மணல் குவாரி விவகாரம் : அதிகாரிகள் பேச்சை அப்படியே நம்பலாமா ?
தமிழகத்தில் தீராத சிக்கலாக, ஆற்று மணல் விவகாரம் நீண்ட இழுபறியில் சிக்கித் தவிக்கிறது. சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கும் கதைதான் தமிழக ஆற்றுமணல் சிக்கல் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு காலத்தில், மணல் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தன்னிகரில்லா மணல் சாம்ராஜ்யமான எஸ்.ஆர். குழுமத்திடம்தான் தமிழகத்தின் மொத்த மணல் காண்ட்ராக்டும் இருந்தது. என்றைக்கு அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கியதோ, அன்று முதல் இன்று வரையில் அதில் எந்த ஒரு விடிவும் கிட்டவில்லை என்பதுதான் வேதனை.
தமிழகத்தில் மீண்டும் எஸ்.ஆர். குழுமத்திடமே, மணல் அள்ளும் உரிமையை வழங்கினால் கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கும் அமலாக்கத்துறையின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலேயேதான் எஸ்.ஆர். குழுமத்துக்கு மாற்றாக மற்ற நபர்களிடம் மணல் அள்ளும் உரிமையை வழங்கும் முடிவுக்கு வந்திருந்தது ஆளும் அரசு.
மேலிட பஞ்சாயத்துகள், சரியான ஆள் படை அம்புடன் கூடிய மணல் அள்ளும் காண்ட்ராக்டர்களை அடையாளம் காண முடியாத நிலை ஆகியவற்றால் அதுவும் வருட கணக்கில் தள்ளிப்போனது. ஒரு வழியாக, ஆளுக்கு ஒன்றாக மணல் அள்ளும் உரிமையும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எஸ்.ஆர். குழுமத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு தமிழகத்தில் மணல் அள்ளிவிட முடியாது என்பதற்காகவே, ஒரு குறிப்பிட்ட ஏரியாவும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதெல்லாம் கடந்த நான்கு வருடத்து கதைகள்.

இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் முடிந்தும்கூட, ஆட்சி முடியும் தருணத்தில் கிளைமேக்ஸ் கட்டத்தில்கூட, மணல் குவாரியை அரசு எப்போது திறக்கும்? திறப்பார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிப்பதுதான் உச்சக்கட்ட கொடுமை என்கிறார்கள். ஒருவேளை மணல் குவாரிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டால்கூட, வேறு பிழைப்பை தேடி போய்விடலாம் என்ற அளவுக்கு நொந்து போயிருக்கிறார்களாம் மணல் லாரி உரிமையாளர்கள்.
வழக்கின் பின்னணி :
அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காரணம் காட்டியே, தங்களது வாழ்வாதாராத்தையே அதிகாரிகள் குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்று பகிரங்கமாகவே, குற்றஞ்சாட்டுகிறார்கள் மணல் லாரி உரிமையாளர்களும் மணல் குவாரி தொழிலை நம்பி பிழைப்பவர்களும்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்ட விரோத மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறைக்கு கிட்டிய தகவல்களை தமிழக டிஜிபிக்கு பகிர்ந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளோடு நீதிமன்றத்தை அணுகியிருந்தது, அமலாக்கத்துறை.

தமிழகம் முழுவதும் 28 குவாரிகளில், சுமார் 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும்; இதன் மதிப்பு சுமார் ரூ 4730 கோடிகள் என்றும்; ஆனால் அரசுக்கு வெறும் ரூ 36.45 கோடி மட்டுமே வருவாய் கிடைத்திருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது அமலாக்கத்துறை.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில், ”தமிழக போலீசார் ஒன்றும் தபால்காரர்கள் அல்ல” என்று கடும் ஆட்சேபனையை பதிவு செய்திருந்தது.
”அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்படையிலானவை; நம்பகத்தன்மை இல்லாதவை; மணல் கொள்ளை வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததே சட்டவிரோதமானது” என்றெல்லாம் கடுமையான வாதங்களை தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான், இந்த வழக்கானது டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சாமியே வரம் கொடுத்தாலும் …
இந்த பின்புலத்தில்தான், இந்த வழக்கை காரணம் காட்டியே தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதியை அதிகாரிகள் வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருவதாக புலம்புகிறார்கள்.
குறிப்பாக, தமிழகத்தில் தற்போது தஞ்சாவூரில் நடுப்படுகை; நாமக்கல்லில் நன்செய் இடையாறு; இராணிப்பேட்டையில் சக்கரமநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் இப்போது அரசு அனுமதி அளித்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆற்று மணலை அள்ளிவிடலாம் என்ற அளவுக்கு தயார் நிலையில் இருக்கும் பட்சத்திலும், நிர்வாக ரீதியான அனுமதியை வழங்காமல் அதிகாரிகள் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி தங்களை வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அமலாக்கத்துறையின் நீதிமன்ற வழக்குக்கும் புதிய அனுமதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். அந்த வழக்கானது கடந்த காலத்தில் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் மோசடிகள் தொடர்பானவை. அதிலும் குறிப்பாக, எஸ்.ஆர். குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள். இதற்கும் தற்போதைய மணல் குவாரி நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புதியதாக மணல் குவாரிகளை திறக்ககூடாது என்றெல்லாம் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடவும் இல்லை. அப்படி இருக்க, இந்த வழக்கை காரணம் காட்டி எங்களது வாழ்வாதாரத்தை அதிகாரிகள் பறிக்கலாமா? என கொந்தளிக்கிறார்கள்.

ஆட்சி காலம் முடிய இன்னும் மூன்றே மாதங்கள் இருக்கும் நிலையில், கடைசி காலத்தில் மணல் குவாரிகளால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று அதிகாரிகள் எடுத்துவிட்ட கதையை நம்பித்தான் ஆளும் தரப்பும் கிரீன் சிக்னல் கொடுக்க யோசிப்பதாக சொல்கிறார்கள். இதில் குடும்ப ரீதியான பேச்சுவார்த்தைகள், பஞ்சாயத்துகளும் அடங்கியிருப்பதாலேயே அதற்கேற்ப அதிகாரிகள் அடக்கி வாசிப்பதாகவும் சொல்கிறார்கள்.
தவறு செய்தால்தானே, அமலாக்கத்துறையை கண்டு அஞ்ச வேண்டும். பின்வாங்க வேண்டும்? அப்படி இருக்க புதியதாக திறக்க இருக்கும் மணல் குவாரிகளை திறக்க அதிகாரிகள் ஏன் தடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள்.
ஏற்கெனவே, ஆற்றுமணல் விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்களை மணி கணக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கோப்புகளோடு காக்க வைக்கப்பட்டதை மனதில் வைத்துதான் ஆட்சி முடியும் நேரத்தில் நமக்கு ஏன் வம்பு. புதிய ஆட்சி வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அதிகாரிகளின் எண்ணம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள்.
அரசே ஏற்று நடத்தலாமே?
ஆற்று மணல் விவகாரத்தில், அமலாக்கத்துறை ஒரு பக்கம் மற்றும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவெடுக்கும் நிலையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றொரு பக்கம் என உருட்டி வருவதில் தமிழகத்தின் மையமான சிக்கல் அடிபட்டு போய்விடுகிறது என்பதுதான் வேதனையானது. தமிழகத்தில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட வீடு கட்டும் திட்டங்களின் கீழ் பரவலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர தனியார்கள் கட்டிவரும் கட்டிடங்களின் கணக்குகள் தனி வகை. கடந்த நான்கு ஆண்டுகளாக முறையான ஆற்று மணல் கிடைக்காமல், தரமான கட்டிடங்களை எழுப்ப முடியாமல், உள்ளூர் அளவிலான குவாரிகள் விநியோகிக்கும் எம்.சாண்டுகளை நம்பி கட்டிடங்களை எழுப்பி வருகிறார்கள். அவற்றின் தரம் குறித்த சந்தேகம் இன்றளவும் தீர்ந்த பாடில்லை.

இவ்வாறு தரமில்லாத எம்.சாண்டுகளை கொண்டு தமிழகம் முழுவதும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் மேற்பூச்சுக்காவது ஆற்று மணல் கிடைக்காதா என பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டாவது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது ஒரு வகை சிக்கல்.
மற்றொன்று, ஆற்றுமணல் அள்ளுவதை நம்பி பலரும் லாரியை வைத்திருக்கிறார்கள். அவற்றை கொண்டு வேறு சரக்குகளை ஏற்றி இறக்க முடியாது. அவர்களின் வாழ்வாதாரமும் இதில் சிக்கித்தவிக்கிறது. இந்த இரண்டு வகை சிக்கல்களையும் அரசு இன்றளவும் கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை என்பதுதான் பெரும் சோகம் என்கிறார்கள்.
தேவை தீர்க்கமான முடிவு !
குறிப்பாக, அடுத்த ஆளுக்கு ஏன் விட வேண்டும்? எடப்பாடியின் ஆட்சி காலத்தில் மணல் விவகாரத்தை கவனிப்பதற்கென்றே அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டதை போல, முழுக்க அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தலாமே? என்ற மாற்றுத்தீர்வையும் முன்வைக்கிறார்கள்.

அவ்வாறு செய்தால், ஆற்றுமணல் தட்டுப்பாடு சிக்கலும் தீர்ந்தது போல் ஆகிவிடும்; அரசுக்கும் நேரடி வருமானமாகவும் வந்துவிடும்; ஆற்றுமணல் குவாரிகளை நம்பி வாழும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட குடும்பங்களும் பிழைத்தது போல் ஆகிவிடும் என்கிறார்கள்.
முதல்வரும் துணை முதல்வரும் ஆற்று மணல் விவகாரத்தில் அதிகாரிகளின் பேச்சை மட்டுமே நம்பி முடிவெடுக்காமல், ஆந்திராவின் முன்மாதிரியைப்போல, எடப்பாடி ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தனிச்சிறப்பான முடிவுகளைப்போல, தற்போதைய தமிழகத்தின் கள நிலைமையை கருத்தில் கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். பார்க்கலாம், என்னதான் நடக்கிறதென்று?
— அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.