ஸ்டேன் சுவாமி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் – செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறையில்
காடுகளின் வளத்தைக் காப்பாற்றுவதற்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமியின் பெயரால் அடர்வனக் காடு
செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக ஸ்டேன் சுவாமி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அரியலூர் மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் பயின்று இயேசு சபை குருவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் பணி செய்தவர் ஸ்டேன் சுவாமி. பழங்குடி மக்களின் நிலம், நீர், காடு ஆகியவற்றைக் காக்க அவர்களோடு இணைந்து பல்வேறு போருட்டங்களில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வர இயலா நிலையில் மரணமடைந்தார்.

அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பாக இன்று நடைபெற்றது. செப்ப்பர்டு விரிவாகத் துறையின் இயக்குனர் அருள்முனைவர் சகாயராஜ், சே.ச. அனைவரையும் வரவேற்றார்.
காடுகளின் வளத்தைக் காப்பாற்றுவதற்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமியின் பெயரால் அடர்வனக் காடு ஒன்றை கல்லூரிக்குள் செப்பர்டு விரிவாக்கத்துறை உருவாக்கியுள்ளது. தந்தை பெயரில் அமைந்த அடர்வனத்தின் பெயர்ப்பதாகையை கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. திறந்து வைத்து பொருளுள்ள வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து தம்முடைய கருத்துக்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

அடர்வனக் காடுகளுக்கான மரங்களில் சிலவற்றை சிறப்பு விருந்தினர்களோடு இணைந்து நட்டு வைத்து கல்லூரியின் செயலர் அருள்முனைவர் கு.அமல் சே.ச. வாழ்த்துரை ஆற்றினார்.
தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் ஸ்டேன் சுவாமி குறித்த நினைவலைகளை எடுத்துக்கூறி நாளைய சமூகத்தை தாங்குவதற்குத் தூண்களாக மாணவர்கள் உருவாக இந்நாளில் உறுதி எடுக்க வேண்டும். வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக மாறி சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்கிற சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

தூய லூர்து அன்னை ஆலயம் பங்குத்தந்தை பி.எஸ்.அருள், சே.ச., முனைவர் அருமைராஜ், அருள்தந்தை ரொசாரியோ, துணை முதல்வர் பேராசிரியர் டாம்னிக், செப்பர்ட் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழ்த்துறை வரலாற்றுத் துறை மற்றும் பொருளாதாரத் துறை மாணவர்கள் உள்பட பலரும் இந்த நினைவேந்தல் பங்கேற்றனர். விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றியுரை ஆற்றினார். விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் லெனின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். செப்பர்டு விரிவாக்கத் துறையின் இயக்குநர், ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பாகத் திட்டமிட்டிருந்தனர்.
– யுகன் ஆதன்