தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு படையெடுக்கும் எஸ்.ஆர். குரூப் ! மணல் உரிமம் பெற்றது எப்படி ?
தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு படையெடுக்கும் மணல் எஸ்.ஆர். குரூப் ! உரிமம் பெற்றது எப்படி ? – ”எஸ்.ஆர். குரூப்பிடமிருந்து கை மாறுகிறதா, ஆற்று மணல் காண்டிராக்ட் ? அதிர வைக்கும் பின்னணி !” என்ற தலைப்பில் அங்குசம் இணையத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால், ஆளும் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தமுறை மீண்டும் அவர்களிடமே மணல் அள்ளும் உரிமையை கொடுத்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் மேலும் அவப்பெயரையும் சட்ட சிக்கலையும் உண்டாக்கிவிடும் என்று ஆளும் கட்சித் தரப்பில் விவாதிக்கப்பட்டுவரும் விவகாரங்களை குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான உரிமத்தை எஸ்.ஆர். குரூப் பெற்றிருப்பதாகவும்; ஆகஸ்டு முதல் வாரத்தில் மொத்தப் படையும் தமிழகத்திலிருந்து தெலுங்கானாவிற்கு படையெடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் பிரத்யேக தகவல் அங்குசம் இதழுக்கு கிட்டியிருக்கிறது.
இதற்கு முன்னர், தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ஆட்சியில் இருந்த சமயத்தில் ஒரு ஆறு மாத காலம் மணல் அள்ளி வந்தனர். சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாகவே, ஆந்திராவின் வாசுரெட்டியின் லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக தமிழகம் திருப்பியனுப்பபட்டனர்.
சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் ஆந்திராவுக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
இந்த நிலையில்தான், அதுவும் தமிழகத்தில் தொடர்ந்து மணல் அள்ளுவதற்கான உரிமம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது கேள்விக்குறியான நிலையில், தெலுங்கானாவில் கிரீன் சிக்னல் விழுந்திருக்கிறது. ஒருவேளை, தமிழகத்தில் தொடர்ந்து அனுமதி கிடைத்தாலும், கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டிக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறையின் கண்களில் சிக்கிக் கொண்டால், மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்ற கோணத்திலும் எஸ்.ஆர். குரூப் யோசிப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஆகவே, இப்போதைக்கும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தெலுங்கானா பக்கம் தொழிலைப் பார்க்க கிளம்புவதே புத்திசாலித்தனம் என்பதாக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூரின் முயற்சியால், எஸ்.ஆர்.குரூப்புக்கு இந்த உரிமம் வந்து சேர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து பிரிந்து தனிமாநிலமாக உருவெடுத்ததிலிருந்து பல்வேறு அரசியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வடமாநிலங்களில் பாஜகவிடம் தோற்றுப்போன நிலையில், தெலுங்கானாவின் வெற்றி மட்டுமே காங்கிரசுக்கு ஆறுதலை கொடுத்திருந்தது.
இந்த வெற்றிக்கு காரணமானவர்களுள் முக்கியமானவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர்.
மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கான மாநிலத்திற்கான மேலிடப்பார்வையாளராக பணியாற்றியவர்.
அவர் மேலிடப்பார்வையாளராக இருந்த சமயத்தில், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து காங்கிரசு கட்சிக்கு வந்த ரேவந்த்ரெட்டியை அம்மாநில காங்கிரசு கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
ஆனாலும், அதனை பொருட்படுத்தாமல் ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவாக நின்று தேர்தலை எதிர்கொள்ள வைத்து முதல்முறையாக காங்கிரசின் ஆட்சி அமையவும் காரணமாக இருந்திருக்கிறார் மாணிக்கம்தாகூர்.
இந்தப் பழக்கத்தின் அடிப்படையிலிருந்தே, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான எஸ்.ஆர்.குரூப்புக்கு ஆதரவாக, பேசி தெலுங்கானாவில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான அனுமதியை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
தமிழகத்தைப் போலவே, தெலுங்கானாவிலும் ஆற்றுமணல் அள்ளுவதில் ஏகப்பட்ட விதிமீறல்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்ற போதே, ஆற்று மணல் அள்ளுவதில் யார் விதிமீறல்களில் ஈடுபட்டாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மிக முக்கியமாக, அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா போன்றவற்றில் ஆற்றுமணல் அள்ளுவது தொடர்பாக எந்தவிதமான அணுகுமுறைகளை கையாளுகிறார்கள் என்பதை ஆராய்ந்து அதிலிருந்து மணல் அள்ளுவது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதாகவும் முடிவெடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர். குரூப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றுமணல் அள்ளும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உருவாகி தெலுங்கானா வழியாக பயணிக்கும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான நதியான கோதாவரி மிக முக்கியமான ஆற்று மணலுக்கான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. அடுத்து, கிருஷ்ணா நதியும் ஒப்பீட்டளவில் மிக நீளமான ஆறுதான். இது தவிர மூசி, மஞ்சிரா, பலேறு ஆறுகளும் அடக்கம்.
ஏற்கெனவே, தெலுங்கானா மாநில கனிம வளர்ச்சிக் கழகத்தின் (TSMDC) ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆற்றுமணல் அள்ளுவதில் பெருமளவு முறைகேடு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில்தான், தமிழகத்தின் எஸ்.ஆர். குரூப் தெலுங்கானாவில் தொழில் செய்யப் போகிறது.
எஸ்.ஆர். குரூப் சார்பில், கரிகாலன் பெயரில் உரிமம் பெறப்பட்டிருக்கும் நிலையில், குடும்ப திருமண விழா ஒன்றுக்காகவே காத்திருக்கிறார்களாம்.
விழா முடிந்து, பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரிகள் சகிதமாக ஒரு பெரும்படையே தெலுங்கானவிற்கு பயணிக்க காத்திருக்கிறதாம். குறைந்தது தமிழகத்திலிருந்து 200 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 500-க்கும் குறைவில்லாத டிப்பர் லாரிகளுடன் எஸ்.ஆர். குரூப் தெலுங்கானாவிற்கு பயணப்படவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஆறுகள் பயணிக்கும் மாவட்டங்களில் உள்ள ”மணல் ரீச்”-களிலிருந்து மணலை அள்ளி; ஆறுகள் பயணிக்காத மாவட்டங்களில் “ஸ்டாக் யார்டு”களை அமைத்து தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரவலாக மணலை விநியோகிப்பதற்கான ஏற்பாட்டோடு கிளம்புவதாகவும் தகவல்.
மிக முக்கியமாக, அண்டை மாநிலங்களான கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை நீடிக்கும் நிலையில், எஸ்.ஆர். குரூப் தெலுங்கானாவில் உரிமம் பெற்றிருப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார்கள் என்கிறார்கள்.
மணலுக்கான தடை நீடிக்கும் கர்நாடகாவில் ஒரு லோடு ஆற்று மணலுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரையில் கொடுக்க வரிசை கட்டி நிற்கிறார்களாம். அப்புறம் என்ன, அப்படியே, ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு மணலை எப்படியாவது கொண்டு சேர்த்தால் கொள்ளை இலாபம்தான் என்கிறார்கள், இதன் சூட்சுமம் அறிந்தவர்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.