முருகன் கோயிலில் சாயிபாபா சிலை ! சத்தமின்றி திணிக்கப்படும் வட இந்திய ஆதிக்கம் !
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சாயிபாபா சிலை ! சத்தமின்றி திணிக்கப்படும் வட இந்திய ஆதிக்கம் ! தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுள் ஒன்றான சென்னை வடபழனி முருகன் கோவிலில் சாய்பாபா சிலை அமைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார், வழக்கறிஞரும் தமிழ் ஆர்வலருமான கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழர் ஆன்மீக இயக்கம் மற்றும் வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில், தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார், தமிழ் ராஜேந்திரன்.
அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “இணையதள வலைதள செய்திகள் மூலம் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் சாய்பாபா சிலை பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீது வட இந்தியர்களின் தாக்குதலின் ஒரு பகுதி தான் இது ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் சிவன் ஆலயம் முருகன் ஆலயம் போன்ற அனைத்து வகை ஆலயங்களிலும் காலம் காலமாக இருந்து வரும் சுவாமி சிலைகள் மட்டும்தான் பராமரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் புதிதாக வட இந்திய வழிபாட்டு முறைகள் மற்றும் வட இந்திய கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சுவாமி சிலைகள் எவற்றையும் அமைக்க கூடாது என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர் ஆன்மீக பெருமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழ் அர்ச்சகர்கள் தேவை தமிழில் வழிபாடு தேவை என்று வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், தமிழுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத சாய்பாபா சிலையை தமிழ்நாட்டின் உள்ள ஆலயங்களில் நிறுவுவதை தாங்கள் தடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
எனவே, மற்ற தமிழ்நாட்டு ஆலயங்களில் இது போன்ற சாய்பாபா சிலைகளை பொருத்த நடவடிக்கைகள் செய்யலாம் என்ற தமிழ் விரோதிகளின் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சாய்பாபா சிலையை உடனே அகற்ற விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இதன்மூலம் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தமிழ் ஆன்மீகவாதிகளை உள்ளாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மற்றும் தமிழர் நலம் நாடும் திராவிட அரசு தமிழ் ஆன்மீகவாதிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என நம்புகிறேன்.” என்பதாக உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார், தமிழ் ராஜேந்திரன்.
– மித்ரன்.