பட்டை சோறு , பில்டப் கொடுத்த புரட்சி தமிழன் பட்டமும் !
ஆகஸ்டு 20 அன்று மதுரையில் நடைபெற்ற ”அதிமுகவின் எழுச்சி மாநாடு” தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மாநாடு தொடங்குவதற்கு முன்னர் வரை, இத்தனை ஏக்கர் பரப்பில் மாநாடு பந்தல் போடுகிறார்கள். மழை பெய்தாலும் தொண்டன் நனையாமல் இருக்க தகரத்தால் வேய்ந்திருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் தொண்டனை தாக்காமல் இருக்க துணிகளை கொண்டு வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.
மூன்று வேளை பசியாற அறுசுவை உணவு போடப்போகிறார்கள். அதனை அகலமான பாக்குத்தட்டில் வைத்து மூன்று கவுண்டர்களில் பரிமாறப்போகிறார்கள் என்றெல்லாம் மாநாட்டு செய்திகளை ‘கவர்’ செய்தார்கள்.
பின்னர், முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் மதுரையில் பூகம்கம் வந்துவிட்டதோ என்று ஒரு நிமிடம் ஜர்க் ஆகுற மாதிரி, சொல்லி வைத்தாற் போல அச்சு – டிஜிட்டல் ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் ‘மதுரை குலுங்கியது’ என்றே வர்ணித்தார்கள்.
மாநாடு நடந்து முடிந்த மறுநாளே, பிளேட்டை திருப்பிப்போட்டுத் தட்ட ஆரம்பித்துவிட்டார்கள். திமுக ஆதரவு ஊடகம் ஒன்று மாநாட்டு பந்தலில் பட்ட சோறு அண்டாவோடு கவிழ்த்து கொட்டப்பட்டதை செய்தியாக வெளியிட, மற்ற ஊடகங்களும் பட்டை சோற்றை படம்பிடிக்க வரிசை கட்டி கிளம்பிப்போனார்கள். அறுசுவை உணவு என்று ஆரம்பித்து, கடைசியில் புளிசோறும் சாம்பார் சாதமுமாக மாநாட்டு மெனு மாறிப்போனதன் மர்மத்தை ஆராய்ந்தார்கள்.
சமையல் செஞ்சவங்க, சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவங்க, அமைச்சர் வரைக்கும் மைக்க நீட்டி கருத்துக்களையும் வெளியிட்டாங்க. மைதா பசை போல பிசுபிசுன்னு இருந்துச்சு… அண்டாவுல அடி புடுச்சி இருந்துச்சு… பட்ட சோறு உதிரியா இல்லாம பொங்கல் மாதிரி கல்லா கெடந்துச்சுனு பி.எச்.டி. பன்ற அளவுக்கு விரிவான ஆராய்ச்சியும் நடத்தி முடித்தார்கள்.

பட்ட சோற்று விவகாரத்தை முடித்து வைத்த கையோடு, அடுத்த ஆராய்ச்சிக்கு மாநாட்டு திடலில் எடப்பாடியாருக்கு பில்டப்பாக வழங்கப்பட்ட ’புரட்சித் தமிழன்’ பட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள். மைக்கை நீட்டினாலே பொளபொளவென கொட்டும் புகழேந்தியை பிடித்தார்கள். நடிகர் சத்யராஜுக்கு ஏற்கெனவே கொடுத்த பட்டத்தை, அப்படியே எப்படி எடப்பாடியாருக்கு கொடுக்கலாம் என்றார்கள். எடப்பாடி அப்படி என்ன புரட்சி செய்துவிட்டார் என்ற கேள்வி எழுப்பினார்கள்.
கடைசியாக, பட்டத்தை வழங்கியவர்களுள் ஒருவரான நிலையூர் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகளின் வாயையும் கிளறினார்கள். அவர் ஒரே போடாக, ”வந்து கேட்டார்கள். அரசியல் கட்சி விவகாரம் என்பதால் முதலில் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். பின்னர், நீங்கள் மட்டுமில்லை கிறிஸ்துவ, இசுலாமிய மதத்தை சேர்ந்த தலைவர்களுமாக சேர்ந்து கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டதால் சம்மதித்தேன்.
அப்போதும்கூட, அதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.” என்று ஒரே போடாக போட்டு தாக்கிவிட்டார். என்ன ஒன்று, எடப்பாடியாருக்கு ’புரட்சித் தமிழன்’ என்ற பட்டம் கொடுத்ததை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று நிலையூர் ஆதினம் சொல்லாதது ஒன்றுதான் பாக்கி.
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, மதுரை முழுக்க பச்சை பசேலென்ற வண்ணத்தில் ’புரட்சித்தமிழர்’ எடப்பாடியார் வாழ்க! என்று போஸ்டர் அடித்து ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன்.
வே.தினகரன், ஷாகுல், படங்கள்: ஆனந்த்