என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா …
வழக்கமாக கூட்டமாக இருக்கும் கீரைக்கார பாட்டியின் ரோட்டுக்கடை,
இன்று கூட்டமில்லை…
விலையையும் கீரையின் தரத்தையும் குறித்தே பேசிய வாய்க்கு, என்னிடம் வேறு ஏதாவது பேச வேண்டும் போல இருந்தது போல…
என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா…
ஆமா என்றேன்…
தோ…முன்ன போறா பாரு , எதுனா கொற சொல்லினே வாங்குவா..ஆனா என்னாண்ட தான் வாங்குவா…
ஒத்த ரூவா சில்லறயக் கூட விடாம வாங்கினு போறா பாரு…
மெல்லிய சிரிப்பை தவிர வேறென்ன சொல்ல முடியும்..
மதுரவாயல் தாண்டி போய் கீர எடுத்தாருவேன், மினி பஸ் காரன் சில்றகாச எப்பவுமே குடுக்க மாட்டான்..
நாம ஒத்த ரூபா குறைவா இருக்குதுன்னு சொன்னா அங்கேயே வண்டிய நிறுத்தி இறக்கி விட்டுருவான் …
இவனுங்கள, யாரும் கேட்க மாட்டாங்க…
இப்ப போனா பாரு இவ கூட கேக்க மாட்டா… ஆனா என்கிட்ட வம்படியா வாங்கினு போறா பாரு…
காலம் இம்புட்டு தான் ..
ஆளு கண்டு ஆளு நியாயத்தை மாத்தி மாத்தி பேசுவானுங்க…

ஆமா பாட்டி… சரி வரேன்…
பொறு ஆயா ..இந்தா…
கூடுதலாக ஒரு கொத்தமல்லி கட்டு …
உழைக்கும் வர்க்கத்தின் உணர்வு பூர்வமான அன்பளிப்பு…
இந்த கொத்தமல்லி கட்டு இரண்டு நிமிடம் அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்ததற்கான லஞ்சமாக கூட இருக்கலாம் …
நாளை என் வீட்டு குழம்பில் மணக்கும்!!!
— அ.யோகானந்தி
Comments are closed, but trackbacks and pingbacks are open.