ஆர்.ஓ வாட்டர் அவசியமா ? ஆபத்தானதா ?

0

ஆர்.ஓ வாட்டர் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை –  பூமியின் முக்கால் பங்கு தண்ணீரால் சூழ்ந்திருந்தாலும் பருகுவதற்கு உகந்த நீர் என்பது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கிறது.

பொழியும் மழையானது மலை உச்சிகளில் இருந்து சுனைகளாகி ஓடைகளாக உருமாறி ஓடைகள் ஒன்றிணைந்து பின் அருவிகளாக வீழ்ந்து ஆறுகளாகப் பயணம் செய்து ஆங்காங்கே அணைகளாக நின்று கால்வாய் வழியோடி குளங்கள் கண்மாய்களை நிரப்பிப் பின் ஆழியில் கலக்கின்றன.

இந்த நீர் சுழற்சியில் நிலத்தடியிலும் நீர் சென்றடைகிறது. அதில் நன்னீரும் உண்டு. உப்பு நீரும் உண்டு . இவ்வாறாக வளர்ந்து முன்னேறிய நகரங்களில் கிராமங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலம் பருகுவதற்கான நன்னீர் – நிலத்தடி குழாய்கள் மூலம் வீடுகளை வந்து அடைகின்றன. இன்னும் பல இடங்களில் வறட்சி நிலவும் இடங்களில் /காலங்களில் மக்கள் ஆர். ஓ நீரைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது.

பெரும் தொழில் நிறுவனங்கள் முதல் பேரடுக்கு மாடிக் கட்டிடங்கள் வரை ஆர். ஓ நீர்க் குடுவைகளை நம்பி இருக்கும் சூழல் உள்ளது. பல வீடுகளிலும் தங்களது சமையலறையில் ஆர். ஓ சாதனம் பொருத்தப்பட்டு அதில் இருந்து வரும் நீரைப் பருகும் சூழலும் உள்ளது.ஆர். ஓ நீர் பருகுவதற்கு உகந்த நீரா? நீரைப் பருகுவதற்கு முன் அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்

- Advertisement -

- Advertisement -

முதல் அம்சம் பருகும் நீர் – குடிக்கும் சுவையுடன் இருக்க வேண்டும். குடிப்பதற்கு ஒவ்வாத கார்ப்புச் சுவையில் உப்பு கலந்து இருக்கும் நீரை யாரும் அருந்துவதில்லை . இரண்டாவது அம்சம் சுத்தமானதாக இருக்க வேண்டும் இந்த சுத்தத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்

ஒன்று கண்ணால் காணும் சுத்தம் மற்றொன்று நுண்ணியிரிகளில்லாத சுத்தம் கண்ணால் காணும் போது தண்ணீரானது கலங்கல் இல்லாமல் எந்த மண் சேறு இல்லாமல் நிறமேதுமற்று இருக்க வேண்டும்.

மேலும் அவற்றுள் கலந்திருக்கும் அமிழ்த்தப்பட்டுள்ள மொத்த திடப்பொருட்களின் அளவுகள் ( TOTAL DISSOLVED SOLIDS ) குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாக இதை TDS என்று இனி அழைப்போம்.

இந்த TDS இல் – உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கனிமங்களான கேட்மியம் , அஸ்பெஸ்டாஸ், ஈயம் , இரும்பு போன்றவையும் – உடலுக்கு நுண்ணிய அளவில் தேவையான கனிமங்களான மெக்னீசியம் , கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் அடங்கும்.

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நீரின் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 500 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் இருப்பது பருகுவதற்கு உகந்ததாகும் . உலக சுகாதார நிறுவனம் இந்தத் தரத்தை டிடிஎஸ் அளவுகள் ஒரு லிட்டருக்கு 300 மில்லிகிராம் அல்லது பிபிஎம் என்ற அளவுக்குள் வைக்கக் கூறுகிறது.

(நீரின் தரத்தையும் பிபிஎம் அளவுகளைப் பரிசோதனை செய்வதற்கான அளவுமானி எளிய விலையில் சந்தையில் கிடைக்கிறது.) இந்த பிபிஎம் அளவு குறைந்தபட்சம் 50 மில்லிகிராம் அளவாவது பருகும் நீரில் இருக்க வேண்டும் என்ற நிர்ணயத்தையும் உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கிறது

இதற்கான காரணம் நீரை ஆர். ஓ தொழில்நுட்பம் என்பது சிட்டி ரோபோ போன்று “அவன் போடுன்னா போட்ருவான் மா” அவன்கிட்ட டிவிய ஆன் பண்ணுனு சொல்லணும்” என்பாரே அது போன்று வடிகட்டு என்றால் நல்லது எது கெட்டது எது என்றெல்லாம் அதற்குத் தெரியாது.

அமிழ்த்தப்பட்டுள்ள திடப்பொருட்கள் அது மனிதனுக்கு நல்லது செய்தாகட்டும் அல்லது கெட்டது செய்வதாகட்டும் கிட்டத்தட்ட அனைத்துமே எதிர்திசை சவ்வூடு பரவல் மூலம் வடிகட்டும் சவ்வால் பிடித்து வைத்துக் கொள்ளப்படுகிறது

இதன் விளைவாக கிட்டத்தட்ட எந்த கனிமங்களும் இல்லாத நீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரில் உப்பு அறவே இருக்காது என்பதால் பருகுவதற்கு நல்ல சுவையில் இருக்கும்.

முதல் அம்சத்தில் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் இரண்டாவது அம்சமான சத்தத்தில் மைக்ரோபயாலஜிகள் ஃபிட்னஸ் எனப்படும் நுண்ணியிரிகளிடத்தில் இருந்து முழு சுத்தமாக இருக்கிறதா?

ஆம்… இல்லை என்று இருபதில்கள் தரலாம். எதிர்திசை சவ்வூடு பரவல் கார்பன் வடிகட்டிகள் புற ஊதாக்கதிர்கள் பாய்ச்சுதல் ஓசோன் வாயுவில் புகச்செய்வது மூலம் நாம் அருந்தும் வாட்டர் கேன் நீர் சுத்தம் செய்யப்படுவதால் அதில் பாக்டீரியாக்களோ வைரஸ்களோ மற்றும் அவற்றின் முட்டைகளோ நுண் வடிவங்களோ முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.

ஆர் ஓ நீர் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் கிருமிகளற்ற சுத்தமாக இருந்தாலும் அதை விநியோகிக்கும் கொள்கலன்கள் , அவற்றை சேமித்து வைக்கும் குடுவைகள் ஆகியவற்றின் தூய்மையும் இதில் முக்கியம்.

நம் வீடுகளில் இருக்கும் ஆர் ஓ இயந்திரங்களில் கார்பன் வடிகட்டிகளும் மைக்ரான் அளவுகளில் வடிகட்டும் சவ்வு வடிகட்டிகளும் மட்டுமே இருப்பதால் பாக்டீரியாக்கள் நன்றாகத் தடுக்கப்பட்டாலும் ஹெப்பாட்டைட்டிஸ் போன்ற நானோ அளவு நுண்ணிய வைரஸ்கள் தப்பித்து வந்து விடும் வாய்ப்பு குறைவான அளவு உண்டு.

எனினும் வீட்டு ஆர்.ஓ சிஸ்டம் என்பது பெரும்பாலும் நமது நிலத்தடி ஆழ்துளை நீரில் பொருத்தப்பட்டிருப்பதால் பெரும்பாலும் அத்தகைய கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவே.

எனினும் நமது ஆழ்துளை நீரில் மனித மற்றும் மிருகக் கழிவுகள் சேர்ந்து அசுத்தமாகும் சூழல் இருப்பின் அதன் மூலம் அந்த நீரில் கிருமிகள் கலந்திருக்கும் அரிதான வாய்ப்பு உண்டு.

வீட்டில் அடிக்கடி உறுப்பினர்களுக்கு வாந்தி பேதி உண்டானால் நீரின் கிருமிகளற்ற தூய்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நீரை மைக்ரோபயாலஜிகல் டெஸ்டிங்குக்கு அனுப்பலாம்.

இந்த சூழ்நிலையில் ஆர்.ஓ நீராகவே இருப்பினும் அதை நன்றாகக் கொதிக்க வைத்துப் பருகுவதற்குப் பயன்படுத்தலாம்.

4 bismi svs

இதற்கடுத்த நிலையில் வருவது
டிடிஸ்

நீரின் டிடிஎஸ் அளவு 50 முதல் 300 என்ற அளவில் இருந்தால் நீரின் டிடிஎஸ் தரம் ஓகே

அதுவே 50 க்கும் குறைவாக இருப்பின் நீரில் தேவையான கனிமங்களான கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் போன்றவை கிட்டத்தட்ட இல்லை என்று பொருள்கொள்ளலாம்.

எனவே ஆர். ஓ நீரில் நமக்குத் தேவையான கனிமங்களை கனிமமேற்றம் செய்ய வேண்டும்.

இதை எப்படிச் செய்வது ?

மிக எளிதாக சிக்கனமாக இதைச் செய்வதற்கு

இமய மலை உப்பு எனப்படும் ஹிமாலயன் ராக் சால்ட் வாங்கி வைத்துக் கொண்டு நாம் பருகும் நீரில் 4 லிட்டர் நீருக்கு அரை டீஸ்பூன் (4 கிராம்) ஹிமாலயன் பிங்க் சால்ட் சேர்க்கவும். உப்பு படிமங்கள் நன்றாகக் கரையுமாறு கிளறி விட வேண்டும்.

ஹிமலாயன் பிங்க் சால்ட்டில் சோடியம் அளவுகள் நாம் உபயோகிக்கும் கடல் உப்பை விடக் குறைவு.
அதில் மனிதனுக்குத் தேவையான பல முக்கிய கனிமச்சத்துகள் உள்ளன. குறிப்பாக – கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிரம்பி உள்ளது.

எனவே நான்கு லிட்டர் நீரில் அரை டீஸ்பூன் இந்துப்பைக் கலந்து பருகுவது சிறப்பு.

இதற்கடுத்த முயற்சியாக, சந்தையில் கிடைக்கும் மினரல் ட்ராப்ஸ் எனும் சொட்டு மருந்தை வாங்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் பருகும் நீரில் கலந்து கொள்ளலாம்.

ரத்தக் கொதிப்பு நோயர்கள், இதய , சிறுநீரக , கல்லீரல் நோயாளிகளுக்கு பருகும் நீரில் இந்துப்பு சேர்க்காமல் மினரலைசிங் ட்ராப்ஸ் எனப்படும் சொட்டு மருந்து உபயோகப்படுத்துவது நல்லது.

மேலும் ஆர். ஓ வாங்கும் போதே அதில் ரீமினரலைசர் ( மீண்டும் கனிமங்களை ஏற்றும் வசதி) இருக்கிறதா? என்பதைப் பார்த்து வாங்கலாம். இதர ஆர் ஓக்களை விட காஸ்ட்லியாக இருக்கும். இந்த ரீமினரலைசர் தேவையான சத்துகளை மீண்டும் நீரில் சேர்த்து விடும் வேலையை செய்கின்றது.

மேலும் இத்தகைய வசதியற்ற ஆர்ஓ சாதனங்களை வைத்திருப்பவர்கள் – ரீமினரலைசேசன் காட்ரிட்ஜ் எனப்படும் சாதனத்தை தனியாகப் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கனிமங்கள் நீரில் சேர்க்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

இன்னும் நாம் சாப்பிடும் உணவில்
கால்சியம் , மெக்னீசியம் , பொட்டாசியம் நிறைந்த

காய்கறி,கீரைகள்
மாமிசம்
முட்டை
மீன்
நட்ஸ் / கடலை வகைகள்
பழங்கள் ( நீரிழிவு நோயர் தவிர்த்து)
போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் நமக்கு இத்தகைய மினரல்கள் கிடைக்கும்.

ஆர். ஓ நீரின் பிபிஎம் அளவுகளை அளந்து 50 க்கும் குறைவாக இருப்பின்
நீரின் மூலம் கிடைக்காத மினரல்களை அதில் ஏற்றம் செய்வதற்குரிய வேலைகளைச் செய்யலாம்

அல்லது

மாநகராட்சி / நகராட்சி வழங்கும் நீரை வடிகட்டி நன்றாகக் காய்ச்சிப் பருகலாம்.

தொடர்ச்சியாக கனிமங்கள் அற்ற நீரை அருந்தி கூடவே அத்தகைய கனிமங்கள் நிறைந்த உணவுகளையும் உண்ணாமல் நீண்ட நாட்கள் செல்லும் போது எலும்பு, நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. எனவே, பருகும் நீரின் சுத்தம் தரம் சுவை ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பருகுவோம்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.