இனி வாரந்தோறும் தமிழக அரசின் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா !
அரசு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து , திருச்சி மாவட்டத்தில் உள்ள திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தினை முன்னிட்டு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா மூலம் ஒரு நாள் பயணமாக அழைத்துச் சென்று வர ஏற்பாடு செய்துள்ளது.
முதல் கட்டமாக (23-09 – 2023) காலை 8 – 30 மணிக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் தொடங்கியது. இதில் 18 பேர் கலந்துகொண்டனர். இந்த ஆன்மீக சுற்றுலா பயணமானது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8-30 மணிக்கு. குளிர்சாதன பேருந்து மூலம் பக்தர்களை அழைத்துக் கொண்டு உறையூர் அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி. உத்தமர் கோவில் புருஷோத்த பெருமாள் , குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராம பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள்கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, அன்று மாலை 6-00 மணிக்கு திருச்சி ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தை பேருந்து வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கான பயணத் தொகையாக ரூபாய் 1,100/ (ஆயிரத்து நூறுமட்டும்)பக்தர்களிடம் வசூலிக்கப்படும் .
இப்பயணத்தினை மேற்கொள்பவர்களுக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும் திருக்கோயில்களில் பிரசாதப்பை மற்றும் சிறப்பு மதிய உணவு ,விரைவு தரிசனம் மேற்கொள்ளுதல் ,அவசர மருத்துவ முதலுதவி, கோவில்களின் ஸ்தல புராணம் குறித்த கையேடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆன்மீக சுற்றுலாவுக்கான முன்பதிவினை https:www.ttdconline.com என்ற இணையதளத்தில் பயணத் தொகையினை செலுத்தி அதற்கான ரசீதுடன் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்திற்கு பயண நாளன்று காலை 7:30 மணிக்கு வருகை புரிய வேண்டும்.
புரட்டாசி மாத திவ்ய தேச பெருமாள் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 0431 – 2414346 மற்றும் 044-25333333 என்ற தொலைபேசி எண்களில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், அனைத்து ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இச்சுற்றுலாவில் பங்கேற்று பயனடைய வேண்டுமென அரசு சுற்றுலா துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் கேட்டுக்கொண்டுள்ளது.