புதுக்கோட்டை திமுகவில் சலசலப்பு! உடன் பிறப்புகளின் கோரிக்கை திமுக தலைமை நிறைவேற்றுமா?
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை மாநகர செயலாளராக இருந்த திரு.செந்தில் அவர்கள் 23 டிசம்பர் 2024 ல் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.
செந்தில் அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் தீவிர ஆதரவாளர் என்று பேசப்பட்டவர். செந்தில் அவர்களின் மனைவி திலகவதி நகராட்சியில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சி ஆனதால் மேயராக இருக்கிறார். செந்தில் அவர்கள் மறைந்ததும் அவர் வகித்த மாநகர செயலாளர் இடத்துக்கு பெரும் போட்டி இருந்தது. செந்தில் இறுதி அஞ்சலி செலுத்த வந்த போதும், படத்திறப்பு விழாவுக்கு வந்த போதும் அமைச்சர் நேரு அவர்கள் செந்தில் மகனும், நகர இளைஞரணி அமைப்பாளருமான கணேஷ் தான் மாநகர செயலாளர் என்று உறுதி தந்ததாக தகவல்.

தற்போது புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் செல்லப்பாண்டியன் அவர்களிடம் கணேஷுக்கு ஆதரவாக நிற்கும்படி கே.என். நேரு சொன்னதாகவும் தகவல்.
அதேபோல புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் நகர் செயலாளர் நைனா முகம்மது உட்பட சிலர் முயன்று வந்தார்கள். முத்துராஜா அவர்களுக்கு இல்லை என்ற நிலை முன்பே தெரிந்த நிலையில் நேருவின் சிபாரிசில் செந்தில் மகன் கணேஷ் தான் மாநகர செயலாளர் என்று பலர் நம்பி இருந்த நிலையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்த ராஜேஷ் அவர்களை மார்ச் 12 2025 அன்று மாநாகர செயலாளராக அறிவித்து முரசொலியில் அறிவிப்பு வந்தது.
முரசொலியில் அறிவிப்பு 12ஆம் தேதி வந்தாலும் 11 ந்தேதியே செய்தி அறிந்து அன்று இரவே மாநகர வார்டு செயலாளர்களாக இருக்கும் 42 பேரும் புதிய மாநகர செயலாளரை ஏற்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிலிருந்து இன்று வரை போராட்டம் தொடர்கிறது. புதுக்கோட்டை மாநகர வார்டு செயலாளர்களும் நிர்வாகிகளும் புதுக்கோட்டைக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். மாநகர செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜேஷ் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசிடம் ஓட்டுநராக இருந்து படிப்படியாக உயர்ந்து மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக உயர்ந்தவர்.

ராஜேஷ் ராஜ்யசபா உறுப்பினரும், அயலக அணி மாநில செயலாளராக இருக்கும் திரு.எம்.எம்.அப்துல்லா ஆதரவாளர் என்றும். திரு.அப்துல்லா பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மூலம் காய் நகர்த்தி ராஜேஷுக்கு பதவி வாங்கி தந்துவிட்டார் என்றும் திமுகவினர் மத்தியில் பேச்சு. பொறுப்பு அறிவித்துவிட்டால் நிர்வாகி அடுத்த நாளே திமுக தலைவரையும்,இளந்தலைவரையும் மற்ற தலைமைக்கழக நிர்வாகிகளையும் சந்திப்பது வழக்கம். ஆனால் பதவி அறிவித்து 13 நாட்கள் இன்றுவரை தலைவரை சந்திக்கவில்லை. காரணம் மாவட்ட செயலாளரும், மாவட்ட அமைச்சரும் உடன் செல்ல தயாராயில்லை. மாநகரத்தில் வார்டு செயலாளர்கள் எதிர்ப்பு நிலையில் இருப்பதால் மாநகர கூட்டத்தையும் கூட்ட முடியவில்லை.

தற்போது நிலவரம் செந்தில் மகன் கணேஷை உட்பட பலர் மாநகர செயலாளர் பதவி கேட்டு அறிவாலய வாசலில் காத்திருப்பதாக தகவல். மாவட்ட துணை செயலாளர் மதியழகன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாநில தொண்டரணி துணை செயலாளர் சுப.சரவணன், முன்னாள் நகர செயலாளர் நயினா முகம்மது, எம்.எம்.பாலு, திரு.வீரமணி மற்றும் மறைமுகமாக பலர். இவர்களுக்குள் ஒருவரை முடிவு செய்ய சொல்லி தலைமை சொன்னதாகவும், இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ள மாநகர 42வார்டு செயலாளர்களும் தயாராக இல்லை எனவும் தகவல்.
ஆலோசனைகள்,பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. இதற்கிடையில் தொண்டனாக சில கேள்விகள். மாநகர செயலாளர் போட்டியில் இருந்து முத்துராஜா எம்எல்ஏ-வை விலகச் சொன்ன தலைமை ராஜேஷை அறிவிக்கும் முன் 42 வார்டு செயலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதா? அனைவரையும் அழைக்காவிட்டாலும் 25பேரையாவது அழைத்து பேசியிருந்தால் அவர்கள் இன்று ராஜேஷை ஏற்றுக்கொண்டிருப்பார்களே!
42 கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர், அமைச்சர், நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாத ஒருவரை எப்படி தேர்வு செய்யப்பட்டது. பென் டீம், உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையிலா? அல்லது சிபாரிசின் அடிப்படையிலா?
பென் டீம், உளவுத்துறை தந்த அடிப்படையில் என்றால் எல்லோரும் ஏற்காத ஒருவரை எப்படி சிபாரிசு செய்தார்கள்? சிபாரிசு தான் என்றால் நேர்மையாக விசாரித்து தான் இளந்தலைவர் தேர்வு செய்கிறார் என்ற சமீபத்திய நம்பிக்கை பொய்த்து போகாதா? ராஜேஷைதான் தேர்வு செய்வதாக இருந்தால் மாவட்ட செயலாளர், அமைச்சரை அழைத்து முன்பே அறிவுறுத்தி இருக்கலாம். அவர்கள் அறிவிப்பு வரும் முன் மாநகர வார்டு செயலாளர்களை அழைத்து தெளிவுபடுத்தி சமாதானப்படுத்தி இருக்க வேண்டும்?
தலைமை அறிவித்த வேட்பாளரை ஏற்க மறுப்பது கழக கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மீறும் செயல் என்று சொல்வதா? பெரும்பான்மையான நிர்வாகிகள் ஏற்க மறுத்த ஒருவரை தலைமை நிர்ப்பந்தபடுத்தி அறிவிப்பது தவறு என்பதா?
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தர்மபுரி கிழக்கு, புதுக்கோட்டை மாநகர் அறிவிப்புகளில் ஏதோ ஒரு வகையில் தவறு நடந்திருக்கிறது. அது என்னவென்று கண்டறியப்பட வேண்டும். எதிர்காலத்தில் தலைமை அறிவிக்கும் தேர்வை நூறு சதவிகிதம் ஏற்கும் நிலை வரவேண்டும். அறிவிப்புக்கு முன் தீர விசாரணை, நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை தொண்டர்களிடம் கருத்து கேட்பு என்பவை முடிந்த பின் அறிவிக்க வேண்டும். அறிவித்தால் சலசலப்பே இல்லை என்ற நிலை வரவேண்டும்.
புதுக்கோட்டை மாநகர செயலாளராக ராஜேஷே தொடர போகிறாரா அல்லது புதிய மாநகர செயலாளரை தலைமை அறிவிக்க போகிறதா என்பது விரைவில் தெரியும். தலைமை தாமதிக்காமல் அறிவிப்பை வெளியிடவேண்டும்.
— ஜெயராமன் திமுக (முகநூல் பதிவிலிருந்து).