குடியிருப்போர் நலச்சங்கம் எனும் பெயரில் நடக்கும் பெருங்கூத்து !
கடந்த 17 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சென்னையில் இருந்திருக்கிறேன். தியாகராய நகரில் 2 வீடுகள், நங்கநல்லூரில் 2 வீடுகள், திருவான்மியூரில் 2 வீடுகள், பெசன்ட் நகரில் 1 வீடு, படூரில் ஒரு வீடு எனச் சுற்றியிருக்கிறேன். இவற்றில் தனி வீடுகள், மொட்டை மாடியில் போடப்பட்ட கூரை வீடுகள், காப்பாளர் உள்ள அடுக்ககம் இல்லாத அடுக்ககம் என அனைத்தும் அடங்கும். எப்படியும் 100 வீடுகள் பார்த்திருப்பேன். ஆனால் இப்போது நடக்கும் அடாவடியைப் போல் கண்டதில்லை.
குடியிருப்போர் நலச்சங்கம் எனும் பெயரில் பெருங்கூத்தாக இருக்கிறது. நேற்று ஓர் அடுக்ககம் பார்க்கப் போனேன். அந்தச் சங்கமே சும்மா இருக்கும் வீடுகளின் சாவியை வாங்கிக் கொண்டு காட்டும் ஏற்பாடு. உள்ளே போக வேண்டுமெனில் 250 கட்ட வேண்டும். கட்டினால் அடுத்த மூன்று மாதங்கள் போய்ப் பார்த்துக்கொள்ளலாம். ஒரு வேளை வீடு அமைந்தால், ஒரு மாத வாடகை அவர்க்கு கொடுக்க வேண்டும்.
பொதுவாகத் தரகர்கள் நம்முடன் சேர்ந்து அலைவார்கள், வாடகைப் பேரம் செய்வார்கள், உழைப்பார்கள். அரை மாத வாடகையோ ஒரு மாத வாடகையோ வாங்கிக்கொள்வர். அதுதான் அவர்க்குத் தொழிலே.
ஆனால் இது குடியிருப்போருக்காகவே அமைக்கப்பட்ட நலச்சங்கம். அவர்கள் அடுக்ககத்தில் இருக்கும் அந்தச் சங்கத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டை வாடகைக்கு இருக்கிறது எனச் சொல்ல ஒரு மாதத் தொகையெனில் என்ன மாதிரி பொறுக்கித்தனம்? அதில் அவர்கள் வேலையென்னவெனில், திறவுகோலை நம்மிடம் கொடுப்பார்கள். நாம் போய்ப் பார்த்துவிட்டு வந்து கொடுக்க வேண்டும். அதற்குத்தானே நலச்சங்கம் ஊழியர்க்கு திங்களூதியம் கொடுக்கிறது? இதை அங்கிருக்கும் வீட்டுரிமையாளர்களும் ஏற்பதுதான் கேளிக்கை. எவனோ ஒருவன்தானே கொடுக்கிறான் எனும் எகத்தாளம். இணையத்தளங்கள் வழி நாம் கண்டடைந்த வீடுகளாயினும் அவற்றின் திறவுகோல் இவர்களிடம் இருந்தால் அந்தத் தரகுத் தொகை தரத்தான் வேண்டும்.
இதையெல்லாம்விடக் கொடுமை வீட்டுக்குக் குடி போனால் 2,000 ரூபாய் கட்ட வேண்டுமாம். எதற்கெனில் அவ்வடுக்கக மின்தூக்கியைப் பயன்படுத்தவாம். அதற்குத்தான் திங்கள்தோறும் பராமரிப்புத் தொகை கொடுக்கப் போகிறோம். மின்தூக்கியைப் பழுதாக்கிவிட்டால் என்செய்வது எனும் கேள்வி எழலாம். முதலில், அங்கேதான் குடி போகப் போகிறோம். ஓடியா போய்விடமுடியும். இரண்டாவது, அதற்கென ஒரு தொகையை வாங்கி வைத்துக்கொள்ளலாம். நம் வேலை முடிந்ததும் எதும் பழுதில்லையெனில் திருப்பிக் கொடுக்கலாம். அதுதான் இயல்பு. அதுதான் அறம். அதுதான் முன்னர் நான் பார்த்திருக்கும் நடைமுறை.
இருக்கும் வெறுப்பில் யாரையேனும் இரண்டு அறை அறைந்துவிடுவேனோ எனும் அச்சமே மேலிடுகிறது. நலச்சங்கம் என்பதற்குப் பதில் கெடுசங்கம் என வைத்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
— பாலாஜி மூர்த்தி