ஏலச்சீட்டு நடத்தி இலட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய ரயில்வே ஊழியர் !
ஏலச்சீட்டு நடத்த வேண்டுமானால் 1956-ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின்படி (பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்), அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடத்த வேண்டும். ஆனால், இப்போது ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஏலச் சீட்டுகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிவருகிறது.
அதுபோல முறையாக சட்டப்பூர்வமான அனுமதி எதுவும் பெறாமல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதிக்குட்பட்ட காட்டனூர் கிராமத்தை சேர்ந்த ,ரயில்வே துறை ஊழியர் சேகர் என்பவர் அப்பகுதியில் சீட்டு பிடித்துள்ளார். இவரிடம், நான்கு வருடங்களுக்கு முன்பு மாதச் சீட்டான 2.5 இலட்சம் சீட்டு தொகையை 25 பேர் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
அதில், கல்லாவி அடுத்த கொள்ளப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கடைசி சீட்டு முடியும் வரை சீட்டு எடுக்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய சீட்டு தொகை ரூ.2,51,500/- மற்றும் ஆடுகளை விலைக்கு வாங்கி சென்ற தொகை ரூ.57,000/- என மொத்த தொகை ரூ.3,08,500/- இதுவரை கொடுக்காமல் ஏமாற்றியதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார்.
சேகர்
அதனடிப்படையில் கல்லாவி போலீசார் சேகரிடம் விசாரித்த போது இரண்டொரு நாட்களில் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக போலீசார்களிடம் உறுதியளித்துவிட்டு சென்றார். அதோடு சரி. இப்போது வரையில் சேகர் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே வரவில்லை. பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு பணமும் போய்ச்சேரவில்லை.
”அவர் பாமகவை சேர்ந்தவர் என்பதால், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை” என்பதாக வேதனை தெரிவிக்கிறார், ராமகிருஷ்ணன். மேலும், ”பணத்தை திருப்பிக் கேட்டால் என்னை அடியாட்கள் வைத்து கொலை மிரட்டல் விடுகிறார்.” என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, விசாரித்து வரும் கல்லாவி போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ சேட்டு விடம் பேசினோம். “சீட்டு நடத்திய சேகரிடம் விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டேன். இன்ஸ்பெக்டரும் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார் என்றார்.
சீட்டு நடத்திய சேகரிடம் பேசினோம். முதலில், “ நான் சீட்டே நடத்தவில்லை” என மறுத்தவரிடம் நாம் உரிய விளக்கத்தை சொன்னதும், “சீட்டில் இணைந்த மற்றவர்களிடம் பணம் வர வேண்டியுள்ளது. அவர்கள் கொடுத்தால், அதனை வசூலித்து ராமகிருஷ்ணனிடம் கொடுத்து விடுகிறேன். ஆடு வாங்கிய வகையில் உள்ள பாக்கித்தொகையையும் கொடுத்துவிடுகிறேன்.” என்பதாக கூறினார்.
“சேகர் தன்னிடம் சீட்டு கட்டிய எவருக்கும் உரிய காலத்தில் பணத்தை கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்குமே பணத்தை இழுத்தடித்துதான் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்தார்கள். நாங்களும் எங்களுக்கு தெரிந்த விசயங்களை சொல்லிவிட்டு வந்தோம்.” என்கிறார்கள், சேகரிடம் சீட்டு கட்டிய ராமசாமி, மாரியப்பன், முனிசாமி போன்றவர்கள்.
பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன்
இந்த மோசடி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷெனாஸிடம் பேசினோம். “ நிதி நிறுவனங்களின் விதிகளைப் பின்பற்றி, அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் நிதி நிறுவனங்களும் பல உள்ளன. அங்கும், ஏலச்சீட்டு நடத்தப்படுகிறது. அவர்கள் நடத்தும் ஏலச் சீட்டு என்றால் மாதந்தோறும் ஏலம் விடுவதில்லை. முன்னதாகவே, ஒவ்வொரு மாதத்துக்கும் கசறு (தள்ளுபடித் தொகை) போக சீட்டுத் தொகையை நிர்ணயித்துவிடுகின்றனர். அதன்படி, மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு, கட்டிய பணத்துக்கு ரசீது தரப்படுகிறது.
சேகர் போன்றவர்கள் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஏலச் சீட்டில் கட்டிய பணத்துக்கு ரசீது கிடையாது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட இடத்தில் சீட்டு போட்டவர்கள் கூடி, தங்களுடைய தள்ளுபடியை அறிவிப்பார்கள். இதில் அதிகப்படியாக தள்ளுபடி கேட்கும் நபர்களுக்கு சீட்டுத்தொகை என அறிவிப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் அனைத்து சீட்டுதாரர்களிடமும் பணத்தைப் பெறாமலேயே ஏலத்தை நடத்துவார்கள். சீட்டு எடுத்தவர்களுக்கு, “பின்னர் பணம் தரப்படும்’ என்று தெரிவிப்பார்கள்.
அவர்களும் அதனை நம்பி, நடையாய் நடக்க வேண்டி இருக்கும். “சரியாக வசூலாகவில்லை’ என்ற ஒரு காரணத்தைக் கூறிவிட்டு சீட்டு நடத்துகிறவர் என்றாவது ஒருநாள் குடும்பத்துடன் மாயமாகி விடுவார். அல்லது சேகர் போன்ற மோசடி பேர்வழிகள் ஏமாற்றதான் செய்வார்கள். அதன்பிறகு, சீட்டு கட்டிவர்கள் காவல் நிலையத்தை நாட வேண்டிவரும். சேகர் இந்திய ரயில்வே பணியில் இருந்துகொண்டே இதுபோன்ற சீட்டு பிடித்தது தவறு. அவர் மீது போலீசார் பதிந்திருப்பது சீட்டிங் கேஸ். போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டால், அவரது வேலையை போய்விடும் வாய்ப்பிருக்கிறது.” என்கிறார், அவர்.
அவர் வேலையை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதல்ல; பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணனின் கோரிக்கை. நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்படும் பணத்தை திருப்பித் தரவேண்டுமென்பதற்காகவே, இவ்வளவு மெனக்கெடுகிறார், அவர். அரசியல் பின்புலத்தை காட்டி மிரட்டி ஏமாற்றி வருகிறார். போலீசார் உரியமுறையில் அழுத்தம் கொடுத்தாலே, பணத்தை தந்துவிடுவார் என்கிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
– மணிகண்டன்.