இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து……….
இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து………. வள்ளி கும்மியும் – உறுதிமொழி வாங்கலும் – ஜாதிய இறுக்கமும் – பாரம்பரிய பெருமையும் – மத மூடநம்பிக்கைகளும் – பெண்கள் மீதான தாக்குதலும்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்து திராவிட மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இக் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார். இவரது மகள் ரிதன்யா (வயது 27).
இவருக்கும் திருப்பூர் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (வயது 28) இவர் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
2 நாட்களுக்கு முன்பு அவிநாசி பகுதியில் ரிதன்யா கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை மற்றும் உடல் ரீதியாக மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக காரிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு இறந்தது இந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
இந்தப் பகுதியில் வசிக்கும் மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வர்க்க குடும்பங்களில் இதுதான் இன்றைய பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.
ரிதன்யா தன் தந்தைக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜை கேட்பவர்களின் மனம் உடைந்து போகும்.கண்களில் கண்ணீர் வரும். அவ்வளவு உருக்கமான இயலாமையில் பரிதாபகரமான அழுகுரலிலான அந்த பேச்சு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மிகுந்த மனவேதனை அந்த வாய்ஸ் மெசேஜ் தருகிறது.
வள்ளி கும்மி நடத்தி பெண்களிடம் உறுதி மொழியை மிரட்டி வாங்குவதுபோல் வாங்கும் நபர்கள், அந்தப் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும் சக மனுஷியாக மதிக்கவும், தோழமையுடன் நடத்தவும் அங்கு குழுமி இருந்த இளைஞர்களிடம் உறுதிமொழி ஏன் வாங்குவதில்லை ?
குறைந்தபட்சம் அந்தப் பெண்களின் பாதுகாப்பு குறித்தாவது இவர்கள் கவலைப்பட்டு இருக்கிறார்களா ?
வெட்டியான கௌரவம்,போலியான கட்டமைக்கப்பட்ட ஜாதிப் பெருமிதம்,
இதனுடன் பின்னிப்பிணைந்திருக்கும் மத மூட நம்பிக்கைகள் இவை அனைவரையும் மிக மோசமாக பாதிக்கக் கூடியது.குறிப்பாக சாதிய இறுக்கம் மிகுந்த பகுதிகளில் மிக அதிகமான தாக்குதல்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மீதுதான் நிகழ்த்தப்படுகிறது.
அந்த பெண்ணின் வாட்ஸ் அப்.வாய்ஸ் மெசேஜில் இருந்து மீடியாவில் வெளிவந்ததில் இருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடிய முக்கியமான சில செய்திகள் இருக்கின்றன.
1) ஒருத்தனுக்கு ஒருத்திதான். வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் நடக்க வேண்டும்.
2) இன்னொரு வாழ்க்கை தேர்வு செய்வது அசிங்கம்.
3) என் தலையெழுத்து படி தானே நடக்கும்?
அந்தப் பெண்ணின் இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு ?
இதையெல்லாம் உண்மை என்று அவரை நம்ப வைத்து அவர் மூளையில் ஏற்றியது யார் ?
மத மூடநம்பிக்கைகளும், ஜாதிய இறுக்கங்களும் ,கற்பு குறித்த கற்பிதங்களும், தலையெழுத்து, கடவுள் செயல் போன்ற மூடநம்பிக்கைகளையும் இந்தப் பெண்ணிற்கு சிறு வயது முதல் அவரைச் சுற்றி இருக்கும் குடும்ப அமைப்பும் அவரைச் சுற்றிய சமுதாய சொந்தங்களும் ஜாதிப் பெருமிதம் மிகுந்த பெரிய மனிதர்களும் தான் இதற்கு முழுப் பொறுப்பு,காரணம்.
இவற்றையெல்லாம் நம்பிய அந்தப் பெண் இறுதியில் தன்னுடைய முடிவாக தன் அனுபவத்தின் ஊடாக ஒரு தெளிவான அறிவிப்பை கொடுக்கிறார் இது அவர் வார்த்தையிலேயே கீழே குறிப்பிட்டுள்ளோம்.
“கோவிலுக்கு போவது,பஞ்சாங்கம் பார்ப்பது இதனால் எந்த ஒரு பிரச்சனையும் தீராது என்பதை ரொம்ப தெளிவாக தெரிந்து கொண்டேன். ” என்று அவர் கூறுகிறார்.
எனவே அவர் அனுபவத்தின் ஊடாக உண்மையை கண்டறியும் திறன் பெற்று இருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
இன்னும் அவருக்கு மன உறுதியை கொடுத்து ஆறுதல் சொல்லி தைரியத்தை வரவழைத்து பிரச்சனையை எதிர்கொள்ளும் துணிச்சலை கற்றுக் கொடுத்திருந்தால் அந்தப் பெண்ணும் கற்றுக் கொண்டிருந்திருப்பார் அந்த திறன் அவருக்கு இருந்திருக்கிறது மாறாக இவற்றைக் கற்றுக் கொடுக்காத காரணத்தினால் இந்த கொடூரமான முடிவு அந்த பெண்ணிற்கு நேர்ந்திருக்காது.
இவற்றைக் மத மூடநம்பிக்கை ஜாதிய இறுக்கம் உள்ள பின்னணி உள்ளவர்கள் கற்றுக் கொடுக்க முடியாது.ஏனென்றால் அவர்களே இதில் அமிழந்து போய் இதை உண்மை என நம்பிக் கொண்டு இருப்பவர்கள்.
ஜாதி மதம் அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் சடங்குகள் ஜாதகம் ஜோதிடம் பரிகாரம் சிறப்பு பூசைகள் இவை பிரச்சனையின் உண்மையான கோணத்தை காட்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றன.
இந்தப் பெண்ணின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பரிகாரம் செய்தவர்கள், தோஷம் கழித்தவர்கள்,ஜாதகம் பொருத்தம் பார்த்து சொன்னவர்கள் அனைவரும் பணம் பெற்றுக் கொண்டு பொய் பேசி இந்த பெண்ணையும் அவரது பெற்றோரையும் ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் செய்த எதுவும் இங்கே பலிக்கவில்லை. மாறாக பெண்ணுக்கு ஏமாற்றமும் அதனால் கொடூரமான முடிவும் நிகழ்ந்திருக்கிறது.
இதற்கு பரிகாரம் செய்தவர்கள் ஜாதகம் பார்த்தவர்கள் அனைவரும் பொறுப்பு அனைவரும் குற்றவாளிகள் தான். இதிலிருந்து நம் அடுத்த தலைமுறை குழந்தைகள் இளம்பருவ பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
1.ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் கிடையாது. மனம் முடித்தவன் உடன் வாழ லாயக்கற்றவன் என்றால் அவனை உடனடியாக திருமணம் முறிவு செய்வதற்கு தயாராக பெண்கள் இருக்க வேண்டும்.
2.இன்னொரு வாழ்க்கையை தேர்வு செய்வது என்பது அசிங்கம் அல்ல. வாழ்க்கை வாழ்வதற்கே அதுவும் சுதந்திரமாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இன்னொரு திருமணம் தான் வாய்ப்பு என்றால் அதை தெரிவு செய்வது தான் அப்பெண்ணிற்கும் அவர் சார்ந்த உறவினர் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்.
3.தலையெழுத்து, கடவுள் செயல் என்றெல்லாம் எதுவும் இல்லை.அறிவு கொண்டு சிந்தித்து சிக்கல்களை தீர்க்கும் வழி வகைகளை நாம் தான் தேடி கண்டறிய வேண்டும்.
இந்த சிந்தனைகளை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு.
அவர்கள் துயரத்தில் துன்பத்தில் வருத்தத்துடன் வரும் பொழுது ஆறுதலும் அரவணைப்பும் கொடுத்து துணிச்சலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொடுக்க வேண்டியது கடமையும் பொறுப்பும் ஆகும். அப்பொழுதுதான் இன்னொரு ரிதன்யாவின் அழுகுரல் இந்த சமூகத்தின் காதில் ஒலிக்காமல் இருக்கும்.
பின் குறிப்பு :
நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை, மறுமணம் செய்யும் உரிமை, வேலைவாய்ப்பில் சம உரிமை,சொத்தில் சம உரிமை குறித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தது மட்டுமல்ல தேவைப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தி சட்டங்களை திருத்தி புதிய சட்டங்களை இயற்றி பெண்களுக்காக பாடுபட்ட இயக்கம் பெரியார் இயக்கம் திராவிடர் இயக்கம்.இன்று அளவிலும் இந்த விழிப்புணர்வு பணியில் நாளும் நாளும் மக்களை சந்தித்து இயங்கிக் கொண்டிருப்பது திராவிடர் இயக்கம்.