லாபம் கொடுக்கும் ஹோட்டல் தொழில்!
ஹோட்டல் தொழில் நல்ல லாபம் கொடுக்கக்கூடியது. சேல்ஸ் அதிகமாக அதிகமாக முதலீடு கம்மியாவும், லாபம் அதிகமாவும் மாறக்கூடியது.
உதாரணத்துக்கு 100 இட்லி, 50வடை, 50 கல்தோசை அப்புறம் இதுக்கான சாம்பார் சட்னிகள் செய்ய மொத்த செலவு தோராயமா 1000ரூ-1200ரூ ஆகலாம். எல்லாமே விற்றுத்தீர்ந்தால் 2000ரூ சேல்ஸ் நடக்கும். லாபம் 800ரூ கிடைக்கலாம்.
இதே டபுளாக 4000ரூக்கு சேல்ஸ் நடக்குனும்ன்னா இட்லி வடைகளை இரண்டு மடங்காக தயார் செய்து விக்கனும். ஆனால் இரண்டு மடங்காக சாப்பாடுகளை தயார்செய்யும் போது அதற்கான செலவு இரண்டு மடங்காக உயராது. முதல் 100இட்லி 50தோசை 50வடை செய்ய 1200வரை ஆச்சுதுன்னா, இரண்டு மடங்காக செய்யும் போது செலவு 1800ரூ போல தான் வரும்.
ஹோட்டல்ல முதல் 50பேர் சாப்பிடுறதுல 40பேர் கொடுக்கும் பணம் செலவுகளுக்கும், கடைசி பத்து பேர் கொடுக்குற பணம் லாபமாகவும் கிடைக்கும். வியாபாரத்தை உயர்த்தி இன்னொரு 50பேரை சாப்பிட வைத்தால் அதில் 10பேர் பணம் செலவுக்கும் 40பேர் பணம் லாபமாகவும் மாறும்.
இதுதான் ஹோட்டல் தொழிலின் அடிப்படை. இதில் புதிதாக ஆரம்பிக்கும் நிறைய சிறுகடைகள் ஆரம்ப நிலையிலே நிற்பதால் 2000ரூ வியாபாரத்தை தாண்டுவதில்லை. இதனால் தினம் ஆயிரம் கூட லாபமாக கிடைக்காமல் ரொட்டேசன் பிரச்சனை ஆகி நஷ்டம் ஏற்படலாம். அல்லது ஹோட்டல் தொழில் மீது அதிருப்தி வரலாம். குறைந்தபட்ச வியாபாரமான 2000 ரூபாயிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் 4000-5000ரூ வரை வியாபாரம் பெருகவில்லையென்றால் கடையை மாற்றிவிடுவது அல்லது விட்டுவிடுவது தான் சிறந்தது.
கீழே உள்ள படத்தில் அடையாறு HP பெட்ரோல் பங்க் அருகில் சகோதரர் ஒருவரின் தள்ளுவண்டி டிபன் கடை இருக்கிறது. காலைல 6மணிக்கு திறக்கும். அடுப்பு கிடையாது. எல்லாமே வீட்லயே ரெடி பண்ணி தள்ளுவண்டில கொண்டு வந்து நிறுத்துறார். பத்து மணிக்குள்ள 300 இட்லி, 100 கல்தோசை, 200 வடை, 100 இடியாப்பம் ன்னு எல்லாத்தையும் வித்துட்டு கிளம்பிடுவார். எல்லாமே விலை பத்து ரூபாய் தான். டேஸ்ட் சூப்பரா இருக்கும். சூடே இருக்காதுன்னாலும் டேஸ்ட் க்காக அவ்ளோ கூட்டம் வரும். இந்த வியாபாரத்துக்காக நைட் 2மணில இருந்து வீட்டு ஆட்கள் மூனு பேரு அவரோட சேர்ந்து அடுப்புல உழைச்சாகனும். காலைல 6-10வரை தனி ஆளா சேல்ஸ் பண்ணிட்டு போய்டுவார்.
நான் ஏற்கனவே ஒரு பதிவுல எழுதின மாதிரி புதுசா ஹோட்டல் தொழில் ஆரம்பிக்க நினைக்கிறவங்க எதாவது ஒரு நேர சாப்பாட்டை மட்டும் போக்கஸ் செஞ்சு அதை தனித்துவமா கொடுத்தாலே போதும். அதுலயே பிக்கப் ஆச்சுன்னா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம். பெரிய கடையா வைக்கனும்ன்னு ஆசைப்பட்டு லட்சக்கணக்குல முதலீடு போட்டு மூனு நேரமும் தூக்கமில்லாம கடையை நடத்தி நாலஞ்சி பேருக்கு சம்பளம் கொடுத்து கடைசில 50ஆயிரம் சம்பாதிக்கவே போராடுறதுக்கு சிம்பிளா ஒருநேர சாப்பாடு அது காலையோ மதியமோ ராத்திரியோ எதாவது ஒன்னை தேர்வு செஞ்சி தரமா நடத்துனாலே போதும்.ஜெய்க்கலாம்.
— அஸ்வின், சென்னை








Comments are closed, but trackbacks and pingbacks are open.