சினிமாகாரனுக்கே படம் காட்டிய பலே சோனி நிறுவனம் ! இது புதுசு கண்ணா புதுசு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Sri Kumaran Mini HAll Trichy

”வீட்டில் இருந்தபடியே சினிமா அனுபவத்தை கண்டுணர வேண்டுமா? துல்லியமான இசையில் மூழ்கும் அனுபவத்தை பெற வேண்டுமா? பிரமிக்கத்தக்க சிறப்பம்சங்களுடன் “SONY BRAVIA 3” டிவியை வாங்குங்கள்” என்பதாக இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான சோனி நிறுவனத்தின் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுள் ஒருவர் சென்னையை சேர்ந்த சிவக்குமார்.

பலே சோனி நிறுவனம் ”தீபாவளி விழாக்கால சிறப்பு சலுகையில் டி.வி.யை வாங்கினால், மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் வாரண்டி இலவசம். ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஸ்டேபிளேசர் இலவசம்” என்பதாக, சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள சோனி சென்டர் வழங்கிய வாக்குறுதியையும் நம்பி, ரூ77,500/- கொடுத்து டி.வி.யை கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி வாங்கி சென்றிருக்கிறார், சிவக்குமார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சோனி நிறுவனம் விளம்பரபடுத்தியிருந்தபடி, சினிமா அனுபவத்தை கண்டுணரும் தருணத்திற்காக ஆசையாய் காத்திருந்தார், சிவக்குமார். அதே சோனி நிறுவனத்தின் தரமான சவுண்ட் பார் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்து வரவழைத்திருந்தார். 2025 ஆம் ஆண்டு, ஜனவரி 18 ஆம் தேதி, சம்பத்சிவம் என்கிற டெக்னீசியன் சவுண்ட் பாரை பொருத்தி டெமோ காட்ட முயற்சித்தார். அவர்கள் சொன்ன இசை அனுபவத்தை அவரால் உணர முடியாமல் போனது. ஜன19 முதல் ஜன21 வரையிலான இடைவெளியில் பல்வேறு முயற்சிகளை செய்துபார்த்தும் அந்த இசை அனுபவம் மட்டும் சிக்காமல் போனது. சோனி நிறுவனத்தின் கஸ்டமர் கேருக்கு புகார் தெரிவிக்குமாறு பரிந்துரைக்கிறார், டெக்னீஷியன் சம்பத்சிவம்.

ஜன-22 ஆம் தேதி, சோனி நிறுவனத்தின் கஸ்டமர் கேர் அதிகாரி சிவக்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். சிவக்குமார் முன்வைக்கும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமலேயே, வாடிக்கையாளரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசுகிறார், அந்த கஸ்டமர் கேர் அதிகாரி.

சோனி நிறுவனம் அதாவது, சிவக்குமார் சந்தித்த பிரச்சினை எவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. 2.1 என்பது ஸ்டீரியோ வகை. 5.1 என்பது மேம்படுத்தப்பட்ட துல்லியமான இசை அனுபவத்தை வழங்கக்கூடியது. சிவக்குமார் வாங்கியிருக்கும் டி.வி. 5.1 தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அந்த வகை இசை அனுபவத்தை கொடுக்கக்கூடியது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால், அந்த டி.வி. 2.1 ஸ்டீரியோ வகையை ஏற்கவில்லை என்பதுதான் பிரச்சினை. அதுவும் முற்றிலும் ஏற்காது போயிருந்தால் கூட பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் டி.வி.யை ஆன்  செய்யும்போது, முதல்முறை மட்டுமே 2.1 வேலை செய்கிறது. அடுத்த வீடியோவில் வேலை செய்ய மறுக்கிறது.

சோனி நிறுவனம் உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் 5.1 வகையை சப்போர்ட் செய்யும் வகையிலும், சில நிகழ்ச்சிகள் 2.1 வகையை சப்போர்ட் செய்யாத வகையிலும் அமைந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 5.1 வகையை சப்போர்ட் செய்யும் நிகழ்ச்சிகளை கண்டுணர முடிகிறது. ஆனால், அதற்கு அடுத்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 2.1 சப்போர்ட் செய்யவில்லை எனில், அது முழுமையாக ஆடியோ ஒலிபரப்பை தடை செய்து விடுகிறது. அதற்கான செட்டிங்கில் சென்று, ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப 5.1, 2.1 என செட்டிங்கை மாற்றினால் மட்டுமே தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும். இதுதான் சிவக்குமார் எதிர் கொண்ட பிரச்சினை. அவர் எழுப்பும் கேள்வி மிக எளிதானது. 2.1 என்பது மிகவும் அடிப்படையான சவுண்ட் சிஸ்டம். அதைக்கூட இந்த டி.வி. சப்போர்ட் செய்யவில்லை என்பதுதான். இதில் என்ன விசித்திரம் என்றால், இந்த பிரச்சினை எச்.டி.எம்.ஐ. கேபிளை பயன்படுத்தி இணைப்பு வழங்கும்போது மட்டுமே எழுகிறது. அதுவே, ப்ளூடூத்தை பயன்படுத்தி அதே நிகழ்ச்சியை ஒளிபரப்பினால், தடங்கல் இன்றி தானாகவே 5.1, 2.1 என்பதாக மாற்றிக்கொண்டு ஒலிக்கிறது என்பதுதான்.

இந்த பிரச்சினையை சற்றும் புரிந்துகொள்ளாத, அல்லது அவர் சொல்வதை செவிமடுத்து கேட்கத் தயார் இல்லாத அந்த கஸ்டமர் கேர் அதிகாரி சிவக்குமாரையே நொட்டம் சொல்கிறார். நீங்கள் ஏன் எச்.டி.எம்.ஐ. கேபிளை பயன்படுத்துகிறீர்கள்? என்கிறார். பதிலுக்கு, நீங்கள் எதற்கு துல்லியமான ஒளி அனுபவத்தை பெற எச்.டி.எம்.ஐ. கேபிளை பயன்படுத்துங்கள் என்று டி.வி.யோடு வழங்குகிறீர்கள் என எதிர்கேள்வி கேட்கிறார், சிவக்குமார். அதற்கு அவரிடம் பதிலில்லை. ஒவ்வொருமுறையும் ஆடியோ செட்டிங்கை மாற்றிக்கொண்டு பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறுகிறார். இது எப்படி இருக்கிறது, தெரியுமா? மூட்டைப்பூச்சியை கொல்லும் மிஷின் என்பதாக நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியைத்தான் நினைவூட்டுகிறது.

இதனைதொடர்ந்து, சோனி சர்வீஸ் சென்டரிலிருந்து டெக்னீஷியன் பாலசுப்பிரமணியன், அவரை தொடர்ந்து மாயக்கிருஷ்ணன் ஆகியோர் அடுத்தடுத்து வருகிறார்கள். இதில் உச்சமாக, மாயகிருஷ்ணன் என்பவர், டி.வி.யில் எந்த பிரச்சினையும் இல்லை. கஸ்டமர்தான் புரிந்துகொள்ள மறுக்கிறார் என்பதாக அறிக்கை போடுகிறார். இன்னும் கொடுமை, சிவக்குமார் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் எர்த் கனெக்சன் சரியாக இல்லை. ஆகவே, சவுண்ட் பார் வேலை செய்யவில்லை என்கிறார். சரி, ஆட்டோவின் கண்ணாடியை திருப்பிப்பார்ப்போம் ஆட்டோ ஓடினால் சரிதான் என்ற நப்பாசையில், டி.வி.யை தூக்கிக்கொண்டு எர்த் கனெக்சன் சரியாக உள்ள வேறொரு அபார்ட்மென்டில் வசிக்கும் தன் நண்பர் வீட்டிற்கு எடுத்து சென்று சோதித்து பார்க்கிறார். அப்போதும் வேலை செய்யவில்லை.

Flats in Trichy for Sale

சோனி நிறுவனம் இதனை தொடர்ந்து, மாயக்கிருஷ்ணன், டிஜிட்டல் விஷன் சர்வீஸ் சென்டரின் உரிமையாளர் எட்வினை கோர்த்து விடுகிறார். அவர் கொஞ்சம் பொறுப்பாக பேசுகிறார். நிதானமாக பிரச்சினையை செவிமடுத்து கேட்கிறார். SONY BRAVIA 3 K-55S30 என்ற மாடலில்தான் இந்த பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே நீங்கள்தான் முதன்முறையாக இந்த பிரச்சினையை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதாக பாராட்டி, அதனை சரிசெய்து தர அவகாசம் கேட்கிறார்.

இதன்போக்கில், அவரும் போக்கு காட்ட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில், கம்பெனியின் டெக்னிக்கல் என்ஜினியர் டீமில் சொல்லி, சாப்ட்வேரில் அப்டேட் செய்து வருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆகவே, உங்களுக்கு மாற்று தீர்வு சொல்கிறேன் என்று, கூடுதலாக ரூ26,600 செலுத்தி, XR-55X90L பிராண்டு டிவியை வாங்கிக் கொள்ளுங்கள் என்பதாக ஆஃபர் தருகிறார். மார்ச்07 ஆம் தேதி, கூடுதலாக பணம் கொடுக்க விருப்பம் இல்லை. நான் கேட்பது சர்வீஸ். நீங்கள் சேல்ஸ் பேசுகிறீர்கள் என்று சிவக்குமார் அதற்கு உடன்பட மறுக்கிறார்.

குறிப்பாக, இந்த இடத்தில், இதே சோனி நிறுவனத்தின் அந்த குறிப்பிட்ட K-55S30 மாடலைவிட குறைந்த வசதிகள் கொண்ட டி.வியில் இந்த பிரச்சினை இல்லை. அதற்கு மேம்பட்ட மாடலிலும் பிரச்சினை இல்லை. இந்த குறிப்பிட்ட மாடலில்தான் பிரச்சினை. ஆகவே, இது பெரிய பிழை. மாடல் மிஸ்டேக். என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார், சிவக்குமார். ஆகவே, நீங்கள் எனக்கு சர்வீஸ் வாரண்டி கொடுத்தபடி, பிரச்சினையை சரிசெய்து கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்.

பலே சோனி நிறுவனம் அதற்கு அவர்கள், அதெல்லாம் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது என்று வேறு பிராண்டை தலையில் கட்டி பிரச்சினையை முடிக்கவே முயற்சி செய்கிறார்கள்.

இதன்போக்கில், மார்ச்-11 அன்று சோனி நிறுவனத்தின் ஏரியா சர்வீஸ் இன்சார்ஜ் கார்த்திக்கேயன் பேசுகிறார். அவரிடம் பிரச்சினையை முன்வைக்கிறார். அதனை தொடர்ந்து மார்ச்-12 இல் சோனி நிறுவனத்துக்கு மெயில் அனுப்புகிறார். அதுவரை நடந்த விவரங்களையெல்லாம் பதிவு செய்கிறார். குறிப்பாக, சோனி நிறுவனத்தின் கஸ்டமர் கேர் அதிகாரியும் டெக்னீஷியன் மாயகிருஷ்ணனும் அணுகிய விதம் குறித்த மோசமான அனுபவத்தை பதிவு செய்கிறார். அதற்கு, வேண்டுமானால், அந்த டெக்னீஷியனை வேலையை விட்டு தூக்கிவிடுகிறோம் என்று சமாதானம் சொல்கிறார். ஆனாலும், அவர்கள் அடுத்த மாடலை தலையில் கட்டவே மூச்சை போடுகிறார்கள். சிவக்குமாரும் தொடர்ந்து மறுக்கிறார்.

சோனி நிறுவனம் இப்போது, சர்வீஸ் மேனேஜர் என்பதாக மகேஷ்குமார் என்பவர் பேசுகிறார். அவர் டி.வி.க்கு பதிலாக பணத்தை திருப்பித் தருவது பற்றி சொல்கிறார். அவர் வாங்கும்போது, டி.வி.யின் விலை ரூ.77,500.00 இப்போது, ஸ்டெபிளைசருக்கான தொகையை கழித்துவிட்டு தருவதாக சொல்கிறார்கள். ஸ்டெபிளைசர் இலவசம் என்றுதானே சொன்னீர்கள் என்கிறார். அது ஜி.எஸ்.டி. பில்லுக்காக, ஸ்டெபிளேசருக்கு ரூ.2000 என போட்டது என்று அப்போது சொன்னவர்கள் இப்போது மாற்றி பேசுகிறார்கள். அதனை கழித்துக் கொண்டுதான் தருவோம் என்கிறார்கள். மீண்டும் இங்கே சிவக்குமார் வாதிடுவது, சொற்பம் ரூ2000 த்துக்காக அல்ல. அதிலும் அவர்கள் தில்லு முல்லு மோசடி செய்திருக்கிறார்கள். இப்போது வசதிக்கு மாற்றி பேசுகிறார்களே என்பதுதான். ஆனால், அவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு அலைவதை போல, அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.

சோனி நிறுவனம் பிரச்சினை தொடங்கியது, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி. அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டு, மார்ச் 24 ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் சோனி நிறுவனத்தின் பல்வேறு அதிகாரிகளிடம் தொலைபேசியிலும், அவர்களது அங்கீகரிக்கப்பட்ட மெயில் முகவரியிலும், அலுவலக முகவரிக்கு பதிவுத்தபாலிலும் பல விசயங்களை ஆதாரப்பூர்வமாக குறிப்பாக எழுத்துப்பூர்வமாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், சிவக்குமார். ஆனாலும், ஆறுமாதம் வரையில் சோனி நிறுவனத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கடிதத்தையும் அனுப்பி வைக்கவில்லை. முதன்முறையாக, மார்ச்-24 அன்றுதான் அதன் மண்டல மேலாளர் சாய்கிரண் என்பவரிடமிருந்து கடிதம் வந்து சேர்கிறது. சோனி நிறுவனத்தின் இரண்டாவது எழுத்துப்பூர்வமான கடிதம், சிவக்குமார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அப்பட்டமாக ஏற்க முடியாது என மறுக்கிறது. ஜூலை 1 தேதியிட்ட மூன்றாவது கடிதம் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் சவப்பெட்டியின் கடைசி ஆணியைப் போல இறுக்கிவிட்டது. இதுவே இறுதி. இந்த விவகாரம் இத்தோடு முடித்து வைக்கப்பட்டதாக, எடுத்துக் கொள்ளப்படும் என்பதாக எக்ஸ்.பார்ட்டி தீர்ப்பை போல ஒற்றை கடிதத்தில் சோலியை முடித்துவிட்டது, சோனி நிறுவனம்.

சோனி நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனம் என்று பெயர்பெற்ற சோனி நிறுவனம் தனது வாடிக்கையாளரை எந்த அளவுக்கு மரியாதையாக நடத்தியிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒன்றே போதும்.

இந்த விவகாரத்தில் சோனி நிறுவனத்தின் கருத்தையறிய, அங்குசம் சார்பில் முயற்சித்தோம். இறுதியாக அவர்கள் கெடு விதித்து அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏ.எஸ்.ஐ. கார்த்திக்கேயனை தொடர்புகொண்டோம். “அவரது விவகாரத்தை கொஞ்சம் சரிபார்த்துதான் பேச முடியும். தற்போது டிரைவிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றார். அதனையடுத்து, தொடர்ந்து மூன்றுமுறை அழைத்தும் நமது அழைப்பை அவர் ஏற்காத நிலையில், ஒரு நாள் கழித்து அவராகவே மீண்டும் நமது இணைப்புக்கு வந்தவர், இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் வாடிக்கையாளருக்கு போதுமான தகவல்களை கொடுத்துவிட்டோம். அடுத்து, மீடியாவிடம் நான் பேசமுடியாது. நீங்கள் வேண்டுமானால், கஸ்டமர்கேருக்கு தொடர்புகொள்ளுங்கள் என்று ஒரே போடாக போட்டார். நமக்கு தலைசுற்றாத குறைதான். அவரிடம் மீண்டும் நிதானமாக, சிவக்குமார் குற்றச்சாட்டுகள் குறித்து சோனி நிறுவனத்தின் தரப்பு கருத்தையறியவே தொடர்பு கொண்டிருக்கிறோம். இறுதி தீர்வாக அவர்கள் வழங்கியிருக்கும் அந்த கடிதத்தில் உங்களை குறிப்பிட்டிருந்ததால்தான் தொடர்புகொண்டோம். ஆகவே, யாரை தொடர்புகொள்ள வேண்டுமென்று சொல்லுங்கள் என்றோம். தனது பாஸ்-இடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லியிருக்கிறார்.

இதில், டிவிஸ்ட் என்னவென்றால், இவ்வளவு உறுதியாக போராடும் சிவக்குமார் சவுண்ட் பற்றிய புரிதல் அற்ற பாமரன் அல்ல. லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். ஆல் இண்டியா ரேடியோ மற்றும் எஃப்.எம். ரெயின்போவில் சவுண்டு பிரடியூசர் மற்றும் எடிட்டராக பணியாற்றியவர். புதியதலைமுறை தொலைக்காட்சி போன்ற முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் வி.எஃப்.எக்ஸ். ஆர்ட்டிஸ்டாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இன்னும் சொல்லப்போனால், இயக்குநர் மித்ரன் இயக்கி வெளியான படங்களில் மாவீரன், இரும்புத்திரை, சர்தார் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். அவருக்குத்தான் சோனி நிறுவனம் சவுண்ட்  குறித்து பாடம் நடத்தியிருக்கிறது. வாடிக்கையாளராக, அவரை அவமானப்படுத்தியிருக்கிறது. சினிமா காரனாலேயே, சினிமா அனுபவத்தை பெற முடியாமல் செய்திருக்கிறது. ஆசை, ஆசையாய் முதன்முதலாய்  அவ்வளவு பணம்போட்டு வாங்கிய டி.வி.யே அவரது கனவுகளை நொறுங்கச் செய்திருக்கிறது.

—    இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.