20 ஆண்டுகள் கோமாவில் இருந்த செளதி அரேபியா இளவரசர் அல்-வலீத் காலமானார்!
‘ஸ்லீப்பிங் பிரின்ஸ்’ என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமானார். அவருக்கு வயது 35. 1990-ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் அல்-வலீத், இளவரசர் காலித் பின் தலால் அல் சவுதின் மூத்த மகன். கடந்த 2005-ஆம் ஆண்டு, இவரின் 15வது வயதில் லண்டனில் இராணுவ மாணவராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பில் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது.
கடந்த இருபது வருடங்களாக கோமா நிலையில் இருந்தார். பல அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக் குழுக்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், இளவரசர் அல்-வலீத் முழு நனவை மீண்டும் பெறவில்லை. அவரது தந்தை, இளவரசர் மீண்டு வருவார் என்று கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். சில ஆண்டுகள் செல்லச் செல்ல, இளவரசர் அல்-வலீதின் மருத்துவமனை அறை ஒரு ஆன்மீக இடமாக மாறியது. அவரது மீட்புக்காக பல பிரார்த்தனைகளும் அங்கு நடைபெற்றது.
இந்த நிலையில் துரதிஷ்டவசமாக இளவரசர் அல்-வலீதின் உயிர் பிரிந்தது. அவரின் தந்தை தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் துக்கத்தை வெளிப்படுத்தி, “அல்லாஹ்வின் கட்டளை மற்றும் விதியில் முழு நம்பிக்கையுடன், ஆழ்ந்த துக்கத்துடனும் வருத்தத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் இன்று அல்லாஹ்வின் கருணைக்கு சென்றுவிட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார்.
— மு.குபேரன்