எஸ்.ஆர். குரூப்பிடமிருந்து கை மாறுகிறதா, ஆற்று மணல் காண்டிராக்ட் ? அதிர வைக்கும் பின்னணி !
எஸ்.ஆர். குரூப்பிடமிருந்து கை மாறுகிறதா, ஆற்று மணல் காண்டிராக்ட் ? அதிர வைக்கும் பின்னணி ! அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் ஒன்று இருந்ததாக, பழைய புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். சமகாலத்தில் ஆளும் அரசுக்கே படியளக்கும் அட்சயப்பாத்திரம் ஒன்று இருக்கிறதென்றால், அது ”ஆற்றுமணல்” அன்றி வேறல்ல. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சங்கதிகளில் இதுவும் ஒன்று.
தமிழகத்தில் தற்போது மணல் அள்ளுவதற்கான மொத்த உரிமையைப் பெற்றிருக்கும் மணல் ராமச்சந்திரன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர்ரெட்டி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். சசிகலா துணையோடு கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெற்ற மணல் அள்ளும் உரிமை, ஆட்சி மாறிய நிலையிலும் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் நிகழப்போவதாக சொல்கிறார்கள். பரமத்தி வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இரட்டை சகோதரர்களுக்கு கைமாறப் போவதாக பேச்சு அடிபடுகிறது.
இந்த அதிரடிக்கு காரணமே, அமலாக்கத்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் தான் என்கிறார்கள். தமிழகம் முழுவதும் விதியை மீறி மணல் அள்ளியதாகவும் அதன் வழியே கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டி, கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமலாக்கத்துறை.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த மணல் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், அவரது உறவினர் கோவிந்தன், கரிகாலன், பொதுப்பணித்துறையில் பணியற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.
அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டு மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனைகளையும் நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. எஸ்.ஆர். என்றழைக்கப்படும் மணல் எஸ்.ராமச்சந்திரன்; திண்டுக்கல் ரத்தினம்; புதுக்கோட்டை கரிகாலன் ஆகியோரிடம் தான் தமிழகம் முழுவதுக்குமான மொத்த மணல் காண்ட்ராக்ட் இருந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் செயல்படும் 28 குவாரிகளில் 490 ஏக்கரில் மணல் அள்ள நீர்வளத்துறையின் அனுமதியைப் பெற்றிருக்கும் இவர்கள், 2450 ஏக்கருக்கும் மேலாக மணல் அள்ளியிருக்கிறார்கள் என்பது அமலாக்கத்துறை முன்வைத்திருக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு. நீர்வளத் துறையின் பதிவேடுகளின்படி இவர்கள் அள்ளியது 4.05 இலட்சம் யூனிட் மணல்.
ஆனால், இஸ்ரோ-வின் உதவியோடு கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழுவை கொண்டு அமலாக்கத்துறை நடத்திய ஆய்வில் 27.70 இலட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களின் வழியே, மணல் விற்றதால் அரசுக்கு கிடைத்த வருமாணம் 36.45 கோடி. முறைகேடாக மணல் அள்ளிய வகையில் மணல் காண்டிராக்டர்கள் அள்ளிய தொகை 4,730 கோடி ரூபாய் என்கிறது, அமலாக்கத்துறையின் ஆய்வறிக்கை. ( இந்த புள்ளிவிவரத்தை அறிந்ததும் முதலில் அதிர்ச்சியடைந்தது ஆளும்கட்சி தான்.)
இவர்களோடு இல்லாமல், மணல் கொள்ளையை தடுக்க தவறிவிட்டார்கள் என்பதாக, தமிழகத்தின் 10 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை. முதற்கட்டமாக, திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலுார், அரியலுார் மாவட்ட ஆட்சியர்களை பல மணி நேரம் காத்திருக்க வைத்து வாக்குமூலம் வாங்கியது அமலாக்கத்துறை. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையில் தங்கள் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணல் காண்டிராக்டர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், தங்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம். அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் இந்த வழக்கு வராது.” என்று வாதிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும்; மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது என்றும் கூறி இவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்திருப்பதோடு, அவர்களது சொத்து முடக்கத்தையும் நீக்கி உத்தரவிட்டிருக்கின்றனர்.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, அமலாக்கத்துறை.
அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டு, கலெக்டர்கள் விசாரிக்கப்பட்டது குறிப்பாக, அவர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தது போன்றவையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக ஆட்சி மேலிடம் கருதுகிறதாம்.
மிக முக்கியமாக, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், தற்போதைய மணல் காண்டிராக்டர்கள் நேரடியாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும் அவருடைய மகனையும் சந்தித்து தனிப்பட்ட முறையில் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்தே, தங்களது ஆட்சியிலும் அவர்களுக்கே மணல் அள்ளும் உரிமையை தொடர்ந்து வழங்குவது என்பதாக ஆட்சி மேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
மணல் அள்ளும் உரிமையை எப்படியும் வாங்கிவிடலாம் என்று கணக்குப் போட்டுக் காத்திருந்த கரூர் குரூப் மற்றும் நாமக்கல் குரூப் கழக உடன்பிறப்புகளையும் மீறி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு எஸ்.ஆர். குரூப்பிடமே மணல் அள்ளும் உரிமையை தொடர அனுமதித்ததன் நோக்கம், நாம் வேறு விவகாரங்களில் – கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தலாம் என்று ஆட்சி மேலிடம் எண்ணியதுதானாம்.
ஆனால், எஸ்.ஆர். குரூப்போ தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆற்று மணல் என்றால் நாங்கள் மட்டும்தான் என்ற அதிகார மமதையில் இஷ்டத்துக்கும் ஆடியதாகவும் சொல்கிறார்கள். குறிப்பாக, பல இடங்களில் போலீசாரிடம் முரண்படுவது தொடங்கி, போலி ரசீதுகளை வைத்து வரைமுறையற்று மணல் அள்ளியிருக்கின்றனர். மணல் பிசினஸில் அளும் அரசுக்கே கட்டுப்படாமல், தனக்கென தனி சாம்ராஜ்யமாகவே மாறியதோடு, இத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்ததை கண்டு ஆளும் கட்சியே கொஞ்சம் ஆடித்தான் போனதாக சொல்கிறார்கள். அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு அவப்பெயரை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
ஒருகட்டத்தில், இதுவரை சம்பாதித்த காசை வைத்து நேரடி அரசியலிலும் இறங்கியதுதான், ஆளும் கட்சி தரப்பை சீண்டி பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். குறிப்பாக, மணல் ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான திண்டுக்கல் ரத்தினத்தினம் தன்னுடைய மகன் கே.கே.ஆர். வெங்கடேசை லோக்கல் திமுக கவுன்சிலர் ஆக்கினார். அதே நேரம் அவருடைய கூட்டாளியான புதுக்கோட்டை கரிகாலனின் சொந்த தம்பியான கருப்பையா என்பவரைத்தான், அதிமுக தரப்பில் திருச்சி தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கியிருந்தார்கள்.
ஆற்றுமணல் விற்பனை வழியே அள்ளிய பணத்தை கணிசமான அளவுக்கு தொகுதியில் வாரியிறைத்து எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதிலும் முனைப்பாக களமிறங்கினர். கருப்பையாவை போல, மணல் காண்டிராக்டர்கள் கைநீட்டிய நபர்கள் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் மிகத் தாமதமாகவே மேலிடத்தின் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
இதனால் கடுப்பான ஆட்சி மேலிடம் “எங்க ஆட்சியின் தயவில் சம்பாதிச்ச காசை வைத்தே, எங்களுக்கு எதிராக அரசியல் வேலை செய்வீர்களா?” என்று எகிற, சீனியர் அமைச்சர்கள் இருவர் தலையிட்டு, “எம்.பி. சீட்டா? மணல் காண்டிராக்டா?” என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நேரடியாகவே பேசியிருக்கின்றனர். இந்தப் பின்னணியிலிருந்தே, இவர்களுக்கே தொடர்ந்து மணல் ஒப்பந்தத்தை நீட்டித்தால், சம்பாதித்த பணத்தையெல்லாம் எடப்பாடியிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள். பிறகு, அந்தப் பணத்தை வைத்தே எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சிக்கு துணையாக நின்று நமக்கு கடும் சவாலை ஏற்படுத்திவிடுவார்கள் என்ற கோணத்திலும் ஆளும் தரப்பை யோசிக்க வைத்துவிட்டதாம்.
இது ஒருபுறமிருக்க, மணல் அள்ளும் தொழிலிலும் கூட தங்களைத் தவிர வேறு யாரும் கால் வைத்துவிட முடியாத அளவுக்கு தடுப்பு கோட்டைகளை கட்டியிருக்கின்றனர். கரூரிலிருந்து செல்வாக்கான தொழிலதிபர் ஒருவர் நேரடியாக மணல் ராமசந்திரனிடமே டீலிங் பேசியிருக்கிறார். “கரூர் மாவட்டத்தை மட்டுமாவது எங்களிடம் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். நமட்டு சிரிப்பு சிரித்தபடியே, அவர் தோளில் கைபோட்டு “அதெல்லாம் சரிபட்டு வராதுங்க.
உங்களுக்கு கொடுத்தா அந்த மந்திரி கேட்பாரு, அப்பறம் ஆளு ஆளுக்கு காசு கேட்பாங்க. சமாளிக்க முடியாது. நாங்க மொத்தமாக பேசி முடிச்சிட்டோம். நாங்க கொஞ்சம் வியாபாரம் செய்துகொள்கிறோம். இதுதான் தொல்லை இல்லாதது. வேற பாத்துக்கலாம்.”னு பதமா பேசி வழியனுப்பி வைத்திருக்கிறாராம் எஸ்.ஆர்.
இதையெல்லாம்விட, சொந்தக் கட்சிக்காரனையும் கூட எதிராக நிறுத்திய ஒரு விசயமாக அவர்கள் சொல்வது. மணல் அள்ளுவதில் ஏ டு இசட் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று எஸ்.ஆர். குரூப் நினைப்பது தான் என்கிறார்கள். மணல் அள்ளும் இயந்திரம் முதற்கொண்டு, டெலிவரி செய்யும் லாரி வரையில் அவர்களைத்தவிர வேறு யாரும் நுழைய முடியாது என்பதுதான். மணலில் அள்ளிய காசை அப்படியே வாகனங்களிலும் பெருமளவு முதலீடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழகம் தாண்டி இந்தியா முழுவதுமே சரக்குந்து சேவையில் தனக்கான தனி முத்திரை பதித்திருக்கும், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் இந்த விசயத்தில் நிறைய வருத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். எஸ்.ஆர். குரூப்பை தவிர்த்து வேறு யாருக்கேனும் மணல் காண்டிராக்டை மாற்றிவிட்டால், தங்களது சங்கத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் பயன்பெறுவார்கள் என்பதாக நினைக்கிறார்களாம்.
இந்தப் பின்னணியில் இருந்து தான் பரமத்திவேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான இரட்டை சகோதரர்களுக்கு மணல் காண்டிராக்டை கொடுக்க ஆளும் கட்சி மேலிடமும் ஏறத்தாழ முடிவு செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து, எஸ்.ஆர். குரூப்புக்கு எதிராக பாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டால் பெரிய மானக்கேடாகிவிடும் என்று கருதும் கட்சி மேலிடம், அதற்குள்ளாக இந்த மாற்றத்தை செய்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். காவிரி ஆற்றின் வழித்தடம் அனைத்தையும் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென பேச்சாம்.
ஒரு காலத்தில், தமிழகம் முழுக்க மணல் என்றால் இவர்தான் என்று ஒற்றை ஆளை கை காட்டும் ஜாம்பவான் என்பதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவரை அடையாளமாக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆறுமுகசாமியையடுத்து, திமுகவின் ஆட்சிக் காலத்தில் கரூரைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமி கோலோச்சினார்.
இவர்களின் காலத்திற்குப் பிறகு, கடந்த பத்து – பதினைந்து ஆண்டுகளாக மணல் பிசினஸில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வந்த எஸ்.ஆர். குரூப்பின் அதிகாரத்தை ஆட்டம் காண செய்திருக்கிறது அமலாக்கத்துறை.
இது ஆட்சிக்கும் கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தான், அந்த அவப்பெயரை போக்கும் வகையில் மணல் காண்டிராக்டை வேறு நபருக்கு மாற்றி கொடுக்கும் அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறதாம் கட்சி மேலிடம். மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதியைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், புதிய கட்டுமானங்களுக்கு அவசியத் தேவையான ஆற்றுமணல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்வதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும், இந்த மாற்றத்திற்கான முக்கியமான காரணமாக சொல்கிறார்கள். என்னதான் நடக்கிறதென்று, பொறுத்திருந்துதான் பார்ப்போமே !
– அங்குசம் புலனாய்வுக் குழு.