சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம் !
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள் தகவல திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 55 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் பெறும் வங்கி கடன்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மான்யம் வழங்கப்படும்.
மேலும் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட புறஉலகு சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகள் (Autism), தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி (MD) குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி (MR) குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு கடன் தொகையில் 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/- மான்யம் வழங்கப்படும்.
எனவே சுயதொழில் செய்து தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும்,
மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.