எங்களையும் மனிதர்களாக பாருங்கள் ! அரசு கட்டித்தந்த வீடு தந்த வேதனையில் புலம்பும் இலங்கைத் தமிழர்கள் !
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டைக்கு அருகே உள்ள கண்டியாபுரம் கிராமத்தில், இலங்கைத் தமிழர் அகதிகளுக்காக தமிழ்நாடு அரசு புதிய குடியிருப்பு வீடுகளை கட்டி உள்ளது.
வெம்பக்கோட்டை, குயில் தோப்பு, டேம் பகுதி, என 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாமில் 354 குடும்பங்கள் தற்போது வரை வசித்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் இருப்பிடங்களை மேம்படுத்த பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில், முதல் கட்டமாக ரூ.12.30 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 232 வீடுகளை கடந்த 7 தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய வீட்டிற்கான சாவிகளை ஒப்படைத்தனர்.
அரசாங்கம் கட்டித்தந்த வீட்டை ஆசையோடு பார்த்த அகதிகள் அதிர்ச்சியடைய காரணம் அதன் கட்டுமான குறைபாடுகள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பல்வேறு குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக, பயனாளிகளிடம் பேசிய போது, “நாங்கள் இங்கே உயிரோடு இருக்கிறோம், நிம்மதியாக வாழவில்லை அடிப்படை உரிமைகளான குடியுரிமை, கல்வி,வேலை வாய்ப்பு, சொத்துரிமை, இல்லாமல் அனாதைகளைப் போல இங்கு இருக்கிறோம்.
இந்த புதிய குடியிருப்பு வீடுகளை வழங்கிய அரசுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அரசால் வழங்கப்பட்ட இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை.
குறிப்பாக கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகளை சேகரிக்கும் செப்டிக் டேங்க்கள் தொட்டிகளின் ஆழம் குறைவாக வெறும் 3 அடி ஆழம் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதனால் செப்டிக் டேங்க் தொட்டிகள் விரைவாக நிரம்பிவிடும். அதுமட்டுமல்லாமல் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சரியாக வெளியேற்றுவதற்கான வடிகால் அமைப்பு இல்லாமலும் வாருகால் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், கழிவுநீர் சுற்றுப்புறங்களில் தேங்கி, சுகாதார பிரச்சனையும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் எனவும், இது ஒரு புறம் என்றால் மற்றொரு பிரச்சனை கட்டுமானத் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. வீடுகளில் குடியேறுவதற்கு முன்பே படிகள், சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், கதவுகள், ஆகியவை தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
மேலும், உடனடியாக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி இவைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
— மாரீஸ்வரன்