தொடரும் சாலை விபத்துகள்… மவுனம் காக்கும் அதிகாரிகள்… பறிபோகும் அப்பாவி உயிர்கள் !
சட்டக்கல்லூரி மாணவர்கள் பலமுறை புகார்கள் கொடுத்தும் காவல்துறை தரப்பிலோ, நெடுஞ்சாலைத்துறை தரப்பிலோ எந்தவித நடவடிக்கைகளும் இல்லாததால் வருடத்திற்கு 5 மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களே விபத்தில் சிக்குகின்றனர் என்பது தான் அதிர்ச்சி.!
சேலம் டூ கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொம்படிப்பட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது அரசு சட்டக்கல்லூரி. இங்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தான் கடந்த 22.10.2025 அன்று காலை சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவி மதுமிதா தேவி (வயது-22) பேருந்தைவிட்டு இறங்கி சாலையை கடக்கும்போது, சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்து சம்பவம் சட்டக்கல்லூரி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்களிடம் பேசியபோது, “கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் மாநகர எல்லையான மணியனூர் பகுதியில் இயங்கிவந்த அரசு சட்டக்கல்லூரியானது கொம்படிப்பட்டிக்கு மாறியது. அப்போதே கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நெடுஞ்சாலைத் துறைக்கும், காவல் துறைக்கும் கல்லூரி அமைந்திருப்பதற்கான எச்சரிக்கை பலகைகள், வேகக் கட்டுபடுத்துவதற்கான எச்சரிக்கை பலகைகள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேல்தள நடைமேடைகள் அமைத்துத் தர வேண்டியும், அல்லது காவல் துறை தரப்பில் கல்லூரி நேரங்களில் சாலையை கடக்க உதவ காவலர்கள் அமைத்து தர வேண்டியும் மனு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மனுவுக்கு எந்தவித பதிலும் இல்லை. இதனால் வருடத்திற்கு 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்குகின்றனர். கடைசி கட்டமாக மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் நடவடிக்கை கேட்டு புகார் கொடுத்துள்ளோம். அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில் சாலையில் இறங்கி போராட முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

இதுகுறித்து சேலம் மாநகர நுண்ணரிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேக்ஷ் அதிகாரிகளிடம் பேசியபோது, “தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் போடக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி தடுப்பு பலகை அமைத்திருந்தோம். அது மேலும் விபத்தினை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், அதனை அகற்றிவிட்டோம். மேலும் கல்லூரி நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க மேலதிகாரியிடம் பேசி வருகின்றோம்” என்றார்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கக் கூடாது என்பதுதான் விதி. மேலும் சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி எதிரேயே அன்னப்பூர்னா மெடிக்கல் கல்லூரியும் அமைந்திருப்பதால், இரண்டுக்கும் சேர்த்தே மேல்தள நடைமேடைகள் போட முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மனது வைத்தாலே போதும். இதற்கு கல்லூரி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சேர்ந்து பரிந்துரை செய்தாலே போதுமானது” என்றனர்.
அரசு அடுத்தடுத்த ஆப்சன் வைக்காமல்.. மாணவர்களின் நலன் காப்பது என்பது தான் அனைவரின் வேண்டுக்கோளாக இருந்து வருகிறது.
— ஜெ.கே










Comments are closed, but trackbacks and pingbacks are open.