ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !
6 லட்சம் பணம் திருடிய குற்றவாளி கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (47) சென்னையில் உணவகம் நடத்தி வரும் இவர், சாத்தூரில் ஏ.ராமலிங்கபுரத்தில் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
சம்பவத்தின் போது கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து சாத்தூர் எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் அவரது கணக்கிலிருந்து ரூ.6.47 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெட்டி உள்ளே வைத்துவிட்டு, அருகிலுள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது, பணம் வைக்கப்பட்ட பெட்டி திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உள்ளே திறந்து பார்த்தபோது பணம் மாயமாகி உள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அப்போது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். குற்றவாளி கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு முகாமிட்ட போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக இன்னும் இரண்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.