சேலம் கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா!
சேலம் மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சேலம் கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா கடந்த மாதம் ஜூலை 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, தொடா்ந்து 23 ஆம் தேதி கொடியேற்றமும், 29 ஆம் தேதி கம்பம் நடுதல், ஆகஸட் 4-ஆம் தேதி சக்தி அழைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி விடிய, விடிய ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். புதன்கிழமை சிறப்பு நிகழ்வாக உருளுதண்டம், தீச்சட்டி ஏந்திவந்தும், அலகு குத்தியும் சக்தி கரகம் எடுத்தும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். அன்று விழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்ய ஏதுவாக கோயில் தெற்கு வாசலில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதமாக கூழ், சா்க்கரை பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் வழங்கின. கோட்டை மாரியம்மனுக்கு நடப்பாண்டில் புதிதாக தோ் அமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு தேரோட்டம் மற்றும் மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதேபோல, சேலத்தின் பல பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களான அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை, சின்னக்கடைவீதி, குகை மாரியம்மன், காளியம்மன் மற்றும் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்