் மார்க்கெட்டா ? இரிடியமா ? திகில் கிளப்பும் மோசடி ! புகார் அளிக்க ஒரு வாய்ப்பு !
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இயங்கிவந்த Prime consulting Services என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆன்லைன் டிரேடிங்கில் பிசினஸ் செய்து நல்ல இலாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி பலரிடமிருந்து முதலீடை பெற்றிருக்கின்றனர்.
நிறுவனத்தை நடத்தி வந்த சுரேஷ் மற்றும் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மலியமான், ஜான், நூருல் சகாபுதீன் ஆகியோருக்கு எதிராக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசிலும் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இதே மோசடி விவகாரத்தில் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் குற்ற எண்: 03/2023 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை பத்துக்கும் அதிகமானோர் புகார் அளித்திருக்கும் நிலையில், சுமார் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
வீடியோ லிங்
இந்நிறுவனத்தை நடத்திவந்த சுரேஷுக்கு ஆதரவாக, அவரது பேச்சை நம்பி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை வசூலித்துக் கொடுத்த திருச்சியை சேர்ந்த பிரின்ஸ் அசாரியா என்பவரும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது, இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக செயல்படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மிக முக்கியமாக இந்த ஸ்டாக் மார்க்கெட்டிங் பிசினஸ் மோசடி விவகாரத்தில், உண்மையில் நடந்த விவகாரமே வேறு என்கிறார்கள். ஸ்டாக் மார்க்கெட் பிசினஸ் செய்வதாக சொல்லித்தான் சுரேஷ் மற்றும் சரண்யா தம்பதியினர் பணத்தை வசூலித்திருக்கின்றனர். இவர்களை அணுகிய வேறொரு கும்பல், இவர்களையே மூளைச்சலவை செய்து அந்த முதலீடுகளை அப்படியே நெம்பர்-2 பிசினஸூக்கு மடைமாற்றிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
குறிப்பாக, சென்னையில் ஸ்ரீ சாஸ்தா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் மலியமான் என்பவர் வழியாக, இரிடியம் பிசினஸில் முதலீடு செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் பதிந்துள்ள வழக்கில் ஏ-3 யான மலியமான், முன்ஜாமின் பெற்றுக் கொண்டு கைது நடவடிக்கையிலிருந்து தப்பி வருகிறார் என்றும் இவருக்கு ஆதரவாக போலீசில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்ட எஸ்.ஐ. மல்லிகா என்பவர் ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.
இரிடியம் பிசினஸ் பற்றி போலீசில் சொல்லவும் முடியாமல், கொடுத்த பணத்தை மலியமானிடமிருந்து திரும்பப் பெறவும் முடியாமல், சுரேஷ் மற்றும் சரண்யா தம்பதியினர் சிக்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
கடந்த 2022 இல் தொடங்கிய பிரச்சினையில், நீதிமன்ற உத்தரவையடுத்தே மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவ
செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து 2023 இல் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்ற போதிலும், மேற்படி சுரேஷ், சரண்யா, மலியமான் ஆகியோருடன் ஜான் மற்றும் நூருல் சகாபுதீன் ஆகியோரும் இணைந்துதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.
மேலும், FX-PRIMUS PVT LTD, GETZ CAPITAL, ALLIED ASSERTS FUNDS ஆகிய நிறுவனங்களும் இந்த மோசடி விவகாரத்தோடு தொடர்புடைய நிறுவனங்களாவும் சொல்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில், இதே போன்ற மோசடி புகாரில் ஜான் என்பவருக்கு எதிராக வழக்குப்பதிவாகியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்த வழக்கில், புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இருப்பதால், மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால், அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0431 – 2422020.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
வீடியோ லிங்