”கனிவு என்பது நூடுல்ஸ் மாதிரி” … ”கண்டிப்பு இடியாப்பம் மாதிரி” கலகலப்பான மாணவர் பட்டிமன்றம் !
”கனிவு என்பது நூடுல்ஸ் மாதிரி” … ”கண்டிப்பு இடியாப்பம் மாதிரி” கலகலப்பான மாணவர் பட்டிமன்றம் !
பொங்கல் பண்டிகை என்றாலே இந்துக்களின் பண்டிகை என்பதாக கருதாமல், உழவர் திருநாள் என்ற கண்ணோட்டத்திலிருந்து ”சமத்துவப் பொங்கல்” என்ற பெயரில், பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தி கொண்டாடுவது தமிழகத்தில் பரவலாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த வழக்கமான கொண்டாட்டத்திலும் சற்று வேறுபட்ட கொண்டாட்டமாக, சுவையான பட்டிமன்ற நிகழ்வோடு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது, திருச்சி ஜமால் கல்லூரி நிர்வாகம். தேசிய இளைஞர் தினம் மற்றும் பொங்கல் திருநாளையொட்டி, ஜமால் முகமது கல்லூரியின் காஜாமியான் விடுதி மாணவர்கள் முன்னின்று இப்பொங்கல் விழாவை நடத்தியுள்ளனர்.
காஜாமியான் விடுதியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். நாகூர் ஹனி அவர்களது வரவேற்புரையை தொடர்ந்து, அரபுத் துறை பேராசிரியர் இஸ்மாயில் மொய்தீன் தலைமை உரையாற்றி அமர, காஜா மியான் விடுதி இயக்குனர் முனைவர் கே என் முகமது பாசில் வாழ்த்துரையோடு தொடங்கியது, இவ்விழா. காஜாமியான் விடுதி துணைக்காப்பாளர் முனைவர் எஸ்.அப்பாஸ் மந்திரி ஒருங்கிணைத்து நடத்திய இந்நிகழ்வை, மாணவர்கள் மு.முகமது நியாஸ், இப்ராஹிம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இப்பொங்கல் விழாவின் ”ஹைலைட்” மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம். அதன் தலைப்பு, ”மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தேவை கனிவே? கண்டிப்பே?” அணிக்கு ஒரு ஆசிரியர், இரண்டு மாணவர்கள் என்பதாக பங்கேற்றனர்.
தமிழ்த்துறை பேராசிரியர் பா. அப்துல்லா தலைமையில் முதுகலை தமிழ்த்துறை மாணவர்கள் ஜா.முகமது இலியாஸ் மற்றும் சா.முகமது அர்ஷத் ஆகியோர் ”கனவே” என்ற அணிக்காகவும்; தமிழ்த்துறை பேராசிரியர் பா.சிராஜூதீன் தலைமையில், வேதியியல் துறை மாணவர் சிபில் ஹூசைன் மற்றும் முதுகலைத்தமிழ்த்துறை மாணவர் அ.ரியாஸ் முகமது ஆகியோர் ”கண்டிப்பே” என்ற அணிக்காகவும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். தமிழ்த்துறை தலைவரும், தேர்வு நெறியாளருமான முனைவர் அ.சையது ஜாஹிர் ஹசன் அவர்கள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை வழிநடத்தினார்.
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்ற பாடல் வரிகளோடு பேச்சை தொடங்கி பட்டிமன்றத்தை பாட்டு மன்றமாக்கி கைத்தட்டுகளை அள்ளினார், கனவே அணியின் தலைவர் பேராசிரியர் பா. அப்துல்லா.
“எனக்கு முன்னால் பேசிய என் அன்புத்தம்பி நிறைய பேசினார். ஆனால், நிறைவாக பேசினாரா என்பது தெரியவில்லை” என்று கனிவோடு தொடங்கியவர், “கண்டிப்பு இல்லாத சமூகம் வழி தவறிச் சென்று விடும்” என்று கறார் காட்டி அமர்ந்தார், ”கண்டிப்பே” அணியின் தலைவர் பேராசிரியர் பா.சிராஜூதீன்.
“தாமஸ் ஆல்வா எடிசனை “மேற்கோள் காட்டி அவர் ”சிறுவயதில் பள்ளியில் செய்த குறும்புத்தனங்களால், இவன் சக மாணவர்களையும் கெடுத்துவிடுவான் என்றும் படிப்பதற்கே இலாயக்கற்றவன் என்று பள்ளி நிர்வாகத்தால் கண்டித்து ஒதுக்கப்பட்டபோதும், “தாய் நான் இருக்கிறேன்” என்று கனிவோடு ஆறுதல் கூறி, சமுதாய பாடங்களை கற்றுக்கொடுத்து அந்த மாணவனைத் தேற்றியதால்தான், உலகம் மெச்சும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்ட தாமஸ் ஆல்வா எடிசனாக மாற்றியது. காரணம் அந்த தாயின் கனிவு.” என்று மெய்சிலிருக்கும் பேச்சால், மொத்த அரங்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார், மாணவர் ஜா.முகமது இலியாஸ்.
“ஆசிரியர்களின் காய்ந்த பிரம்படிகளும் கண்டிப்பும் என்னை அடிக்கவில்லை செதுக்கி உள்ளது” என்ற கவிதையை காட்டி தன்பங்குக்கு தன் அணிக்கு வலு சேர்த்தார் வேதியியல் துறை மாணவர் சிபில் ஹூசைன்.
”அதெல்லாம் சரிதான். ஆசிரியர் திட்டியதால் கரூர் மாணவி எறும்பு மருந்தினை உண்டு உயிரிழந்ததை குறிப்பிட்டு, கனிவோடு நடந்து கொள்ளுங்கள் சமுதாயம் கனிவாகவே மாறும்” என ஒரு கணம் அரங்கை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தினார், மாணவர் ஷா.முகமது ஹர்ஷத்.
“ஐயா கனிவு என்பது நூடுல்ஸ் மாதிரி லேசா தான் இருக்கும். ஆனா கண்டிப்பு இடியாப்பம் மாதிரி கொஞ்சம் சிக்கலா தான் இருக்கும் ஆனா உடம்புக்கு இடியாப்பந்தாங்கயா நல்லது”னு கண்டிப்பு அணிக்கு நங்கூரம் பாய்ச்சினார், மாணவர் அ.முகமது ரியாஸ்.
முடிவு, இந்தப்பக்கமா? அந்தப்பக்கமா? என பார்வையாளர்கள் ஆளுக்கொரு பக்கமாக எதிர்பார்த்து நிற்க, ”கனிவாக மட்டுமே நடந்துகொண்டால் திண்ணையில் படுக்க வைத்து வெண்ணையை தடவிவிடுவார்கள். அதற்காக, கண்டிப்பாக மட்டுமே நடந்து கொள்ளவும் கூடாது. கனிவோடு கூடி கண்டிப்பே அனைவரிடத்திலும் தேவை” என நிறைவான கருத்தை பதிவை செய்தார் நடுவர் அ.சையது ஜாஹிர் ஹுசைன்.
செய்தித் தொகுப்பு : ஜா.முகமது இலியாஸ் மற்றும் அ.முகமது ரியாஸ்.