சென்னையை தொடர்ந்து மதுரையிலும் … தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் OURLAND ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரியும் மதுரையில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர். கோரிக்கைகளைகண்டு கொள்ளவில்லை, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என தொழிற்சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும். சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச் சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும். அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாதசம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின்அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இரு தினங்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
மேலும், மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ”கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்டகோரிக்கைகளையும், முன் வைத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்லேண்ட் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும், பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும்.” ஆகியகோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
அதன்படி காலை முதல் காத்திருப்பு போராட்டத்தின் போது தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளைநிறைவேற்ற கோரியும் மதுரை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டகோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், மதுரை மாநகராட்சியில்வரிமுறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்தினர் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரியும், அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யகோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையாளர், நகர் நல அலுவலர் மற்றும் உதவி நகர் நல அலுவலர் உள்ளிட்டோரிடம் நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
பின்னர், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் சமைத்து நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் துணை ஆணையாளர் நகர் அலுவலர் ஆகிய கொண்டு குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர் கோரிக்கைகளில் சிலவற்றை குறித்து கடிதம் மூலமாக தூய்மைப் பணியாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இது போன்ற விளக்கத்தை ஏற்க முடியாது என கூறி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மதுரை மாநகராட்சி வளாகத்தில் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
காலை முதல் உண்ணாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் இரவுநேரத்தில் அங்கேயே சமைத்து போதிய வெளிச்சம் கூட இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் உணவு உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபடக்கூடிய தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல வேண்டுமென காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என கூறி தமிழக அரசுக்கு எதிராகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் OURLAND நிறுவனத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அருகில் சென்றவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தர தரவென இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக மதுரை அவுட்டோர் பகுதியில் உள்ளஅம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கூடிகாத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ய காவல்துறையின் நடவடிக்கையைகண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை தரப்பில் ஏற்கனவே அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட வாய்மொழி உத்தரவு பிறப்பித்த நிலையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறி தொழிற்சங்கத்தினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அவர்லேண்ட் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோர் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தைநடத்தினால் மட்டும்தான் உரிய முடிவு கிடைக்கும் எனவும் அதுவரை போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன நிர்வாகி தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசிய போது, ”அரசு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால், தங்களை போராடக் கூட விடாமல் தடுப்பதையே முழுமுயற்சியாக கொண்டுள்ளனர். உரிமைகளுக்காக போராடும் தங்களை போராடக் கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும் காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த கட்டபோராட்டத்தை தொடருவோம் எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்