சமையல் குறிப்பு – பரங்கிக்காய் அல்வா
வணக்கம் சமையலறை தோழிகளே! பொதுவா ஸ்வீட்ஸ்னா யாருக்கு தான் பிடிக்காது. ஸ்வீட்டு பிடிக்காத நபர் இருக்க முடியுமா? சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஏன் சுகர் பேசன்ட் கூட ஸ்வீட்ட சாப்பிட்டது பின் சுகர் டேப்லெட்டை போட்டுக்குவாங்க. அதனால ஸ்வீட் பிடிக்காதவங்கன்னு யாருமே இல்லனு சொல்லலாம். சரி இப்போ வாங்க அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பரங்கிக்காய் 250 கிராம், ரவை 200 கிராம், சர்க்கரை 250 கிராம், ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன், பால் 250 மி.லி, குங்குமப்பூ சிறிதளவு, தண்ணீர் 250 மிலி, நெய் தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை தேவையான அளவு, பன்னீர் ரோஜா உலர்ந்தது வேண்டுமென்றால் சிறிதளவு.
செய்முறை:-
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கட் செய்து வைத்திருக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு 250 கிராம் பரங்கிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி மையாக அறையும் அளவு வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி 200 கிராம் ரவையை கொட்டி இரண்டு நிமிடம் ரோஸ்ட் செய்யவும். பிறகு அரைத்த பரங்கிக்காய் பேஸ்ட் சேர்த்து கிளறவும். அதன்பின் சுடு பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கெட்டியாகாமல் கிளறவும். பின் 250 மி.லி தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். பின் சர்க்கரை சேர்த்து கிளறிய பின் ஏலக்காய் பொடி முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா, பாதாம் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாணலியில் ஒட்டாத வரை நன்கு கிளறி இறக்கவும். இப்போது சுவையான பரங்கிக்காய் அல்வா தயார். இதனை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்த்து அதன் மேல் ரோஜா இதழ்கள் வைத்து அலங்கரித்து பக்கத்தில் சுவைக்க ஒரு ஸ்பூனையும் வைத்து விருந்தினருக்கோ அல்லது நம் வீட்டில் இருப்பவருக்கோ சூடாக அல்லது ஆறவிட்டு சிரித்த முகத்துடன் பரிமாறுங்களேன் சுவை அள்ளும்.
— பா. பத்மாவதி.