கழுத்தறுத்து திருநங்கை கொலை ! உடனிருந்த வாலிபா் மாயம் !
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக தன்னை மாற்றிக்கொண்டார். அதன் பிறகு தனது பெயரை கனி(18) என்று மாற்றிக் கொண்டார். அதன் பின்பு அப்பகுதியில் இருந்து வெளியேறி வடக்கு ரயில்வே காலனி பகுதியில் குடியேறியுள்ளார்.
அவருக்கு திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை உறவினர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது கனி தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கூச்சலிட அக்கம் பக்கத்தில் அங்கு திரண்டனர். பின்பு இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனியின் வாயில் துணி வைத்து அடைத்து இரும்பு ராடு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது தலை, முகம் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் தலைமறைவாக உள்ள நவீன் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநங்கை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சேலம் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.