செந்தில்பாலாஜி கைது : பாஜகவின் மிரட்டல் அரசியல்
தமிழ்நாடு மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையினரின் ரெய்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, எட்டுநாட்கள் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய நிலையில், அமலாக்கத்துறையின் ரெய்டும் கைது சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
நெஞ்சுவலி என்று ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது அமைச்சரை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச் சுமத்தியிருப்பதோடு, டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்துவரப்போவதாக அறிவித்திருக்கிறது, அமலாக்கத்துறை. அவர் அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபொழுது, வேலைவாங்கித்தருவதாக பலரிடம் பணம் வசூலித்தார் என்ற குற்றச்சாட்டு அடிப்படையில்தான் இந்த ரெய்டு கைது என்கிறார்கள். ”எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும், அதனை எதிர்கொள்கிறேன்.
உங்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன்” என்று செந்தில்பாலாஜி தொடக்கத்திலேயே அறிவித்திருந்தும், நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். ” மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.” என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்,
வை.கோ. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இதுவரை கருத்து எதுவும் சொல்லாமல் அமைதி காத்துவருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்காக தண்டிக்கப்பட்ட செல்வ கணபதி, இந்திர குமாரி வரிசையில் தற்போது செந்தில்பாலாஜி இணைந்திருக்கிறார்.