கட்சி கொடி கட்டிய காரில் மதுபான பாட்டில்களை கடத்தி கைதான திமுக ஒன்றியம் ! உடனே கிடைத்த ஜாமீன் !
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மாநில மது பாட்டில்களை, கள்ளத்தனமாக கடத்தி வந்து தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்று வருவதாக புகார்கள் எழுவது வழக்கமான ஒன்று. என்னதான், புதுச்சேரி – தமிழக எல்லையில் போலீசார் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி சோதனையிட்டாலும், அதனையும் மீறி விமான நிலையங்களில் தங்கத்தை கடத்தி வந்து பிடிபடுவது போல, உடலில் பாட்டில்களை பதுக்கிக் கொண்டு வருவது; டூவீலரின் பெட்ரோல் டாங்கில் மறைத்து வருவது என நூதனமான முறையில் பாட்டில்கள் கடத்தப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம்.
இதே பாணியில் கள்ளத்தனமாக புதுச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை, திருவாரூர் டவுன் போலீசார் கைப்பற்றியிருக்கும் விதம் முற்றிலும் புதிய டெக்னிக் ஆக அமைந்து விட்டது. ஆளும் கட்சியின் கொடி பறக்கும் காரில், அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கோடு மதுபான பாட்டில்களை கடத்திக் கொண்டு வந்து, அது கேசாகி சிறைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

கடந்த ஜூலை – 26 அன்று மதியம் இரண்டு மணி வாக்கில், திருவாரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் மோகன்ராஜ், தலைமை காவலர் சுந்தர், முதல்நிலை காவலர் சுப்ரமணியன் ஆகிய போலீசு டீம் திருவாரூர் வடக்கு வீதியில் வசந்த் அண்ட் கோ கடை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, TN-09-BQ-3000 பதிவெண் கொண்ட டோயோட்டா பார்ச்சூனர் வாகனத்தை சோதனையிடுகிறார்கள். அந்த காரின் பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், 2 லிட்டர் அளவு கொண்ட டி.எஸ்.பி. பிளாக் 4 மது பாட்டில்கள்; 1 லிட்டர் அளவுள்ள மெக்டொனால்டு 21 மது பாட்டில்கள்; 750 அளவுள்ள போலண்ட் 24 மது பாட்டில்கள் என ஆக மொத்தம் 49 பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்திருக்கிறார்கள்.
காரை திருவாரூர் – புத்தகரத்தை சேர்ந்த ஐயப்பன் ஓட்டி வந்திருக்கிறார். பின் இருக்கையில் அதே ஊரைச் சேர்ந்த சதிஷ், சேகர் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். போலீசாரின் விசாரணையில், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கே அதிக விலைக்கு விற்பதாக சொல்லியிருக்கிறார்கள். எந்த விதமான அரசின் அனுமதியோ, உரிமமோ இல்லாமல் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததற்காக வழக்குப் பதிவு செய்து, மூவரில் ஒருவர் 63 வயதுடைய மூத்தகுடிமகன் என்பதால், அவரை தவிர்த்த மற்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ஜூலை-26 சனிக்கிழமை அன்று மாலை கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்ட நிலையில், மறுநாள் ஜூலை-27 ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற விடுமுறை என்பதால், அதற்கடுத்த நாளான ஜூலை-28 ஆம் தேதியே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதே நாளில் நிபந்தனை பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள், ஐயப்பனும் சதீஷும்.
மதுப்பாட்டில்களை கடத்தி வந்து கைதான, ஐயப்பன் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் என்பதுதான் ஹைலைட். அந்த கெத்தில்தான், கட்சி கொடியை பறக்கவிட்டு பார்ச்சூன் காரில் பந்தாவாக மதுபான பாட்டில்களை கடத்தி வந்திருக்கிறார். இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளாகவே இவர் இதே வேலையைத்தான் செய்து வருகிறார் என்றும்; கட்சி செல்வாக்கில் இதுநாள் வரை தப்பி வந்திருக்கிறார் என்றும் ஏரியாவில் சொல்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து, விளக்கமறிய திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் சந்தானமேரியிடம் பேசினோம். “அவர் முத்துப்பேட்டையை சேர்ந்தவர். நாங்கள் டவுன் லிமிட்டில் கேஸ் போட்டிருக்கிறோம். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்.” என்றார்.
ஒன்றிய அளவில் கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், கட்சி கொடி கட்டிய காரில் சட்டவிரோதமான முறையில் மதுபான பாட்டில்களை கடத்தி கைதாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
— ஆதிரன்