100 நாள் வேலை திட்டத்தை சிதைத்த மோடி அரசு ! கேள்விக்குறியான கிராமப்புற வாழ்வாதாரம் !
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, தொழிலாளர்களின் வேலை மற்றும் கூலி உத்தரவாதத்தை பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில், 100 நாள் வேலை அனைவருக்கும் சட்டப்பூர்வ உரிமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அறிவிக்கும் குறிப்பிட்ட கிராமங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என மாற்றம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் வேலை நாட்கள் குறையும், கூலி உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முன்பு ஒன்றிய அரசே 90 சதவீதம் நிதி வழங்கிய நிலையில், தற்போது 60 சதவீதம் மட்டுமே வழங்கி, மீதமுள்ள 40 சதவீத நிதிச் சுமையை மாநில அரசுகள் மீது தள்ளுவதாகவும், ஒன்றிய அரசு நிதி வழங்கத் தவறினால் முழு நிதியையும் மாநில அரசே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
ஊராட்சி தேவைக்கேற்ப வேலை வழங்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசு சொல்வதையே செய்ய வேண்டிய கட்டாயம் விதிக்கப்படுவதால், கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்தரவாதம் கேள்விக்குறியாகும் எனவும் கூறப்பட்டது. இதனால் வேலை தேடி ஊர் ஊராக அலைக்கும் நிலை, புலம்பெயர்வு, வட்டிக்கடன் போன்ற பிரச்சினைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பயோமெட்ரிக் வருகைப் பதிவால் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் கூலி கிடைக்காத நிலையும் உருவாகும் என குற்றம்சாட்டி, இது தமிழ்நாட்டின் கிராமப்புற பண புழக்கத்தை குறைக்கும் சதி எனவும் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.
இந்த போராட்டத்தில் முன்னாள் சேர்மன் நிர்மலா, கடற்கரை ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.