சில நியூசென்ஸ்களும் நான்சென்ஸ்களும் !

0

சில நியூசென்ஸ்களும் நான்சென்ஸ்களும் !

ரம்மியமான இளையராஜா பாட்டோடு, ஜன்னலோர சீட்டோடு இனிமையான பேருந்து பயணம் என்பதெல்லாம் காணல் நீர்தான் போல. இப்போதெல்லாம் பேருந்து பயணங்கள் சலிப்பூட்டுகின்றன.

பண்டிகை காலங்களில் கும்பலோடு கும்பலாக அடித்துப்பிடித்து, ஓடி களைத்து ஓரிடம் பிடித்து அக்கடானு பேருந்தில் பயணிக்கும் ஆசாமிகளுக்கு அந்த பயணம் சுகமானதாகவே இருக்கும். அன்றாடம் அலுவலுக்காக படிக்கட்டுவரை தொங்கும் பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஏறி மூச்சுவிடக்கூட முடியாத அளவு நெரிசலில் சிக்கி பயணிப்பதை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா என்ன?
அரக்கபரக்க கிளம்பி சோத்து மூட்டைய கட்டிகிட்டு, பஸ்சுக்கான டயம் பார்த்துகிட்டு, இந்த பஸ்ஸ விட்டா அடுத்த பஸ்சுக்கு இன்னும் அரை மணிநேரம் லேட்டாயிடும்னு அன்றாடம் கிளம்பும்போதே ஆயிரம் டென்சன் மண்டையில் ஏறியிருக்கும். நம்ம அவசரம் புரியாம அந்த நேரம் பார்த்து பொண்டாட்டி ஏதாவது ஒரு வேலையோ, செய்த வேலையில் ஒரு நொட்டமோ சொன்னால் எப்படியிருக்கும்?

மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம்

- Advertisement -

அதே பிரஸ்ஸரோடத்தான் பஸ்ல ஏறுவோம். நடுவுல நல்லாவே இடம் இருக்கும். ஆனாலும், அந்த கடைசி படிக்கட்ட விடுவேனானு நாலு பேரு அதுலயே தொங்கிட்டிருப்பான். அவனுங்கள தாண்டி நாலு படியேறினா, நந்தி மாதிரி தொப்பையை வச்சிட்டு அங்க ஒருத்தன் குறுக்கன் நிற்பான். அவனும் போகமாட்டான். நம்மயும் அவனை தாண்டி போக விடவும் மாட்டான். கண்டக்டர் என்ன கத்தினாலும் கண்டுக்கவும் மாட்டான். அழுத்தி சொன்னாலும், அம்புட்டு கோவம் பொத்துக்கிட்டு வரும். “இடம் இருந்தா உள்ள போக மாட்டமா? எங்கே இருக்கு இடம்?”னு பஸ்ஸு போற வேகத்தவிட பதிலு அவ்வளவு வெரசா வரும்.

ஆனா, அதுல ஒன்னு. அவன் பேச்ச ஒரு பார்வை பார்த்துக்கிட்டே பின்னாடி படிக்கட்டுல இருந்து முன்னாடி படிக்கட்டுக்கு நீச்சலடிச்சே போவாரு பாருங்க கண்டக்டரு. வேறலெவல் பெர்ஃபாமன்ஸ் அது. ஒருவாட்டி அவரு இப்படியும் அப்படியும் வந்து போனாலே, நானெல்லாம் நின்ன இடத்தில இருந்து ரெண்டு சீட்டு தாண்டி போயிருப்பேன் தன்னால.

இவ்வளவு களேபரத்திலயும் அவனவன் காரியத்திலேயேதான் கண்ணாயிருப்பான். முன்னாடி இடிச்சாலும் சரி, பின்னாடி இடிச்சாலும் சரி, இல்ல சட்டன் பிரேக் போட்டாலும் சரி கையில வச்சிருக்க ஆண்ட்ராய்டு போன விடாம புடிச்சிருக்கிற லாவகம் இருக்கே. வித்தைக்காரன் தோத்துருவான். கண்ணு போன விட்டு விலகாது. அவன் காதுக்குள்ள கத்தினாலும், நிக்கிற பொசிசின ஒரு இன்ச் விட்டுக்கொடுக்காம பாகிஸ்தான் பார்டர்ல நிக்கிற மாதிரியே அப்பயும் விரைப்பாதான் நிப்பான்.

அதுலயும் சில பேரு, நாம அவன ஓவர்டேக் பன்றதுக்கு சிக்னல் கொடுக்கிறோம்னு புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பாடிய ஒரு நளினமாக அசைச்சு கொடுப்பான் பாருங்க. அதுக்கே அவனுக்கு ஒரு அவார்டு கொடுத்திடனும். அவன் வளைஞ்சி கொடுக்கிற கேப்ல நாம நெளிஞ்சி போயிடனும். அவன் வச்ச கண்ண எடுக்காம கெக்கெபெக்கேனு சிரிச்சிகிட்டு கிடப்பான்.

என்ன கருமத்தையோ பார்த்து தொலைச்சிட்டு போ. கொஞ்சம் ஹெட் ஃபோன் போட்டு கேட்கக்கூடாது. மூச்சு விட முடியாம இங்கிட்டும் அங்கிட்டும் நெளியாம சாக்குல கட்டுன கத்திரிக்கா மாதிரி நாமலே போயிட்டுருப்போம். இதுல, இவனுங்க அலற விட்டு கேட்பானுங்க. ஒரு பாட்டயோ, ஒரு காமெடியையோ முழுசா கேட்பானுங்கனு நினைக்கிறீங்க?

4 bismi svs
நெருக்கடி
நெருக்கடி

அவன் காண்டாக்ட் லிஸ்ட்ல வச்சவன் ஸ்டேட்டஸ்-அ பார்க்க அவனுக்கு அதுதான் நேரம். அடுத்து அவனுக்குனே இருக்கே ரீல்ஸ், ஷாட்ஸ். இது எதுவொன்னும் ஒரு செகண்டுக்கு மேல ஓடாது. ஓயாம விரல தேய்ச்சிகிட்டே இருப்பான். பல நேரம் நாம பஸ்லதான் போறோமா? இல்லை, மண்டையில பிரச்சினைனு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கிற செண்டருக்குள்ள வந்திருக்கோமானு மூளை குழம்புற அளவுக்கு ஆயிடும்.

ஒன்னேகால் மணிநேர பேருந்து பயணத்தில், முக்கால் மணி நேரத்தை கடந்து கொஞ்சம் ஆறுதலாக ஒரு இருக்கை கிடைக்கும் சுகம் இருக்கே. அத அனுபவிக்க விடுவானுங்கனு நினைக்கிறீங்களா? ஆப்பு வக்கிறதுக்குனே கையில ஆண்ட்ராய்டு போனோட ஒருத்தன் வந்து சேருவான். ரீல்ஸ் – ஷாட்ஸ் எல்லாத்தையும் ஆன்லைனில் எடிட் பன்னிட்டு இருப்பான். முழுசா ஓடவிட்டாக்கூட ஒரு தொந்தரவும் இருக்காது. ஒரு படத்துல வடிவேலு போன எடுத்து ஒரு வார்த்தை முழுசா பேச விடாம ஓயாம ஒருத்தன் எதிர்முனையில பேசுவான் பாருங்க அந்த கதைதான்.

பேருந்துக்குள்...
பேருந்துக்குள்…

அப்படியே, எந்திரிச்சு படிக்கட்டு பக்கம் ஓடியராலாமானு இருக்கும். வீட்டில ஆரம்பிச்ச தலைவலி, இறங்கிற வரைக்கும் ஓயாது. அன்னைக்கு அப்படித்தான், பின்னாடி ஒருத்தரு அவர் பாட்டுக்கு பேசிட்டே வர்றாரு. பின்பக்க படியில இருந்து ரெண்டாவது சீட்டு. ஆனாலும், அவர் பேசுறது முன்னாடி போற ரெண்டு பஸ்ஸுக்கும் கேட்கும்.

சும்மா, சைகையிலதான் சொன்னேன். கொஞ்சம் சன்னமா பேசுங்கனு. மனுசன் போன்ல பேசுறதவிட்டுட்டு, என்கிட்ட சண்டைக்கு வந்துட்டான். என் குரலே அப்படித்தான்னு அவன் ஆயி அப்பன் மேல வேற பழிய போடுறான். என்னத்த சொல்ல. அவன் இறங்கும் போது, என்னை சாடையா பேச, நானும் பெருங்குரலெடுத்து பதிலுக்கு பேசனு பெரும் சண்டையே ஆச்சு. ஆனாலும், இது எதையும் கண்டுக்காத அந்த பொதுஜனங்களோட பொறுப்புணர்வு இருக்கே. வேற லெவல் !

ஹெட்ஃபோன் இல்லாம ஒரு பயலும் பஸ்ல ஏறக்கூடாதுனு சட்டம் போடனுங்கிறேன் …

(பயணங்கள் தொடரும்)

வே.தினகரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.