காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபா்! உருவப் பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
சாத்தூரில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் யூடியூபர் முக்தாரை கண்டித்து, சாத்தூரில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக முக்தாரின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
சாத்தூர் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமை தாங்கினார். பல்வேறு நாடார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, முக்தாரின் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் அதை கிழித்தனர். தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, முக்தார் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், முக்தாரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றபோது, அதை தடுக்க சென்ற சாத்தூர் நகர காவலருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவலரை கீழே தள்ளி தாக்க முயன்றதாக கூறப்படுவதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தையடுத்து, சாத்தூர் நகரில் உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.