சமயத்தில் நல்ல நண்பர்களையும் கைவிட நேரும் இல்லையா ? அதை போல……
நண்பர்களே புத்தகங்கள் சேமிப்பது நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த வயது வரை சேமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். 60 வயது வரைக்கும் புத்தகங்களை சேமியுங்கள்.
60 வயதுக்கு மேல் புத்தகங்களை ஒரு பக்கம் சேர்த்துக் கொண்டிருந்தால் இன்னொரு பக்கம் கழித்துக் கொண்டே இருங்கள். அதுதான் வருங்காலத்தில் உங்களுக்குப் பின் உங்கள் குடும்பத்திற்கு அது சுமையாக இருக்காது. குறிப்பாக நாவல் போன்ற ஒருமுறை இருமுறை வாசிக்க வேண்டிய நூல்களை பொத்தி பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டாம்.
உங்களை சந்திக்க வருகின்ற நண்பர்களுக்கு அன்பளிப்பாக ஒவ்வொரு நூலை கொடுத்து வாருங்கள். நான் சமீபத்தில் அப்படித்தான் செய்து வருகிறேன். எனக்கு இருப்பதே குறைந்த புத்தகங்கள் தான். இருப்பினும் இனி இவை படிக்கத் தேவையில்லை அவற்றை பாதுகாத்து வருவது வீணான வேலை. குறிப்பாக நாவல் இலக்கியங்கள் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் படிக்க முடியாது ஒருமுறை இரு முறை படித்திருந்தால் அவற்றை கழித்து விடுங்கள்.
நல்ல கட்டுரை வைத்துக் கொள்ளுங்கள். ஆராயாமல் சில கட்டுரை நூல்களை வாங்கி இருப்பீர்கள் பெரும்பாலும் அவற்றை தொட்டுக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். இதற்கு முன்னால் தொட்டுப் பார்க்கவில்லை என்றால் 60 வயதுக்கு மேல் உங்களால் மீண்டும் தொட்டுப் பார்க்க முடியாது. ஆகவே படிக்காத புது புத்தகமாக இருந்தாலும் அவற்றை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்கள்.
புத்தகங்களில் கவிதை புத்தகம் எப்போதும் பயன்படக்கூடிய அல்லது மீண்டும் மீண்டும் வாசிக்க ஏதுவான நூல்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் நிறைய உங்களுக்கு அனுப்பி வைத்திருந்தால் அவற்றை நண்பர்களுக்கு வாசித்த பிறகு கடத்தி விடுங்கள்.
மொழிபெயர்ப்பு கவிதைகள் தத்துவ நூல்கள், இயல் நூல்கள் கைவசம் இருக்கட்டும்.
இன்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய நண்பனுக்கு நேர்ந்த ஒரு அவலத்தை பற்றி பேசியதை கேட்டேன். அவருடைய நண்பர் வழக்கறிஞர் பண வசதி உள்ளவர் மாடியில் பெரிய அறைகளாக கட்டி அதில் நூல்களாக சேர்த்து வைத்துள்ளார் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு வாசிப்பை கவனம் செலுத்தி உள்ளார் எதிர்பாராமல் மரணம் அடைந்து விடுகிறார்.
ராமகிருஷ்ணன் அவருடைய நண்பர்களும் துக்கம் விசாரிப்பதற்காக வக்கீல் மகன்களை பார்த்து துக்கம் விசாரிக்க போகிறார் அங்கே போனால் எங்கிருந்தோ இரண்டு டெம்போ ட்ராவல் வண்டிகள் திரும்ப வந்து அவர் வீட்டுக்கு முன் நிற்கிறது.
பேச்சுவாக்கில் மகன்கள் இடம் ராமகிருஷ்ணன் கேட்கிறார் அவர் சேர்த்து வைத்த புத்தகங்கள் என்னவானது என்று சந்தேகப்பட்டு கேட்டுள்ளார். அவர் படித்த புத்தகங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால் அதோ அந்த குப்பை தொட்டியில் இப்போதுதான் டெம்போ மூலம் கொண்டு சென்று கொட்டி விட்டு வந்தோம் உங்களுக்கு தேவை என்றால் தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் தாமதம் செய்தால் கார்ப்பரேஷன் காரன் எடுத்துக்கொண்டு போய்விடுவான் என்று சொல்லி உள்ளனர் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் நீங்கள் புத்தகம் படிக்காவிட்டாலும் அவை இருந்தால் உங்கள் தலைமுறையை யாராவது வாசிப்பார்கள் அல்லவா என்று கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் அந்த அறையை வேறு பயன்பாட்டிற்கு நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் தேவையில்லாமல் இந்த புத்தகங்கள் இங்கே ஆயிரக்கணக்கில் இடத்தை அடைத்துக் கொள்வது நாங்கள் விரும்பவில்லை என்று பதில் சொல்லி உள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உண்மையில் இதைக் கேட்டவுடன். இதை எழுதத் தோன்றியது. இப்படி ஒரு அவலமான நிலை நம்முடைய நூல்களுக்கும் வந்து விடக் கூடாது ஆகவே புதிய நூல்கள் வாங்குவதை ஒரு வயதுக்கு மேல் குறைத்துக் கொண்டு பழைய நூல்களை மற்றவர்கள் பயன்பாட்டிற்கு கடத்தி விடுவது தான் நல்லது.
புத்தகங்கள் நல்ல நண்பர்கள் தான் சமயத்தில் நல்ல நண்பர்களையும் கைவிட நேரும் இல்லையா?
— ஜெயதேவன் – எழுத்தாளர்.