மாநில கல்விக் கொள்கை – கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கோட்பாடு கைவிடப்பட்டதா ?
தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும், பள்ளிக் கல்விக் கொள்கை குறித்த ஆவணம் குறித்து, அதில் இடம்பெற்றுள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) யின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) யின் தலைவர் ரத்தினசபாபதி, மற்றும் பொதுச்செயலர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில்,

“பள்ளிக் கல்விக் கொள்கை என்ற ஆவணத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில், அந்தந்த மாநில மக்களின் தேவைகள், உணர்வுகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் தங்களது கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியும் என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டி உள்ளது. பிற மாநிலங்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் செயல்பாடு. மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையில் ஆங்கிலமும் என்ற அடிப்படையில் இரு மொழிக் கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும் என்பது தெளிவுபட கூறப்பட்டுள்ளது.
பிற மாநிலத்தைச் சார்ந்த மக்கள் வெவ்வேறு தாய் மொழியைக் கொண்டிருந்தால், அவரவர் தாய் மொழியை அவரவர் கற்க தேவையான வாய்ப்புகள், வசதிகள் செய்துத் தரப்படும் என்பதையும் தெளிவுபட கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
எட்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பிலும் எந்த மாணவரையும் நிறுத்தி வைக்காமல், அடுத்தடுத்த நிலைக்கு, குழந்தைப் பருவ மாணவர்கள் முன்னேறி படிக்க தேவையான சூழலை உருவாக்கவும், அதற்கேற்ப கற்றல் கற்பித்தல் அணுகுமுறை அமையவும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் முதல் ஆண்டு வாரியத் தேர்வு இல்லாமல், மேல் நிலைப்பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும் என்பதும் வளர்ந்த குழந்தைகளின் உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை.
ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல், பயிற்சி, குழந்தை நேயக் கற்றல் சூழல், மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்தும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைத் தருவதாக பள்ளிக் கல்வி செயல்பாடுகள் அமைந்திருக்கும் என்று கொள்கை தெரிவிக்கிறது.
கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கோட்பாட்டிற்கு நேரெதிராக மாதிரிப் பள்ளிகள் (Model Schools) மற்றும் தகைசால் (VETRI) பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கொள்கையில் மிகவும் கவலைத் தரும் அம்சமாக உள்ளது.
பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது.
இந்தியா விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் கடந்த பின்னரும் அனைவருக்கும் சமமானப் பள்ளிக் கல்வியை உத்தரவாதப் படுத்த இயலவில்லை என்பது மிகப் பெரும் வேதனை.
இன்றைய சமமற்ற கல்விமுறையை நீடிக்கச் செய்து, படிப்படியாக தனியாரிடம் கல்வியை ஒப்படைக்கும் சூழ்ச்சி நிறைந்ததாக உள்ளது என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்க்கு மிக முக்கியமான காரணம்.
மாநிலக் கல்விக் கொள்கையிலும் அத்தகைய பாகுபாடுகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தனித்தனியாக தராமல், மொத்தமாக 58,800 பள்ளிகள், மூன்று இலட்சம் ஆசிரியர்கள், 1.16 கோடி மாணவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கையைத் தந்து, அதை வலுப்படுத்தவும், விரிவாக்கவும் எந்த உத்தரவாதமும் இக்கொள்கையில் இடம் பெறவில்லை.
ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவது கற்றல் கற்பித்தல் செயல்பாட்டிற்கு அடிப்படைத் தேவையாகும். இது குறித்து கொள்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.
ஆசிரியர்கள் அல்லாத தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளிச் செயல்பாட்டில் தலையிடுவதும், தொண்டின் அடிப்படையில் பழைய மாணவர்கள் தொடங்கி, சமூகத்தின் அனைவரும் நிதி மற்றும் பள்ளித் தேவைக்கான பங்களிப்பு செய்வது என்பதும் கண்ணியமிக்க வாழ்க்கையைக் குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு உறுதிசெய்ய இயலாது.
மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கட்டணமில்லா கல்வியை அனைவரும் பெறுவதே கண்ணியமிக்க வாழ்வுரிமை.
மாநிலக் கல்விக் கொள்கையின் நோக்கம் சிறந்தது, அதேவேளையில், சமச்சீர்க் கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை அமையாததும், பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி தொடர நுழைவுத் தேர்வு இருக்காது என்ற திட்டவட்டமான அறிவிப்பு இல்லாததும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.
மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் கலைஞரின் சமச்சீர்க் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை சீராக அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. ” என்பதாக, கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.