வாயை மட்டுமல்ல … ரெட் பிக்ஸ் சேனலையும் மூடு! நிபந்தனை ஜாமீனில் ஜெரால்டு!
வாயை மட்டுமல்ல … ரெட் பிக்ஸ் சேனலையும் மூடு! நிபந்தனை ஜாமீனில் ஜெரால்டு ! ஒருவழியாக 80 நாட்களை கடந்த சிறைவாசத்துக்கு பிறகு , ரெட் பிக்ஸ்பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பெண் போலீசார்களை இழிவாகவும் அவதூறாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் . சவுக்கு சங்கர் கைதுக்கு காரணமாக அமைந்த அந்த நேர்காணலை வெளியிட்டது ரெட் பிக்ஸ் சேனல். அந்த விசயத்தில் சவுக்கு சங்கர் கருத்துடன் பெலிக்ஸ் ஜெரால்டும் உடன்பட்டு போனதால், நேர்காணல் நடத்திய போதே சவுக்கு சங்கரின் வரம்பு மீறிய பேச்சை தடுத்து நிறுத்தவில்லை.
வீடியோ லிங்
அவரது வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எடுத்து கொடுத்து நேர்காணலை நடத்தியிருந்தார் பெலிக்ஸ் ஜெரால்டு. நேரலை அல்லாமல், முன்னரே பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பெலிக்ஸ் நினைத்திருந்தால் நீக்கி வெளியிட்டிருக்க முடியும்.
ஆனாலும் அவ்வாறும் செய்யவில்லை. இதன் காரணமாகவே, ரெட் பிக்ஸ் ஜெரால்டும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சவுக்கு சங்கருக்கு நேர்ந்தது போலவே, அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் இவருக்கு எதிராகவும் வழக்குகள் பதிவாகின. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் பெலிக்ஸ் ஜெரால்டு.
“நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும்; ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதாகவும்” கூறி ஜாமீன் வழங்குமாறு தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
நிறைவாக, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது.
“உள்நோக்கத்துடன் இந்த கேள்விகளை மனுதாரர் கேட்டிருப்பதாகவும்; தொடர்ந்து இது போன்று செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும் சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் செயல்பட்டார் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மருதாச்சலம்.
மேலும், “ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும்; அதில் வழங்கிய உத்தரவாதத்தை மீறி உள்ளதாகவும்; எனவே, சேனலை மூட உத்தரவிட வேண்டும் எனவும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார், வழக்கறிஞர் மருதாச்சலம்.
பெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், “கடந்த 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருவதாகவும்; சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும் தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும்; இதற்காக மன்னிப்பு கோருவதாகவும்; விசாரணை முடிவடைந்து விட்டதாகவும்; இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும்; நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதங்களை முன் வைத்தார்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, “RedpiX சேனலை மூட வேண்டும்; இது குறித்து எந்த பேட்டியும் அளிக்க மாட்டேன் என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.
அங்குசம் செய்தி பிரிவு.