பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? நன்றி கூறிய அரசு பள்ளி மாணவா்கள்
அரசுப் பேருந்து நிற்கிறது. அதில் மாணவச் செல்வங்கள் ஏறி அமர்ந்திருப்பதையும், குழுவாக பேருந்து முன் நிற்கும் காட்சிகளைப் பார்த்ததும், இவர்கள் ஏதோ கல்விச் சுற்றுலாவிற்கு செல்வதுபோல் தானே? எண்ணத் தோன்றுகிறது.
இவர்கள் சென்றது கல்விச் சுற்றுலாவிற்கு அல்ல, பொதுத்தேர்வு எழுதுவதற்கு.
என்ன, பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? என்ற ஆச்சரியக் கேள்வி எழுகிறதா.
ஆம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ‘சிறப்புப் பேருந்து வசதி’ இயக்கப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு அரியலூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான பளிங்காநத்தம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, கீழப்பழுவூர் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. பளிங்காநத்தத்தில் இருந்து கீழப்பழுவூருக்கு நேரடி போக்குவரத்து சேவை இல்லை.
முதலில் பளிங்காநத்தத்திலிருந்து திருச்சி மாவட்டம் கல்லக்குடிக்கு ஒரு பேருந்து, பிறகு கல்லக்குடியிலிருந்து தேர்வு மையம் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூருக்கு ஒரு பேருந்து என 2 பேருந்துகள் ஏறி மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
தேர்வு முடிந்தும் இதேப் போல்தான் தத்தம் ஊர் திரும்ப வேண்டும். பேருந்து வரும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டால் தேவையற்ற பதட்டமும், மாணவர்களின் கவனம் சிதறும் சூழலும் இருந்தது.
அதேப்போல குன்னம் தொகுதிக்குட்பட்ட மணக்குடி, கடுகூர், பொய்யூர், அயன் ஆத்தூர், சின்ன ஆனந்தவாடி, பாளையக்குடி, கிளிமங்கலம் பகுதியிலிருந்து ஆனந்தவாடி பள்ளியில் மாணவர்கள் பயில்கின்றனர்.
ஆனந்தவாடி பள்ளி மாணவர்களுக்கு, இரும்புலிக்குறிச்சியில் தேர்வு மையம். ஏறக்குறைய 4 முதல் 14 கிமீ மாணவர்கள் தம் ஊர்களில் இருந்து பயணிக்க வேண்டும். நேரடி போக்குவரத்து சேவை இல்லை.
அதேப்போல பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி, ஜெமீன் ஆத்தூர், கொளத்தூர் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கொளக்காநத்தம் பள்ளியில் தேர்வு மையம்.
கீழ கவட்டாங்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு, திருமழப்பாடி பள்ளியில் தேர்வு மையம் என நேரடி போக்குவரத்து சேவை இல்லாத பள்ளிகள் குறித்த தகவல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் கவனத்திற்கு செல்கிறது.
உடனடியாக துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பேசி சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
தேர்வு எழுதச் செல்லும்போதும், தேர்வு முடிந்து வெளியே வரும்போதும் மாணவர்களுக்காக அரசுப் பேருந்துகள் தேர்வு மைய வாசலில் காத்து நிற்கிறது.
பேருந்தில் பள்ளியின் ஆசிரியர் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் என மாணவர்கள் பத்திரமாக தேர்வெழுதி ஊர் திரும்பும் வரை உடனிருந்து உதவியிருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்கள் நலனில் எந்தளவு அக்கறைக் கொண்டு செயல்படுகிறது என்பதற்கு சிறு உதாரணம் தான் இந்த காணொளி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிறப்புப் பேருந்து இயக்கத்துக்கான கட்டணத்தையும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளார்.
எளிய சூழலிலிருந்து வரும் மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெற, எல்லா வகையிலும் உறுதுணையாய் நின்று பணி செய்திடுவதும், அப்படி பணி செய்திடும் ஒருவரை தங்கள் பகுதி “மக்கள் பிரதிநிதியாக” பெற்றிடுவதும் எல்லாருக்கும் வாய்க்கப்பெறாது.
சிவசங்கர் சா.சி. எனும் ‘மாணவ நேசனுக்கு’ வாழ்த்துகள். தொடர்க, உம் மக்கள் பணி !
காட்டாத்தூர் எஸ்.பிரதீப்